சர்க்கரை-பாலுறவு: சிலகேள்விகள்
நமது செக்ஸ் வாழ்க்கைக்கு மன ரீதியாகவும் , உடல் ரீதியாகவும் பல எதிரிகள் இருக்கிறார்கள். உடல் அடிப்படையிலான எதிரிகளில் மிக முக்கியானது சர்க்கரை நோய்.
இந்த நோய்க்கு ஆளானவர்களின் செக்ஸ் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக , முதல் வகை மற்றும் இரண்டாம் வகை சர்க்கரை நோயால் சுமார் ஐம்பது சதவீத ஆண்களும் , இருபத்தைந்து சதவீதப் பெண்களும் பாலுறவுக் குறைகளுக்கு ஆளாகிறார்கள்.
அதில் பாலுறவில் ஆசை இல்லாமல் போவதும் ஒன்று.
பாலுறவுக் குறைபாட்டுக்கு சர்க்கரைதான் காரணம் என்பது தெரியாமல் போவதால் , தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வழியே இல்லாமல் போய்விடுகிறது.
செக்ஸில் ஆர்வமின்மை, இயலாமை காரணமாக உளவியல் ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்பட்டு வாழ்க்கையே நரகமாகிவிடுகிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்களில் மிகக் குறுகிய சதவீதத்தினர்தான் , தங்களின் செக்ஸ் குறைபாட்டுக்கான காரணத்தை உணர்ந்து மருத்துவர்களை நாடுகிறார்கள்.
அப்படி வருபவர்கள் கேட்கும் சில பொதுவான – முக்கியமான கேள்விகளும் , அவற்றுக்கான பதில்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
சர்க்கரை நோய் எப்படி செக்ஸ் பிரச்னைகளை உண்டாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்தப் பதில்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு எத்தகைய செக்ஸ் பிரச்னைகள் உண்டாகின்றன ?
ஆணுறுப்புக்குச் செல்லும் ரத்த நாளங்கள் மிகச் சிறியவை.
சர்க்கரை நோயால் இவை சுருங்கி , சிதைந்து கடுமையாகச் சேதமடைகின்றன.
இதனால் விறைப்பு இல்லாமை , விந்து முந்துதல் , செக்ஸ் உணர்ச்சிக் குறைதல் மற்றும் விந்தணுக்களில் குறைபாடுகள் போன்ற பிரச்னைகள் ஆண்களுக்கு ஏற்படுகின்றன.
பிறப்புறுப்பை வழவழப்பாக வைத்துக்கொள்ளும் யோனிச் சுரப்பு நீர் குறைந்து பிறப்புறுப்பு வறண்டுவிடுதல், பிறப்புறுப்புப் பகுதியில் நோய்த்தொற்று , ஹார்மோன்களில் குறைபாடுகள் அல்லது மாறுபாடுகள் போன்ற பல பிரச்னைகள் பெண்களுக்குத் தோன்றுகின்றன.
சர்க்கரை நோய் மட்டும்தான் செக்ஸ் சார்ந்த பாதிப்புக்குக் காரணமா ? வேறு என்ன பிரச்னைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் ?
சர்க்கரை நோயாளிகள் நிறைய பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். விறைப்பில்லா நிலையைவிட இளைஞர்களுக்கு வேறு சில பிரச்னைகள் அதிகக் கவலை தரக்கூடியதாக உள்ளன.
மன இறுக்கம் மற்றும் வேறு பல காரணிகள் ஆரோக்கியமான பாலியல் நலனைப் பாதிக்கின்றன. விறைப்புத்தன்மையை உண்டாக்கும் உடலியல் செயல்பாடுகளைச் சர்க்கரை நோய் எதிர்த்தொழிக்கிறது.
உண்மையில் சர்க்கரை நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆண்மைக் குறைவால் பாதிக்கப்படுகிறார்கள்.
நரம்புத் தளர்ச்சியால் வரும் ஆண்மைக் குறைவு எனக் கருதப்படும் பிரச்னையைக் காட்டிலும் இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கிறது. இருந்தபோதிலும் இது சிகிச்சைக்குக் கட்டுப்படுவது மிகக் குறைவே.
விறைப்புத்தன்மை இல்லாத நிலைக்கு எப்படி சர்க்கரை நோய் வழி வகுக்கிறது ?
சர்க்கரை நோய் பல்வேறு பிரச்னைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஆனால் , இரண்டு பிரச்னைகள்தான் விறைப்புத்தன்மையில்லாத நிலையுடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ளன.
முதல் பிரச்னை , நரம்பு சார்ந்தது.
இதில் உடலில் உள்ள எல்லா நரம்புகளும் அதாவது ஆணுறுப்புக்குச் செல்லும் நரம்புகள் உள்பட அனைத்துமே பாதிக்கப்படுகின்றன.
நரம்பில் ஏற்படும் பாதிப்பால் இயல்பாக விறைப்புத்தன்மை அடைய முடியாமல் அதற்கான செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.
இரண்டாவது பிரச்னை , ரத்த நாளங்கள் குறுகுவது தொடர்பானது.
சர்க்கரை நோய் உள்ள அனைவருக்குமே இந்தப் பாதிப்பு பொதுவாக இருக்கும்.
கூடவே , இதய நோய்கள் , போதுமான ரத்த ஓட்டமின்மை , ஆணுறுப்பின் உள்ளேயும் வெளியேயும் சரியான ரத்த ஓட்டம் இல்லாத நிலை போன்றவற்றை உண்டாக்கும்.
இவை இரண்டும் சேர்வதால் சர்க்கரை நோயின் விளைவுகள் ஆண்களின் விறைப்புத் தன்மையைக் கடுமையாகப் பாதித்துவிடுகின்றன.
சர்க்கரை நோய் இருப்பதால் எனக்கு விறைப்புத்தன்மை ஏற்படவில்லை என நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் , எனக்கு இருப்பதைப்போலவே சர்க்கரை நோயுடன் உள்ள இன்னொரு நபருக்கு இத்தகைய பிரச்னைகள் இல்லையே , ஏன் ? காரணம் என்னவென்றால் , அவர் தனது ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டிருப்பார்.
தற்போது ரத்தச் சர்க்கரை அளவை கண்டறிவதற்கான பல்வேறு சாதனங்கள் நடைமுறையில் இருக்கின்றன. இவற்றின் உதவியைக் கொண்டு அவ்வப்போது ரத்தச் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
அதிகமாக இருந்தால் இயல்பான நிலைக்கு வருமாறு பார்த்துக்கொள்ளலாம்.
டைப் – 1 நீரிழிவு நோயாளிகளுக்கு இத்தகைய பிரச்னைகள் அதிகம்.
இவர்கள் தங்களது ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு இன்சுலின் ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். ரத்தச் சர்க்கரை அளவு குறைந்துவிடும்போது கோமா நிலைக்குக்கூட போய்விடுவார்கள்.
இதைத் தவிர்க்க எப்போதும் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் அதாவது இயல்பான நிலையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
இத்தகைய பிரச்னை உள்ளவர்கள் உணவு முறையில் அதிக கவனம் செலுத்தவேண்டும். சராசரியாக தினமும் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.
வயதானவர்களாக இருந்தால் ஆறு மணி நேர உறக்கம்கூட போதுமானது. எடை அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது அல்லது விளையாட்டில் ஈடுபடலாம். நமது வேலையை நாமே பார்த்துக்கொண்டால் சர்க்கரை நோயின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
– டாக்டர் டி. காமராஜ்
‘சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள்’!! – டாக்டர் டி. காமராஜ்
கண் பிரச்சனைகள், காயம் ஏன் ஆறுவதில்லை?? (சக்கரை நோய் ஏன் வருகிறது?-பகுதி-3)