தென் தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதி மக்கள் திருட்டையே தொழிலாகக் கொண்டிருந்ததால் அவர்களை ‘குற்றப்பரம்பரை’ என அப்போது பிரிட்டிஷ் அரசு வகைப்படுத்தியது.
அதனால், அப்பகுதிகளிலுள்ள ஆண்கள் எல்லோரும் காவல்நிலையத்தில் தினசரி கையெழுத்திட்டாகவேண்டும்
பல்லாண்டுகள் நீடித்த இந்நிலையை பெரிய போராட்டங்களுக்குப் பிறகு மாற்றினார்கள்.
இந்த வரலாற்றுப்பின்னணியை வைத்து குற்றப்பரம்பரை என்கிற படத்தை இயக்கவிருப்பதாக பாரதிராஜா சில ஆண்டுகளாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார்.
தாரை தப்பட்டை படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலாவும் குற்றப்பரம்பரை படத்தை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் இப்படத்தை யார் இயக்குவது என்பதில் போட்டி ஏற்பட்டு அது மோதலாக மாறி இருக்கிறது.
பாலா தரப்பில் எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி கூறும்போது,’பாலாதான் குற்றப்பரம்பரை சப்ஜெட்டுக்கு உயிர் கொடுக்க முடியும். விரைவில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது’ என்றார். இதற்கு எழுத்தாளர் ரத்னகுமார் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இவர் கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, காதல் பூக்கள் போன்ற படங்களுக்கு இவர் வசனம் எழுதி உள்ளார்.கி ரத்னகுமார் கூறும்போது, ‘குற்றப்பரம்பரை படத்தை பாரதிராஜா இயக்குவது தொடர்பாக கடந்த 30 வருடமாக பேசி வருகிறோம். 1977ம் ஆண்டு இக்கதையை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருப்பதுடன்.
இதில் நடிப்பதுபற்றி அப்போதே சிவாஜி, சரத்திடம் பேசி இருக்கிறோம். சிவாஜி உடல்நிலை பாதித்ததால் படத்தை தொடங்காமலிருந்தோம். இந்த கதை விவாதத்தின்போது வேலா ராமமூர்த்தி உடனிருந்தார்.
அதற்காக அவர் இக்கதைக்கு உரிமை கொண்டாட முடியாது. பாரதிராஜாதான் இக்கதையை இயக்க பொருத்தமான நபர். இதுகுறித்து பாலாவிடம் பேச முயன்றேன்.
எந்த பதிலும் கிடைக்கவில்லை. பாலா இயக்கினால் நான் நிச்சயம் சட்டப்படி வழக்கு தொடர்வேன்’ என்று கூறியுள்ளார். பாரதிராஜாவும் பாலாவும் இதுவரை இச்சிக்கல் பற்றி எதுவும் சொல்லவில்லை.
ஆனால் இயக்குநர் பாரதிராஜா, அதிரடியாக குற்றப்பரம்பரை படத்தொடக்கவிழாவை நடத்தத் திட்டமிட்டிருக்கிறாராம். பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தை ஊரில் வைத்துத் தொடங்கிய மாதிரி இந்தப்படத்தையும் உசிலம்பட்டியில் நாளை தொடங்கவிருக்கிறார்கள்.
தொடக்கவிழாவின் போது. படத்தில் நடிக்கவிருக்கிற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்களை அறிவிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதற்காக பாரதிராஜா மற்றும் அவருக்கு ஆதரவான முப்பதுக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் உசிலம்பட்டி செல்லவிருக்கிறார்கள்.