படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலே போதும் எப்பேர்பட்ட தடங்கலையும் தகர்த்துவிட்டு பள்ளிக்குச் சென்று படிக்கலாம் என நிரூபித்து வருகிறார்கள், சீனாவைச் சேர்ந்த சிறுவர்கள்.
தென்கிழக்குச் சீனாவின் சிசுவான் மாகாணத்தில் உள்ள மலைப் பகுதியில் 2,624 அடி உயரத்தில் அமைந்துள்ளது Atule’er கிராமம். இங்கு சுமார் 72 குடும்பங்கள் வசித்துவருகின்றன.
இவர்களுக்குத் தொழில் விவசாயம். எல்லோரும் மிளகாய் பயிரிட்டு வருகிறார்கள்.
இந்தக் கிராமத்தை வெளி உலகுடன் தொடர்புகொள்ளச் செய்ய உதவுகிறது, இரும்பு ஏணி.
தாங்கள் பயிரிட்ட மிளகாயை சந்தைக்குக் கொண்டுசெல்லவும் இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் இந்த இரும்பு ஏணி மூலம்தான் கீழே இறங்கிச் செல்ல வேண்டியுள்ளது.
இதற்குமுன் கிராமத்து மக்கள் வெளி ஊர்களுக்குச் செல்ல, மூங்கில் ஏணிகள் மூலமே கீழே இறங்கிச் சென்றுகொண்டிருந்தனர். ஏணியில் இறங்கும்போது, சில நேரம் தவறி விழுந்து, பலர் உயிரிழந்துள்ளார்கள்.
பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக கிராமத்து மக்களே தற்போது 1,500 இரும்புப் பைப்களால் ஆன ஏணியால் பாதை உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம் மலைக் கிராமத்து மக்கள் கீழேயும் மேலேயும் சென்று வர, சுமார் இரண்டு மணி நேரம் ஆகிறது.
15 குழந்தைகள் இங்கிருந்து Zhaojue மாவட்டத்தில் உள்ள பள்ளிக்குச் சென்று வருகிறார்கள். மாணவர்கள் கீழே இறங்கும்போதும் ஏறும்போதும் கூடவே பாதுகாப்புக்கு பெற்றோர்களும் செல்கிறார்கள்.
தினமும் இந்த ஆபத்தான பாதையைக் கடக்கமுடியாததால், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், பள்ளியிலேயே தங்கிவிட்டு, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறைதான் வீட்டுக்கு வருகிறார்கள்.
இந்த மாணவர்கள் 6 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். இப்படி ஆபத்தான நிலையில் கிராமத்து மக்கள் மற்றும் குழந்தைகள் கீழே இறங்கி ஏறவேண்டியுள்ளது.
மலை உச்சியில் இருக்கும் இந்த கிராமத்துக்கு சாலை அமைக்க சீன அரசாங்கம் திட்டம் தீட்டியது. ஆனால், சாலை அமைக்க செலவு அதிகம் என்பதாலும், குறைவான மங்கள்தொகையே இருப்பதாலும் சாலை அமைக்கும் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
இவ்வளவு ரிஸ்க் எடுத்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் பாராட்டவேண்டும்.
இதேபோன்று மற்ற ஊர்களிலும் ஆபத்தான சூழ்நிலைகளைக் கடந்து பள்ளிக்குச் சென்றுவருகிறார்கள். அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை ‘க்ளிக்’ பண்ணுங்கள்.