சரத் பொன்சேகாவை சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமித்தமைக்காக, தன்னையும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவையும், திருக்கை வாலினால் அடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
பாரிய நிதி மோசடிகள், ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு முன்னிலையில் நேற்று நான்கு மணிநேரம் சாட்சியம் அளித்த பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோத்தாபய ராஜபக்ச மீதான குண்டுத் தாக்குதல் அனுதாபத்தைத் தேடுவதற்காக, அவராலேயே திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று, நாடாளுமன்றத்தில் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கோத்தாபய ராஜபக்ச,
“இது தெளிவான நிலையில் இல்லாத ஒருவரின் கேலிக்குரிய அறிக்கை.
இந்தச் சம்பவம் தொடர்பாக அரசதரப்பினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அப்படியிருக்கையில் இதுபோன்ற அறிக்கைகளை அவர் எவ்வாறு நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் வெளியிட முடியும்?
எனது பாதுகாப்புக்கு குண்டுதுளைக்காத காரைப் பயன்படுத்தியிருந்தேன். குண்டுதுளைக்காத கார்கள், துப்பாக்கி மற்றும் கைக்குண்டு வெடிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையிலேயே தயாரிக்கப்பட்டவை.
30 கிலோ சி-4 குண்டை வெடிக்க வைத்து எனது நான் ஆபத்தை விலைக்கு வாங்குவேனா?
என்னைச் சுற்றி எப்போதும் பாதுகாப்புப் படையினர் இருக்கின்ற நிலையில், எவ்வாறு நான் ஒரு தற்கொலைப் போராளிக்கு என் மீதே தாக்குதல் நடத்துவதற்கு யாருக்கும் தெரியாமல் பயிற்சி கொடுக்க முடியும்?
முன்னாள் இராணுவத் தளபதி தனது முட்டாள்தனத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவரை இராணுவத் தளபதியாக நியமித்தமைக்காக, என்னையும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவையும், திருக்கை வாலினால் அடிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.