இந்தப் பாதயாத்திரைக்கு முன்னின்று பணியாற்றிய முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சூழலில், மஹிந்த ராஜபக் ஷ நேரடியாகவே களத்தில் இறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்னர், மஹிந்த ராஜபக் ஷ ஒரு கூட்டத்தில் பேசிய போது, இந்த ஆட்சியைக் கவிழ்ப்பது ஒன்றும் கடினமான காரியமில்லை என்று கூறியிருந்தார்.
ஆட்சிக்கவிழ்ப்புக்கான முயற்சிகளில் மஹிந்த ராஜபக் ஷ இப்போதே இறங்கி விட்டார் என்பதையே அவர் இவ்வாறு குறிப்பிட்டமை உணர்த்தி நிற்கிறது.
நிழல் அமைச்சரவை என்ற ஆயுதம் ஆரம்பத்திலேயே பிசுபிசுத்துப் போய் விட்ட நிலையில், அரசாங்கத்துக்கு எதிரான அடுத்த ஆயுதமாக, பாதயாத்திரையை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ.
வரும் 28ஆம் திகதி கண்டியில் இருந்து, கொழும்பு நோக்கி நடத்தப்படவுள்ள இந்த ஐந்து நாள் பாதயாத்திரையை அவ்வளவு சாதாரணமான விடயமாக எடுத்துக் கொள்ள முடியாது.
பண்டா- -செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராக, ஜே.ஆர். ஜெயவர்தன கண்டி நோக்கி நடத்திய பாதயாத்திரைக்கு இது சற்றும் சளைத்ததாக இருக்கப் போவதில்லை.
ஜே.ஆரின் பாத யாத்திரை, பண்டா --செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்துப் போட வைத்தது.
மஹிந்த ராஜபக் ஷ இப்போது நடத்தப் போகின்ற பாதயாத்திரை, அரசாங்கத்துக்கு எதிரானதாக மட்டுமன்றி, அரசாங்கத்தின் நகர்வுகளை முடக்கும் நோக்கத்தைக் கொண்டதாகவும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் பாதயாத்திரைக்கு முன்னின்று பணியாற்றிய முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சூழலில், மஹிந்த ராஜபக் ஷ நேரடியாகவே களத்தில் இறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்னர், மஹிந்த ராஜபக் ஷ ஒரு கூட்டத்தில் பேசிய போது, இந்த ஆட்சியைக் கவிழ்ப்பது ஒன்றும் கடினமான காரியமில்லை என்று கூறியிருந்தார்.
ஆட்சிக்கவிழ்ப்புக்கான முயற்சிகளில் மஹிந்த ராஜபக் ஷ இப்போதே இறங்கி விட்டார் என்பதையே அவர் இவ்வாறு குறிப்பிட்டமை உணர்த்தி நிற்கிறது.
அதுமாத்திரமன்றி, அரசாங்கத்தை முடக்குகின்ற ஒரு மூலோபாயத்தையும் மஹிந்த ராஜபக் ஷ தரப்பு கையாளத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, சர்வதேச சமூகத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்ட விடயங்களை நிறைவேற்ற விடாமல் தடுப்பது இந்த உத்தியின் முதல் அம்சமாக கருதப்படுகிறது.
கடந்தவாரம் மஹிந்த ராஜபக் ஷ ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். காணாமற்போனோருக்கான செயலகம் தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கை அது.
படையினரைப் பழிவாங்குவதற்காகவே, இந்த செயலகம் உருவாக்கப்படவுள்ளதாக மஹிந்த ராஜபக் ஷ அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
காணாமற்போனோருக்கான செயலகத்தை உருவாக்குவது தொடர்பான சட்டத்திருத்தம் ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கும் நிலையில் தான், அதற்கு ஆப்பு வைக்கும் வகையில் மஹிந்த ராஜபக் ஷவின் இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது.
இந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்றத் துணைபோகும் பாராளுமன்ற உறுப்பினர்கள், நாட்டையும், படையினரையும் காட்டிக் கொடுத்ததற்கான பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.
இது அரசாங்கத்தில் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களைக் குழப்புகின்ற- அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்ற செய்தி மாத்திரமல்ல.
படையினரைத் தண்டிப்பதற்காக அரசாங்கம் தயாராகி வருகிறது என்ற செய்தியை, சிங்கள மக்களுக்கும் இந்த அறிக்கை மூலம் அவர் சொல்ல முற்பட்டிருக்கிறார்.
காணாமற்போனோருக்கான செயலகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரியளவில் நன்மை தரும் ஒன்றாக இருக்காது என்று, மனித உரிமைகள் சட்டத்தரணி இரத்தினவேல் போன்றவர்கள் கருத்து வெளியிட்டுள்ள நிலையில், சர்வதேச சமூகம் இதனை பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்கும் பொறிமுறையின் ஒரு கட்டமாகவே பார்க்கின்றது என்பதை மறந்து விட முடியாது.
காணாமற்போனோர் தொடர்பான செயலகத்தை உருவாக்க அரசாங்கம் எடுத்துள்ள முயற்சியை பொறுப்புக்கூறலுக்கான ஒரு முதல்படி என்பதை பல்வேறு நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அதனைக் குழப்புவதையே மஹிந்த ராஜபக் ஷ இப்போது தனது இலக்காக மாற்றியுள்ளார் போலத் தெரிகிறது.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், படையினர் பாதிக்கப்படுவார்கள், பழிவாங்கப்படுவார்கள் என்ற மஹிந்த ராஜபக் ஷ தொடுதுள்ள போரின் அடிப்படை நோக்கம், படையினரைப் பாதுகாப்பதோ அவர்கள் மீது கொண்டுள்ள அக்கறையோ அல்ல.
இந்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் தடுப்பதன் மூலம், சர்வதேச சமூகத்துக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாத நிலைக்கு இலங்கை அரசாங்கத்தை தள்ள முடியும் என்றும், தன் மீது வஞ்சம் கொண்டுள்ள சர்வதேச சமூகத்துக்கு பதிலடி கொடுப்பதாகவும் அமையும் என்று மஹிந்த ராஜபக் ஷ நினைக்கிறார்.
அண்மையில் கூட எதற்காக தன்னை மேற்குலகம் பழிவாங்குகிறது என்று தெரியவில்லை என்று ஆதங்கப்பட்டிருந்தார் மஹிந்த ராஜபக் ஷ.
ஜனாதிபதித் தேர்தலில் மாத்திரமன்றி, அதற்குப் பின்னரும் அரசியலில் தன்னைத் தலையெடுக்க விடாமல் மேற்குலகம் சதி செய்வதாகவே மஹிந்த ராஜபக் ஷ கருதுகிறார்.
இதனால் தான் தற்போதைய அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையில் உள்ள நெருக்கத்தை உடைப்பதற்கான ஒரு ஆயுதமாக இந்த விவகாரத்தை மாற்றுவதற்கு முயற்சிக்கிறார் மஹிந்த.
வேறு சில புறக்காரணிகள் இருந்தாலும், தற்போதைய அரசாங்கம் கொடுத்துள்ள வாக்குறுதிகள் தான் சர்வதேச சமூகம், அதற்குப் பின்னால் நிற்பதற்குக் காரணம். இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று சர்வதேசம் நம்புகிறது.
அந்த நம்பிக்கை உடைக்கப்பட்டு விட்டால், சர்வதேச சமூகத்தினால், இந்த அரசாங்கத்துக்கு இருந்து வரும் பாதுகாப்பு கவசம் உடைந்து விடும் என்று மஹிந்த ராஜபக் ஷ கணக்குப் போடுகிறார்.
ஏற்கனவே அரசியலமைப்புத் திருத்த விவகாரம் உள்ளிட்ட விடயங்களை நிறைவேற்ற விடாமல் தடுக்க முயன்று தோல்வியடைந்திருந்தார் மஹிந்த.
அவை மஹிந்தவின் தனிப்பட்ட அரசியல் நலன்களுடன் அதிகளவில் பின்னிப் பிணைந்திருந்த விடயங்களாக இருந்ததால், அரசாங்கத்துக்கு எதிராக அவரால் போதியளவு பாராளுமன்ற உறுப்பினர்களை அணிதிரட்ட முடியவில்லை.
ஆனால் காணாமற்போனோர் செயலகம் தொடர்பான சட்டமூலம், மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறைகளை உருவாக்கும் விடயங்கள் என்பன இலட்சக்கணக்கான சிங்கள மக்களின் உணர்வுகளையும் தொடக்கூடியவையாக இருக்கின்றன.
எனவே, அரசதரப்பில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை இதற்கு எதிராக அணி திரட்டுவதில், கூடுதல் வெற்றி தனக்குக் கிடைக்கும் என்று மஹிந்த ராஜபக் ஷ கருதக் கூடும்.
அரசதரப்பில் இருக்கும் தனது முன்னாள் விசுவாசிகளை அசைத்துப் பார்க்க வேண்டும் என்றால், சிங்கள மக்கள் மத்தியில் ஒருவித உணர்வுப் பிரவாகத்தை ஏற்படுத்தியாக வேண்டும் என்று அவர் கணக்குப் போட்டிருக்கிறார்.
அவர் இப்போது நடத்தவுள்ள பாதயாத்திரை அதற்கானது தான். இந்தப் பாதயாத்திரை சுமுகமாக நடைபெறுமா – குழப்பங்கள் விளைவிக்கப்படுமா என்று தெரியாது.
கண்டியை நோக்கி ஜே.ஆர். தொடங்கிய பாத யாத்திரை கூட கண்டியைச் சென்றடைய முன்னரே, கம்பஹாவில் உள்ள, இம்புல்கொடவில் எஸ்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான குழுவினரால் இடைவழியில் குழப்பப்பட்டது.
அதுபோன்று குழப்பங்கள் நடக்குமேயானால், மஹிந்த ராஜபக் ஷவுக்கு இன்னும் ஆதரவு அதிகரிக்கலாம். அவர் போடுகின்ற கணக்கு இலகுவாக நிறைவேறலாம்.
ஏனென்றால், கூடுதல் பரபரப்பையும் அதிக கொந்தளிப்பையும் அது சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்.
சிங்கள மக்களின் உணர்ச்சிகள் தான் இப்போது மஹிந்த ராஜபக் ஷ அணியினருக்கு முக்கியமான ஆயுதமாக மாறியிருக்கிறது. அதனைக் கிளறி விடுவதற்காக அவர்கள் எதையும் செய்யக் கூடும். எந்தளவுக்கும் செல்லக் கூடும்.
சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் வலுவாக எழுந்தால், அதன் பிரதிபலிப்பு, பாராளுமன்றத்தில் கூட எதிரொலிக்கும்.
அவ்வாறான ஒரு திட்டத்துடன் தான், காணாமற்போனோர் செயலகம் தொடர்பான சட்டமூலத்தைத் தோற்கடிக்க கங்கணம் கட்டியிருக்கிறார் மஹிந்த.
இது மட்டும் நடக்குமேயானால், சர்வதேச அரங்கில் அரசாங்கம் நெருக்கடியைச் சந்திப்பதுடன், பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசு என்ற முத்திரையும் குத்தப்படும்.
அது மாத்திரமன்றி, வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு என்ற பெயர் நிரந்தரமானதாகி, உள்நாட்டில் தமிழ் மக்களின் ஆதரவையும் அரசாங்கம் இழக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகும்.
எனவே, மஹிந்த ராஜபக் ஷவின் பாதயாத்திரை அவ்வளவு ஒன்றும் சுலபமாக கணிக்கக் கூடிய ஒன்றாக தென்படவில்லை.
இந்த விடயத்தை அரசாங்கம் சரியாக கையாளத் தவறினால், கடுமையான நெருக்கடிமிக்க சூழல் ஒன்றுக்குள் சிக்கிக் கொள்ள நேரிடலாம்.
-சத்ரியன்-