தமிழக அரசின் இணையதளப் பக்கங்கள் மர்மநபர்களால் முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பாகிஸ்தான் ஹேக்கர்களின் சதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தமிழக அரசின் அதிகாரப்பூர் இணையதளம் www.tn.gov.in ஆகும்.
இதில்இ தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள், மாநில அரசு குறித்து முக்கிய தகவல்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த இணையதளத்தை மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர். இதனால் முக்கிய பக்கங்கள் சிலவற்றை மக்களால் பார்க்க இயலவில்லை.
ஹேக் செய்யப்பட்டுள்ள பக்கங்கள் பச்சை நிறத்தில் காட்சி அளித்தன. அதோடு, அவற்றில் PAK CYBER SKULLZ என்ற சொற்களும் இடம்பெற்றிருந்தது. இதனால், தமிழக அரசின் இணையதளப் பக்கங்களை பாகிஸ்தான் ஹேக்கர்கள் முடக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இம்மாத தொடக்கத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதன் எதிரொலியாகவே இந்தியாவின் முக்கிய இணையதளங்களை பாகிஸ்தான் ஹேக்கர்கள் முடக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே தேசிய பசுமை தீர்பாயத்தின் இணையதளம், கேரளாவைச் சேர்ந்த கல்லூரி ஒன்றின் இணையதளம், கர்நாடகா போலீஸ் இணையதளம் மற்றும் மும்பை அரசு சட்டக் கல்லூரி இணையதளம் ஆகியவை பாகிஸ்தான் ஆதரவு ஹேக்கர்களால் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்தப் பட்டியலில் தமிழக அரசின் இணையதளமும் இணைந்துள்ளது. இந்த இணையதளத்திலுள்ள முக்கிய தகவல்கள் திருடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இணையதளத்தை சீர்செய்யும் பணி தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.