‘பசங்க’ படத்தில் சிறுவனாகவும் ‘கோலிசோடா’ படத்தில் சற்று வளர்ந்த பையனாகவும் நடித்த ஸ்ரீராம் இப்போது வளர்ந்து வாலிபனாகி ‘பைசா’ படத்தில் கதாநாயகனாகிவிட்டார்.
குறிப்பாக கமலுடன் பாபநாசம் படம் நடித்த பிறகு இவருக்கு மளமளவென படங்கள் வர ஆரம்பித்துவிட்டனவாம்.
முதலில் ‘பைசா’பட அனுபவம் பற்றி ஸ்ரீராம் இப்படிக் கூறுகிறார்… “இதை இயக்கியுள்ளவர் மஜீத் சார். அவர் இதற்கு முன் ‘தமிழன்’ படம் இயக்கியவர். அந்தப் படம் சமூகக் கருத்தை சொன்ன வகையில் மிகவும் பாராட்டப்பட்ட படம்.
விஜய் சாரை வைத்து ‘தமிழன்’ படம் இயக்கிய இயக்குநர் படத்தில் நானும் நடிப்பதில் பெருமை. இதில் நடித்ததை மறக்க முடியாது. இது சென்னையில் இருக்கும் குப்பைகள் மற்றும் குப்பைப் பொறுக்குபவன் பற்றிய கதை.
அதை வைத்து நல்ல சமூகக் கருத்தை சொல்லி விழிப்புணர்வு ஊட்டியிருக்கிறார் இயக்குநர். இந்தப் படத்துக்காக சென்னையில் பல குப்பை மேடுகளில் அலைந்து திரிந்து நடித்தேன்,” என்றார்.
அடுத்தடுத்த படங்கள்? சகா, தரைடிக்கெட், கபே போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். கமல் ஹாஸனுடன் பாபநாசம் படத்தில் நடித்தது பற்றி… “நான் கமல் சாரின் பரம ரசிகன்.
அவருடன் நடிக்க வாய்ப்பு வந்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரைப் பார்க்கிற வாய்ப்பு கிடைக்குமா என்று நினைத்த எனக்கு நடிக்கிற வாய்ப்பே கிடைத்தது. அவரை நான் முதலில் ‘பசங்க’ ஆடியோ விழாவில்தான் பார்த்தேன்.
எனக்கு இதை விட வேறென்ன பெருமை வேண்டும்? அவர் தந்த உற்சாகம், அவருடன் நடித்த ராசி நான் இப்போது நான்கு படங்களில் ஹீரோவாகிட்டேன்,” என்றார்.
ஸ்ரீராமின் தந்தை சிவராமகிருஷ்ணன் ஓர் உதவி இயக்குநர். அவர் ஐ.வி.சசி, பிரதாப் போத்தன், அகத்தியன் போன்ற இயக்குநர்களிடம் பணியாற்றியவர். சில விளம்பரப் படங்களையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.