விஜய் சேதுபதியும், டி.ராஜேந்தரும் இணைந்து குத்தாட்டம் போடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் இணைந்து தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் கதாநாயகியாக மடோனா செபஸ்டியான் நடித்து வருகிறார். இவர் ஏற்கெனவே விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் நடித்தவர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் குத்தாட்ட பாடல் ஒன்றுக்கு விஜய் சேதுபதியும், டி.ராஜேந்தரும் இணைந்து குத்தாட்டம் போடவிருக்கிறார்களாம்.
இரண்டு பேருமே குத்தாட்டத்திற்கு பெயர் பெற்றவர்கள்தான். இரண்டு பேர் கூட்டணியில் அமையும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
இப்படத்தை ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்நிறுவனம் கடைசியாக தயாரித்த ‘தனிஒருவன்’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் படத்தில் விஜய் சேதுபதியின் சகோதரி
விஜய் சேதுபதியின் சகோதரி ஒருவர் விஜய் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் தற்போது ‘பைரவா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். பரதன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
மேலும், டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், ஜெகபதி பாபு, ஹரிஷ் உத்தமன், பேபி மோனிகா, சதிஷ், அபர்ணா வினோத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது இன்னொரு நடிகையும் இப்படத்தில் இணையவிருக்கிறார். ‘கோழிக்கூவுது’, ‘மாதவனும் மலர்விழியும்’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்த சிஜா ரோஸ், சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘றெக்க’ படத்தில் அவருக்கு அக்கா போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர், தற்போது விஜய்யின் ‘பைரவா’ படத்திலும் நடிக்கவுள்ளார். சிஜா ரோஸ் தமிழ் தவிர நிறைய மலையாள படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பைரவா’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.