கடல் வழி வர்த்­தகம் ஆரம்­பிக்­கப்­பட்ட காலத்தில் தொடங்­கப்­பட்ட துறை­மு­கங்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான போர், தற்­கா­லத்தில் புதிய வடி­வத்தை எடுத்­தி­ருக்­கி­றது.

உல­கெங்கும் உள்ள முக்­கி­ய­மான துறை­மு­கங்­களை நேர­டி­யா­கவே தமது கடற்­படைத் தள­மாக மாற்றிக் கொள்­வதில் இருந்து, அவற்றின் செயற்­பா­டு­களை மறை­மு­க­மாகக் கட்­டுப்­ப­டுத்­து­வது வரை- பல்­வேறு உத்­தி­களில் இந்த விடயம் கையா­ளப்­ப­டு­கி­றது.

முன்­னரைப் போன்று திடீ­ரெனப் படை­யெ­டுத்துச் சென்று துறை­மு­கங்­களைக் கைப்­பற்றும் வழக்கம் தற்­போது இல்­லா­வி­டினும், நேரடியா­கவே கடற்­படைத் தளங்­களை அமைத்துக் கட்­டுப்­ப­டுத்தும் வழக்கம் குறைந்து கொண்டு வரு­கின்ற போதிலும், துறைமுகங்களின் கட்­டுப்­பாட்டை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வது என்­பது பிர­தான நாடு­களின் தேவை­யா­கவே இன்றும் இருந்து வரு­கி­றது.

இதற்­கென இப்­போது நாடுகள் வர்த்­தக ரீதி­யான உடன்­பா­டு­களைச் செய்து கொள்­கின்­றன. துறை­முக அபி­வி­ருத்தி என்ற பெயரில், தமது செல்­வாக்கைச் செலுத்த முனை­கின்­றன.

துறை­முக அபி­வி­ருத்தி என்ற பெயரில், இலங்­கையின் முக்­கி­ய­மான துறை­மு­கங்­களைக் கட்­டுப்­ப­டுத்தும் முயற்­சி­களில் பல்­வேறு நாடுகள் ஈடு­பட்­டி­ருக்­கின்­றன.

திரு­கோ­ண­மலைத் துறை­முகம், எப்­போ­துமே இந்­தியா, அமெ­ரிக்கா, சீனா உள்­ளிட்ட பல நாடு­க­ளுக்கு உறுத்­து­கின்ற ஒன்­றா­கவே இருந்து வரு­கி­றது.

அது­போ­லவே, கொழும்பு, அம்­பாந்­தோட்டை, காலி துறை­மு­கங்­களும் பல்­வேறு நாடு­க­ளி­னதும் கவ­னிப்­புக்­கு­ரி­ய­வை­யா­கவே இருந்து வரு­கின்­றன. இந்­தி­யா­வுக்கு, தனக்கு மிக அருகில் உள்ள காங்­கே­சன்­துறை துறை­முகம் மீது ஒரு குறி இருந்து கொண்­டுதான் இருக்கிறது.

இந்த நிலையில், அண்­மையில், சீன வெளி­வி­வ­கார அமைச்சர் வாங் யி இலங்­கைக்கு மேற்­கொண்­டி­ருந்த பய­ணத்தின் போது, இலங்கையை கப்பல் போக்­கு­வ­ரத்துக் கேந்­தி­ர­மாக மாற்­று­வ­தற்கு சீனா உதவத் தயா­ராக இருக்­கி­றது என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

இலங்­கையின் துறை­மு­கங்­களின் அபி­வி­ருத்தி மீது சீனா­வுக்கு உள்ள ஈடு­பாட்டை இது வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அதே­வேளை, அம்­பாந்­தோட்டை துறை­முகம் மற்றும் அதன் அயல் பகு­தியை, சீனாவின் உத­வி­யு­டனும், காலியை அமெ­ரிக்க உதவியுடனும், கொழும்பு மற்றும் திரு­கோ­ண­மலைத் துறை­மு­கங்­களை சிங்­கப்­பூரின் உத­வி­யு­டனும் அபி­வி­ருத்தி செய்யும் முயற்சிகளில் அர­சாங்கம் ஈடு­பட்­டுள்­ளது.

ஜா-எல வரை கொழும்புத் துறை­மு­கத்தை விரி­வு­ப­டுத்தி, தெற்­கா­சி­யாவின் மிகப்­பெ­ரிய துறை­மு­க­மாக மாற்­று­வதே தமது திட்டம் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருந்தார்.

ஏற்­க­னவே கொழும்புத் துறை­மு­கத்தில் ஒரு கொள்­கலன் இறங்­கு­து­றையை அபி­வி­ருத்தி செய்து இயக்கி வரு­கி­றது சீனா.

அதே­வேளை, கொழும்புத் துறை­மு­கத்தின் கொள்­க­லன்­களின் பாது­காப்பு மற்றும் ஆய்வு நட­வ­டிக்­கை­க­ளுக்­கான தொழில்­நுட்ப உதவிகளை அமெரிக்கா வழங்கி வரு­கி­றது.

இதனை மேலும் விரி­வாக்கும் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கி­றது. கொழும்புத் துறை­மு­க­மா­னது, பொருட்­களைக் கையா­ள்வதில், உலகின் 30ஆவது இடத்தில் இருக்­கின்­றது.

சிங்­கப்பூர், டுபாய் ஆகிய பிர­தான துறை­மு­கங்­க­ளுக்கு இடையில்- பிர­தான கப்பல் போக்­கு­வ­ரத்து மார்க்­கத்தில் கொழும்புத் துறை­முகம் இருப்­பதுதான் இதற்கு அதிக பலத்­தையும், சர்­வ­தேச கவ­னத்­தையும் கொடுத்­தி­ருக்­கி­றது.

hh

கொழும்புத் துறை­மு­கத்தின் வளர்ச்­சிக்கு, கிழக்கு மேற்கு கப்பல் பாதையில் ஆழம் மிகுந்த துறை­மு­க­மாக இருப்­பது மட்டும் காரணமல்ல.

அகண்டு பரந்த இந்­தி­யாவின், சரக்குக் கப்­பல்கள் கையாளும் 60 வீத­மான கொள்­க­லன்கள் கொழும்புத் துறை­முகம் வழி­யா­கவே பரிமாற்றம் செய்­யப்­ப­டு­வதும் அதற்கு முக்­கி­ய­மான ஒரு காரணம்.

நீண்ட கட­லோரப் பகு­தியைக் கொண்ட இந்­தியா, தனது நாட்­டுக்குள் கொள்­க­லன்­களை கப்பல் மூலம், அனுப்­பு­வ­தற்குக் கூட கொழும்புத் துறை­மு­கத்­தைத்தான் பயன்­ப­டுத்­து­கின்­றது. கப்பல் போக்­கு­வ­ரத்தில் இந்­தி­யாவின் பல­வீ­ன­மான ஒரு அம்­ச­மா­கவே இது பார்க்கப்படுகிறது.

கொழும்புத் துறை­மு­கத்தை சீனா தனது கைக்குள் போடு­வ­தற்­கான முயற்­சி­களில் இறங்­கிய பின்­னர்தான், தனது கொள்­கலன் போக்குவ­ரத்து ஆபத்து ஒன்றை எதிர்­கொண்­டி­ருப்­பதை இந்­தியா உணரத் தொடங்­கி­யது.

இத­னால்தான் இப்­போது, தமிழ்­நாட்டின் கடைக் கோடியில், நாகர்­கோ­வி­லுக்கு அருகில் உள்ள குளைச்­ச­லுக்கு அருகே, இனயம் என்ற இடத்தில், பாரிய துறை­முகம் ஒன்றை அமைக்கும் திட்­டங்­களை இந்­தியா ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.

28 ஆயிரம் கோடி ரூபா செலவில், மூன்று கட்­டங்­க­ளாக இந்த பாரிய துறை­மு­கத்தை அமைக்க இந்­தியா திட்­ட­மிட்­டுள்­ளது. இதற்­காக 500 ஏக்கர் நிலம் கடலில் இருந்து மீட்­கப்­ப­ட­வுள்­ளது.

குளச்சல் இந்­தி­யாவின் முக்­கி­ய­மா­ன­தொரு இயற்கைத் துறை­முகம். பல நூற்­றாண்­டு­க­ளா­கவே இதன் முக்­கி­யத்­துவம் வெளிநாட்டவர்களால் உண­ரப்­பட்­டி­ருந்­தது. டச்சுப் படைகள் முதன் முத­லாக அர­பிக்­கடல் வழி­யாக இந்­தி­யாவில் காலடி எடுத்து வைத்தது இங்­குதான்.

கொழும்புத் துறை­மு­கத்­துக்கு மிக அரு­கா­கவே அமையப் போகின்ற இனயம் துறை­முகம், சர்­வ­தேச கடற்­பா­தையில் இருந்து வெறும் 4 கடல் மைல் துரத்­தில்தான் இருக்­கி­றது.

இந்த துறை­மு­கத்தை அமைப்­பதன் மூலம், இந்­தியக் கப்­பல்கள் உள்­நாட்­டுக்குள் கொள்­க­லன்­களை மாற்றிக் கொள்ளும் வச­திகள் கிடைக்கும், அதனால் ஆண்­டுக்கு 1500 கோடி ரூபாவை மிச்­சப்­ப­டுத்­தலாம் என்­கி­றது இந்­தியா.

இனயம் துறை­மு­கத்­திட்­டத்தை, இந்­தியா தனது பொரு­ளா­தார நலனை மாத்­திரம் அடிப்­ப­டை­யாக கொண்டு முன்­னெ­டுக்­க­வில்லை. அதற்கும் அப்பால், கொழும்புத் துறை­மு­கத்தின் மீது அதி­க­ரித்து வரும் சர்­வ­தேச கவ­னமும் தான் காரணம்.

கொழும்புத் துறை­மு­க­மா­னது அமெ­ரிக்கா, சீனா என்று பல்­வேறு நாடு­களின் செல்­வாக்­கிற்­குட்­பட்ட பகு­தி­யாக மாறி­வரும் நிலையில், அதன் முக்­கி­யத்­து­வத்தை குறைப்­ப­தற்கு இந்­தியா முனை­கி­றது.

கொழும்புத் துறை­முக நக­ரத்­திட்­டத்தை இந்­தி­யாவின் எதிர்ப்­பையும் பொருட்­ப­டுத்­தாமல், இலங்கை அர­சாங்கம் முன்­னெ­டுக்க முயன்­றதன் ஒரு நேரடி விளை­வாகக் கூட, இந்த இனயம் துறை­முகத் திட்­டத்தைக் குறிப்­பி­டலாம்.

கொழும்பு மாத்­தி­ர­மன்றி, இலங்­கையின் ஏனைய துறை­மு­கங்­களின் மீது அதி­க­ரித்து வரும் சர்­வ­தேச கவ­னமும் தலை­யீ­டு­களும் இந்தியாவை கவலை கொள்­ளவும் கரி­சனை கொள்­ளவும் வைத்­தி­ருக்­கி­றது.

அண்­மையில் சிங்­கப்­பூரில் ஊடகம் ஒன்­றுக்கு அளித்­தி­ருந்த பேட்­டியில் இலங்­கையில் சீனாவின் முத­லீ­டுகள் குறித்து யாரும் அஞ்ச வேண்­டி­ய­தில்லை என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யி­ருந்தார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இந்த கருத்து, சீனாவின் குர­லைத்தான் பிர­தி­ப­லித்­தி­ருந்­தது.

அது­மட்­டு­மன்றி, எந்­த­நாட்டுப் போர்க்­கப்­பல்­களும் விநி­யோகத் தேவைக்­காக இலங்கைத் துறை­மு­கத்­துக்கு வந்து செல்­லலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

சீன நீர்மூழ்கிகள் இரண்டு தடவைகள் கொழும்புத் துறைமுகம் வந்து சென்றமை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எற்படுத்திய விசனத்தை தெரிந்து கொண்டே அவர் இதனைக் கூறியிருக்கிறார்.

சீனாவின் துணையுடன், இலங்கையின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது என்பதையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தக் கருத்து உணர்த்தி நிற்கிறது.

இதனால்தான், கொழும்புத் துறைமுகத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியிருக்கிறது.

பொருளாதார நலன்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இது கொழும்பின் மீது நேரடித் தாக்கம் ஒன்றை செலுத்தப் போகும் விடயமாகவே இருக்கும் என்றே நம்பப்படுகிறது.

-சத்­ரியன்

Share.
Leave A Reply