ilakkiyainfo

இயக்குனர் பாரதிராஜா வை கடுமையாக விமர்சித்து பேசிய இயக்குனர் பாலா- வீடியோ

பாரதிராஜாவுக்கும், பாலாவுக்குமான ‘குற்றப்பரம்பரை’ பட விவகாரம் அடுத்தகட்டத்தை எட்டியிருக்கிறது. இன்று ஏழு மணிக்கு சென்னை ப்ரசாத் லேபில், பத்திரிகையாளர்களை சந்தித்த பாலா, பாரதிராஜா மற்றும் ரத்னகுமாருக்கு வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தார்.

அவர் பேசியதான் விவரம்:

“இந்த விஷயத்தில் நான் மிகவும் காயப்பட்டிருக்கிறேன். கூட்டாஞ்சோறு என்று வேல ராமமூர்த்தி எழுதிய கதை, அடுத்த பதிப்பில் குற்றப்பரம்பரை என்று வெளியானது. அந்தக் கதையின் ஒரு விஷயத்தை நான் திரைக்கதையாக்கி படமாக எடுக்கப் போகிறேன். ஆனால், பாரதிராஜா, ரத்னகுமார் கூட்டணி எடுப்பது நடந்த வரலாறு.

நீங்கள் வரலாற்றை எடுக்கிறீர்கள். நான் கதையை படமாக எடுக்கிறேன். ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை யார் வேண்டுமானாலும் படமாக எடுக்கலாம். அப்படி ஒரு விஷயத்தைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். நான் செய்வது வேறு. கதையைப் படமாக்குவது.

ஏற்கனவே இதுசம்பந்தமாக பாரதிராஜா என்னிடம் பேசியபோதே ‘நான் குற்றப்பரம்பரை வரலாற்றை படமாக எடுக்கவில்லை’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டேன்.

அதற்குப் பிறகும் பாரதிராஜா ‘என் எச்சிலை பாலா தின்னமாட்டான் என்று நினைக்கிறேன்’ என்று பேட்டி கொடுத்தார். போனவாரம் தனஞ்செயன் என்னை அழைத்து, ‘குற்றப்பரம்பரை படத்திற்கு பாரதிராஜா பூஜை போடுகிறார்’ என்று சொன்னபோதுகூட, ‘என்னை அழைத்தால் நானும் பூஜைக்கு நிச்சயம் வருவேன்’ என்றுதான் தனஞ்செயனிடம் சொன்னேன்.

அதை தனஞ்செயனும் பாரதிராஜாவிடன் சொல்லியிருக்கிறார். அதற்கு பாரதிராஜா ‘அப்படியா சொன்னான்? எனக்கு ஷாக்கா இருக்கே. எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க.. கூப்டலாமா வேணாமா’ன்னு யோசிக்கணும்’ என்று சொல்லியிருக்கிறார்.

bala2

அதற்குப் பிறகு பாரதிராஜா, தனஞ்செயனிடம் ‘பாலா அங்க வந்தா யாராவது ஏதாவது பேசி, சீன் க்ரியேட் ஆகிடும். அதுனால கூப்பிடவேண்டாம்’ என்றிருக்கிறார். ஆனால் ரத்னகுமாரோ, ‘பாலா ஷூட்டிங்குக்கு வரட்டும். வந்து ஷூ தொடைக்கட்டும்’ என்றும், ‘பாலா ஒரு கதைத் திருடன், பாலாவுக்கு ‘கூறு’ கிடையாது’ என்றெல்லாமும் பேசுகிறார்.

ரத்னகுமார் தொடர்ந்து இதுபோல என்னை அவதூறாகப் பேசுவதை, பாரதிராஜா கண்டும் காணாமல் இருப்பது அவர் இவற்றை அனுமதிப்பது போலவே தெரிகிறது.

இன்றைக்கு பாரதிராஜாவை அழைத்தேன். இரண்டு முறை எடுக்காதவர், மூன்றாவது முறை, எடுக்கிறார். ‘மூணாவது தடவையா கூப்டறான்யா’ என்கிற அவர் குரல் மட்டுமே எனக்குக் கேட்டது. கால் கட் செய்கிறார்.

இதற்கு மேலும் நான் அமைதியாக இருந்தால், மழுமட்டையாக ஆகிவிடுவேன் என்பதால்தான் இந்த ப்ரஸ் மீட்.

இரண்டு விஷயங்கள் சொல்லிக் கொள்கிறேன். அவர்கள் எடுப்பது வேறு. நான் எடுப்பது வேறு. என் படத்தின் பெயர் குற்றப்பரம்பரை அல்ல. வேறு பெயர் வைக்கப் போகிறோம்.

இரண்டாவது, இந்த ப்ரஸ்மீட்டின் மூலம், பாரதிராஜாவுக்கும் ரத்னகுமாருக்கும் எச்சரிக்கை செய்கிறேன். நீங்கள் உங்கள் படத்தை எடுங்கள். நான் என் படத்தை எடுக்கிறேன். இதற்கிடையில் என்னைக் காயப்படுத்துவது, உங்களுக்கு நல்லதல்ல. மேற்கொண்டு எதுவும் என்னைப் பற்றியோ, என் படத்தைப் பற்றியோ பேசாதீர்கள்”

சந்திப்பின்போது, தனஞ்செயனும் உடனிருந்தார்.

Exit mobile version