அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், அழகுராணிப் போட்டிகளை நடத்தியபோது, அழகுராணிப் போட்டியாளர்களான யுவதிகள் ஆடை மாற்றும் அறையில் நிர்வாணமாக இருக்கும் வேளைகளிலும் அந்த அறைக்குள் நுழைவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என இப்போட்டிகளில் பங்குபற்றிய யுவதிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, அழகுராணிகள் ஆடைகள் மாற்றும் அறைக்குள் நுழைவதற்கான தனது ஆற்றல் குறித்து டொனால்ட் ட்ரம்ப் பெருமையாக பேசும் ஒலிப்பதிவும் வெளியாகியுள்ளது.
70 வயதான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் களத்தில் பேசிய பேச்சுகள் அவருக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளன.
அதேவேளை அவரின் கடந்த கால பேச்சுகள், நடத்தைகளும் தற்போது அவருக்கு வில்லங்கமாக மாறி வருகின்றன. பெண்களைக்கவர்வது தொடர்பாக 2005 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த மோசமான கருத்துக்கள் அண்மையில் வெளியானதையடுத்து, சொந்த குடியரசுக் கட்சியின் பிரமுகர்கள் பலர் டொனால்ட் ட்ரம்புக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன் பலர் தமது ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அழகுராணி போட்டியாளர்கள் ஆடை மாற்றி கொண்டிருக்கும் அறைகளிலும் டொனால்ட் ட்ரம்ப் நுழைவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மிஸ் யூனிவர்ஸ் (பிரபஞ்ச அழகுராணி), மிஸ் யூ.எஸ்.ஏ. மற்றும் பதின்மர் பருவத்தினருக்கான மிஸ் டீன் யூ.எஸ்.ஏ. அழகுராணிப் போட்டிகளை நடத்தும் உரிமையை 1996 முதல் 2015 ஆம் ஆண்டுவரை டொனால்ட் ட்ரம்ப் கொண்டிருந்தார்.
இந்த உரிமையைப் பயன்படுத்தி, அழகுராணிப் போட்டியாளர்களின் ஆடை மாற்றும் அறைக்குள்ளும் டொனால்ட் ட்ரம்ப் நுழைந்தார் என 1997 ஆம் ஆண்டு மிஸ் டீன் யூ.எஸ்.ஏ. அழகுராணி போட்டிகளில் பங்குபற்றியவர்களில் நால்வர் தெரிவித்துள்ளனர்.
அவ் வேளையில் மேற்படி போட்டிகளில் பங்குபற்றிய சிலர் 15 வயதானவர்களாக இருந்தனர் எனவும் கூறப்படுகிறது.
ஆடை மாற்றும் அறைக்குள் ஆண் ஒருவர் (டொனால்ட் ட்ரம்ப்) வந்ததைக் கண்ட அதிர்ச்சியில் தான் மிக விரைவாக ஆடையை அணிந்துகொண்டமை தனக்கு நினைவில் உள்ளதாக மெரியா பிலாடோ எனும் யுவதி தெரிவித்துள்ளார்.
இவர் மிஸ் வேர்மன்ட் டீன் யூ.எஸ்.ஏ. அழகுராணியாக முடிசூட்டப்பட்டிருந்தவர். இதேவேளை, மேலும் 3 யுவதிகளும் டொனால்ட் ட்ரம்ப்பின் இந் நடத்தை தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர். ஆனால், தம்மை இனங்காட்டிக்கொள்வதை அவர்கள் விரும்பவில்லை.
மிஸ் யூ.எஸ்.ஏ. போட்டியில் வெற்றி பெறுபவர்களே அமெரிக்காவின் சார்பில் மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2000 ஆம்ஆண்டு மிஸ் யூ.எஸ்.ஏ. போட்டிகள் நடந்தபோது போட்டியாளர்களான யுவதிகள் ஆடை மாற்றிக்கொண்டிருந்த அறைக்குள் டொனால்ட் ட்ரம்ப் வந்தார் என நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தின் முன்னாள் அழகுராணியான பிரிஜெட் சுலீவன் சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
கடந்த மே மாதம், டெனால்ட் ட்ரம்பின் பிரசாரக் குழுவினர் இத் தகவலை நிராகரித்திருந்தனர். பிரிஜெட் சுலீவனும் ஏனைய அழகுராணிகளும் கூறும் இத் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என அவர்கள் கூறினர்.
எனினும், அழகுராணிப் போட்டியாளர்கள் ஆடை மாற்றிக் கொண்டிருக்கும் போதே அங்கு செல்லக்கூடிய ஒரே ஆண் தானே என டொனால்ட் ட்ரம்ப் பெருமையடித்துக் கொண்டுள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது.
2005 ஏப்ரல் மாதம் ஹோவார்ட் ஸ்டேர்ன் என்பவருடனான நேர்காணலின்போது, தனது ஆற்றல் குறித்து டொனல்ட் ட்ரம்ப் பெருமையயாக பேசியிருந்தார். அப்போது பதிவுசெய்யப்பட்ட ஒலி நாடாவை அமெரிக்காவின் சி.என்.என். தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது.
‘வேடிக்கையான விடயம் ஒன்றை நான் கூறுகிறேன். ஷோ நடப்பதற்கு முன் னால் அனைவரும் ஆடை மாற்றிக்கொண்டிருக்கும் போது நான் அங்கு செல்வேன். எங்குமே இப்டியான இடங்களுக்கு ஆண்கள் எவரும் செல்ல முடியாது.
ஆனால், இப் போட்டிகளின் உரிமையாளர் நான் என்பதால், நான் அங்கு சென்று எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்வையிடுவேன். அங்கு சிலர் ஆடை எதுவும் அணியாமலும் இருப்பார்கள்’ என டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.