அம்பாறை மாவட்டத்தின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ ரீதியில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஜீப் வாகனமொன்றை மீள கையளிக்காமை தொடர்பிலேயே அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (28) குறித்த ஜீப் வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொடியப்பு ஹாமி பியசேன, கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
பின்னர், அவ்வருடம் செப்டெம்பர் மாதமளவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டார்.
பின்னர் இறுதியாக 2015 இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐ.ம.சு.மு. சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிந்திய செய்தி
கடந்த அரசாங்க காலத்தில், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திகாமடுல்லை தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேனவுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 02 வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தால் வழங்கப்பட்ட குறித்த வாகனத்தை மீள வழங்காது, முறையற்ற ரீதியில் பயன்படுத்தியதாக தெரிவித்தே அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.