அமெரிக்காவில் தனியார் விடுதி ஒன்று அழகாக இருப்பவர்களுக்கு மட்டுமே தங்கள் விடுதியில் அனுமதிக்கப்படுவார்கள் என விசித்திர விளம்பரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரில் அமையவுள்ள கிளப் ஒன்று தங்களின் சேவையை பெற வேண்டும் என்றால் அழகாக இருத்தல் முக்கியம் என்று விளம்பரம் செய்து வருகின்றது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படவிருக்கும் இந்த விடுதியானது தங்களது வாடிக்கையாளர்கள் அனைவரும் 10 பொருத்தமும் ஒருசேர பெற்றவர்களாக இருக்க வேண்டும், அதிக உடல் எடை கொண்டவர்கள், அழகற்றவர்கள் என எவரையும் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
உலகில் அனைத்து பொருத்தமும் ஒருசேர பெற்றவர்கள் மட்டுமே ஒன்று கூடும் தலமாக இந்த விடுதி விளங்க உள்ளது அதனாலையே இந்த கட்டுப்பாடு எனவும் அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கிளப்பில் உறுப்பினராக வேண்டும் என்றால் முதலில் அவர்களது இணைய பக்கத்தில் குறிப்பிட்ட படிவத்தை தரவிறக்கம் செய்து, பின்னர் விண்ணப்பதாரர் தனது முழு நீள புகைப்படத்துடன் குறித்த நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதனையடுத்து தெரிவு செய்யப்பட்ட மனு மீது அடுத்தகட்ட நேர்முக தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள். இதில் தெரிவானால் பின்னர் ஏற்கனவே தெரிவான உறுப்பினர்களுடன் கலந்துரையாடலாம், ஏன் அங்கிருந்து வாழ்க்கைத்துணையை கூட தெரிவு செய்யலாம் என்கிறது இந்த விசித்திர கிளப்.
இந்த கிளப்பின் நிறுவனர் கிரேக் ஹாட்ஜ் கூறும்போது, குறித்த விளம்பரத்தால் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது. ஆனால் அவை அனைத்துமே எங்களது நோக்கத்தை சிறிதளவும் பாதிக்கவில்லை என்றார்.