ஐரோப்பிய ஒன்றியத்துடனான பல தசாப்த கால பிணைப்பை துண்டித்து தனக்கென புதிய பாதையில் சுதந்திரமாக பயணத்தைத் தொடர காத்திருக்கும் பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேஸா மே பதவியேற்றுள்ளார்.
அந்நாடு சவால்கள் பலவற்றை எதிர்கொண்டுள்ள நெருக்கடியான தருணத்தில் நாட்டை வழி நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள அவரது அடுத்த கட்ட அரசியல் நகர்வு எவ்வாறு இருக்கும் என்பதை பிரித்தானிய மக்கள் மட்டுமல்லாது முழு உலகமுமே அவதானித்துக் கொண்டிருக்கிறது.
பிரித்தானியாவின் இரண்டாவது பெண் பிரதமராக பதவியேற்றுள்ள அவர், அந்நாட்டின் முதல் பெண் பிரதமரான இரும்புப் பெண்மணி என வர்ணிக்கப்படும் மார்க்ரெட் தட்சர் போன்று தனது கட்சியையும் நாட்டையும் வெற்றிகரமாக வழிநடத்திச் செல்வாரா என்ற யதார்த்தமான கேள்விக்கு விடை காண அனைவரும் காத்திருக்கின்றனர்.
சர்வதேச ரீதியில் அதிக பிரபலத்தை பெற்றுத்தராத உள்துறை செயலாளர் பதவியை வகித்த போதும், குடியேற்றவாசிகள் தொடர்பான தனது சர்ச்சைக்குரிய கடும்போக்குக் கொள்கைகளால் உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ஒருவராக தெரேஸா மே விளங்குகிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவதற்கு ஆதரவாக பிரித்தானிய மக்கள் வாக்களித்ததையடுத்து, அந்நாட்டில் ஏற்பட்ட அரசியல் பூகம்ப நிலையின் தொடர்ச்சியாகவே தெரேஸா மேயின் பிரதமர் பதவி நியமனம் இடம்பெற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா தொடர்ந்து இணைந்திருப்பதற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்த பிரதமர் டேவிட் கமரோன் சர்வஜன வாக்கெடுப்பிலான தோல்வியையடுத்து பதவி விலகுவதாக அதிரடி அறிவிப்பைச் செய்தார்.
இந்நிலையில் அவரது பழைமைவாத கட்சி உறுப்பினர்கள் தமது கட்சிக்கும் நாட்டுக்குமான தலைவரை தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகினர்.
தொடர்ந்து கடந்த 5 ஆம் திகதி கட்சி உறுப்பினரிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தெரேஸா மே 165 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று பெருமளவு வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்தைப் பெற்றார்.
அந்த வாக்கெடுப்பில் அவரது போட்டி வேட்பாளர்களான அன்ட்றி லீட்ஸம் 66 வாக்குகளையும் மைக்கேல் கோவ் 48 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
இதனையடுத்து கடந்த 7 ஆம் திகதி நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் போட்டி வேட்பாளர்களின் எண்ணிக்கை இரண்டாகக் குறைக்கப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் தெரேஸா மே 199 வாக்குகளையும் அன்ட்றி லீட்ஸம் 84 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
அதே சமயம் 46 வாக்குகளைப் பெற்ற மைக்கேல் கோவ் போட்டியிலிருந்து ஒதுங்க நேர்ந்தது.
இந்நிலையில் மேற்படி போட்டியில் வெற்றி பெற்று பிரமதராக தெரிவு செய்யப்படுபவர் யார் என்பது எதிர்வரும் செப்டெம்பர் 9 ஆம் திகதியே அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
தெரேஸா மேயைப் பொறுத்தவரை அவர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்த ஒருவராவார்.
அதேசமயம் அன்ட்றியா லீட்ஸம் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவதற்கு ஆதரவளித்து வந்திருந்தார்.
இதன் காரணமாக பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரியும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தெரேஸா மே பொருத்தமான ஒருவராக அமைவாரா என்ற கேள்வியை அவரது எதிர்ப்பாளர்கள் எழுப்பினர்.
இத்தகைய சூழ்நிலையில் ஆரம்பக்கட்ட வாக்கெடுப்புகளில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தெரேஸா மேயின் அரசியல் எதிர்காலம் எதிர்மறையாக திசை திரும்புவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.
ஆனால் அவரது போட்டி வேட்பாளரான அன்ட்றியா லீட்ஸமின் அரசியல் வியூகமற்ற கருத்து வெளிப்பாடுகள், அவரை போட்டி வேட்பாளர் என்ற நிலையிலிருந்து கீழிறக்கியது என்று கூறலாம்.
அன்ட்றியா லீட்ஸம் ஊடகமொன்றுக்கு அண்மையில் அளித்த பேட்டியில், தெரேஸா மே பிள்ளைகள் அற்றவர் என்பதை காரணம் காட்டி அவர் பிரதமர் பதவிக்கு பொருத்தமற்றவர் என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கருத்தை வெளிப்படுத்தியிருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அதன் போது லீட்ஸம், தான் தாயொருவராக இருப்பது உள்துறை செயலாளரான தெரேஸா மேயை விடவும் தன்னை பிரதமர் பதவிக்கும் பொருத்தமான வேட்பாளராக்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
Theresa May (left) and Andrea Leadsom
தனது கருத்து வெளிப்பாடுகளால் எழுந்த சர்ச்சையையடுத்து கடந்த 11 ஆம் திகதி திங்கட்கிழமை பிரதமர் பதவிக்கான போட்டியிலிருந்து ஒதுங்குவதாக அன்ட்றியா லீட்ஸம் திடீர் அறிவிப்பு செய்தார்.
இதன்போது அவர், பிரித்தானியா எதிர்கொண்டுள்ள மிகவும் நெருக்கடியான தருணத்தில் நாட்டின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கு சுமார் 9 வார காலம் காத்திருப்பது விரும்பத்தக்கதல்ல என்பதால் புதிய தலைவர் ஒருவரை உடனடியாக தெரிவு செய்வதற்கு வழியேற்படுத்தித் தரும் வகையில் தான் பதவி விலகுவதாக குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் தன்னுடைய பொறுப்பற்ற விமர்சனத்துக்காக அவர் தெரேஸா மேயிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.
அன்ட்றியா லீட்ஸமின் அறிவிப்பையடுத்து டேவிட் கமரோன் உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து விலகி தெரேஸா மேயிடம் அதிகாரத்தைக் கையளித்துள்ளார்.
புதிய பிரதமராக பதவியேற்ற தெரேஸா மே, தனது உரையின் போது அனைவருக்குமான நாட்டைக் கட்டியெழுப்ப உறுதியளித்துள்ளார்.
நீண்ட காலக் கனவு
தெரேஸா மேயை (59 வயது) பொறுத்தவரை வல்லரசு நாடொன்றின் பிரதமர் என்ற அதி உயர் பதவி அவர் ஒரு இரவில் அதிர்ஷ்டத்தால் அடைந்த பதவியல்ல.
நாட்டின் பெண் பிரதமராக பதவியேற்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியம் அவரது மனதில் நீண்ட காலமாக வேரூன்றியிருந்ததாக அவரது பல்கலைக்கழக நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கிலாந்து திருச்சபையைச் சேர்ந்த மதபோதகரான ஹுபேர்ட் பிரெய்ஸர் மற்றும் ஸெய்டி மேரி ஆகியோருக்கு ஒரேயொரு பிள்ளையாக பிறந்த தெரேஸா மே, ஆரம்ப கால கட்டத்தில் இங்கிலாந்து வங்கி மற்றும் கட்டண தீர்ப்பனவு சேவைகள் சங்கம் என்பவற்றில் பணியாற்றியிருந்தார். அத்துடன் நகர சபை உறுப்பினராகவும் அவர் சேவையாற்றியுள்ளார்.
1992 ஆம் ஆண்டில் பாராளுமன்ற ஆசனத்துக்கு போட்டியிட்ட அவர் படுதோல்வியைத் தழுவினார்.
எனினும் மனம் தளராது தொடர்ந்து முயற்சியை முன்னெடுத்த அவர் 1997 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.
இந்நிலையில் பல்வேறு நிழல் அமைச்சுப் பதவிகளை வகித்த தெரேஸா மே, 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதையடுத்து உள்துறை செயலாளராக பதவி நியமனம் பெற்றார்.
அந்தப் பதவியில் 6 வருட காலம் சேவையாற்றி பிரித்தானியாவின் அண்மைக்கால வரலாற்றில் உள்துறை செயலாளராக அதிக காலம் சேவையாற்றிய அரசியல்வாதி என்ற பெயரைப் பெற்றார்.
இறுதியில் தனது இலட்சியக் கனவான பிரதமர் பதவியை அவர் அடைந்துள்ளார்.
குடியேற்றக் கொள்கை
தெரேஸா மே உள்துறை செயலாளர் என்ற வகையில் குடியேற்றங்கள் தொடர்பில் கடும் போக்கைக் கொண்டு விளங்கினார்.
பிரித்தானியாவிலுள்ள குடியேற்றவாசிகள் மேலதிகமாக 18,600 ஸ்ரேலிங் பவுணை வருமானமாக ஈட்டினால் மட்டுமே தமது வாழ்க்கைத் துணையையும் பிள்ளைகளையும் பிரித்தானியாவுக்கு வரவழைக்க அனுமதிக்கும் நடைமுறை உள்ளடங்கலான நடவடிக்கைகள் மூலம் நாட்டுக்குள் பிரவேசிக்கும் குடியேற்றவாசிகளைக் குறைக்கும் முயற்சியில் தெரேஸா மே ஈடுபட்டார்.
2012 ஆம் ஆண்டு மேற்படி குடியேற்றவாசிகளின் குறைந்தபட்ச வருமானம் தொடர்பான தேவைப்பாட்டை வலியுறுத்தும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டதிலிருந்து அதனால் சுமார் 15,000 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வொன்று கூறுகிறது.
தமது வாழ்க்கைத் துணையையும் பிள்ளைகளையும் பிரித்தானியாவுக்கு அழைத்து வருவதற்கு தேவையான பணத்தை உழைப்பதற்கோ பெறுவதற்கோ முடியாது பலரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக மிடில் லெஸக்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து குடியேற்றவாசிகள் நலன்களுக்கான சபை மேற்கொண்ட இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மேற்படி விதியை நடைமுறைப்படுத்தியதன் மூலம் தெரேஸா மே, குடும்ப மீள் இணைப்பு செல்வந்தர்களுக்கு மட்டுமேயான சிறப்புரிமை என்ற நிலையைத் தோற்றுவித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
அத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் தெரேஸா மேயினது அலுவலகம் பிரித்தானியாவில் 10 வருடங்களுக்கும் குறைந்த காலம் வாழ்பவர்கள் அந்நாட்டில் நிரந்தரமாக குடியேறுவதற்கான உரிமையைப் பெற வருடமொன்றுக்கு குறைந்தது 35,000 ஸ்ரேலிங் பவுணை வருமானமாக பெற வேண்டும் என்ற தேவைப்பாட்டை நடைமுறைப்படுத்தியிருந்தது.
இதில் மருத்துவத்தாதி தொழில் உள்ளடங்கலான சில தொழில்களுக்கு மட்டுமே விதிவிலக்களிக்கப்பட்டிருந்தது.
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக வரும் குடியேற்றவாசிகளை நாடு கடத்துவதற்கு ஐரோப்பிய மனித உரிமைகள் உடன்படிக்கை தடையாகவுள்ளதால் அந்த உடன்படிக்கையிலிருந்து பிரித்தானியா வாபஸ் பெறுவதற்கான சர்ச்சைக்குரிய நகர்வை முன்னெடுக்கும் தனது திட்டம் குறித்து தெரேஸா மே கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தார்.
தெரேஸா மேயின் குடியேற்றவாசிகள் தொடர்பான கடும்போக்கு நடவடிக்கைக்கு உதாரணமாக, இஸ்லாமிய மதகுருவான அபு கதாடாவை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்துடன் போராடி ஜோர்தானுக்கு நாடு கடத்திய விவகாரம் கூறப்படுகிறது.
இதன் மூலம் அபு கதாடாவை பிரித்தானியாவிலிருந்து வெளியேற்ற முன்னெடுக்கப்பட்டிருந்த 10 வருட கால சட்டப் போராட்டத்தை அவர் முடிவுக்கு கொண்டு வந்தார்.
இதன்போது ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் அபு கதாடாவை ஜோர்தானுக்கு நாடு கடத்துவது, அவர் அந்நாட்டில் சித்திரவதைக்கு உள்ளாகுவதற்கு வழிவகை செய்வதாக உள்ளதாக எச்சரித்திருந்தது.
ஐரோப்பிய மனித உரிமைகள் உடன்படிக்கையிலிருந்து வாபஸ் பெறுவது தொடர்பான தெரேஸா மேயின் யோசனை, வட அயர்லாந்தில் சமாதானத்தைக் கொண்டு வந்த ‘குட் பிறைடே’ உடன்படிக்கையை மீறுவதாக உள்ளது என குற்றஞ்சாட்டப்படுகிறது…
ஐரோப்பிய மனித உரிமைகள் உடன்படிக்கையிலிருந்து விலகியிருக்க தெரேஸா மே திட்டமிட்டிருந்த போதும், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா இணைந்திருப்பதற்கு ஆதரவாகவே பிரசாரம் செய்துவந்துள்ளார்.
‘பிறிக்ஸிட்’ தொடர்பான நிலைப்பாடு
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஆதரவளித்து இடம்பெற்ற ‘பிறிக்ஸிட்’ வாக்கெடுப்பின் கருத்து ‘பிறிக்ஸிட்’ என்பதே என குறிப்பிட்டுள்ள தெரேஸா மே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து விலகலை உரிய முறைப்படி மேற்கொள்வதற்கு ஏற்கனவே உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் அவரால் புதிதாக ஸ்தாபிக்கப்படும் அமைச்சரவை நியமனங்களில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவதற்கு ஆதரவளித்தவர்களை நியமனம் செய்வதற்கு அவரது கட்சியைச் சேர்ந்த ‘பிறிக்ஸிட்’ ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் பெண் அரசியல்வாதி என்ற வகையில் அவரது அமைச்சரவையில் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களில் இதுவரையில் இல்லாத வகையில் பெருமளவில் பெண்கள் நியமனம் பெறுவார்கள் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
பிரித்தானிய தேசிய ஆவணக் காப்பகத்திலிருந்து 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி வெளியான ஆவணங்களின் பிரகாரம், அந்நாட்டின் முதல் பெண் பிரதமரான மார்க்ரெட் தட்சர் பதவியேற்றவுடன், பிரித்தானியாவில் அளவுக்கதிகமான ஆசிய குடியேற்றவாசிகள் இருப்பதாக தனிப்பட்ட முறையில் முறைப்பாடு செய்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி தகவல்கள் மார்க்ரெட் தட்சரின் இனம், குடியேற்றம் மற்றும் அரசியல் ரீதியான திரைமறைவான மனோபாவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில் பிரித்தானியாவின் புதிய பிரதமரான தெரேஸா மேயின் குடியேற்றவாசிகள் தொடர்பான கடும்போக்குக் கொள்கைகள், மார்க்ரெட் தட்சரின் குடியேற்றவாசிகள் தொடர்பான மனோபாவத்துடன் மாறுபட்டிருக்கவில்லை என்பது கண்கூடு.
தெரேஸா மே, மார்க்ரெட் தட்சரைப் போன்று முக்கிய அரசியல் தீர்மானங்களை எடுப்பதில் உறுதிப்பாட்டுடன் இருக்கின்றாரோ இல்லையோ, குடியேற்றவாசிகள் விடயத்தில் அவரை விடவும் திடசித்தமுள்ள இரும்புப் பெண்மணியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியேற்றவாசிகளின் அளவுக்கதிகமான வருகையால் முகஞ் சுளித்துக் கொண்டிருக்கும் பிரித்தானிய பிரஜைகள் பலரைப் பொறுத்தவரை தெரேஸா மேயின் குடியேற்றவாசிகள் தொடர்பான திட்டங்கள் வரவேற்புக்குரியவைகளாக இருக்கலாம். ஆனால் மனிதாபிமான அடிப்படையில் அவரது திட்டங்கள் கேள்விக்குரியவையாகும்.
சொந்த நாட்டில் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளாகி வரும் அகதிகளுக்கு இடமளிக்க மறுப்பது, அதை மீறி வருபவர்களுக்கு பலவகையிலும் அழுத்தம் கொடுத்து அவர்களை பிரித்தானியாவை விட்டு வெளியேறத் தூண்டுவது என்பன சர்வதேச மனிதாபிமான கொள்கைகளுக்கு முரண்பாடான செயற்பாடுகளாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிவது தொடர்பான பொதுமக்களின் எதிர்பார்ப்பை ஏற்றுக் கொண்டு தனது எதிரான நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொண்டது போன்று குடியேற்றவாசிகள் விவகாரத்திலும் தனது கடும்போக்கை அவர் எதிர்காலத்தில் தளர்த்திக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-ஆர்.ஹஸ்தனி-