யாழ்.குடாநாட்டில் ஆயுதங்களுடன் நடமாடுவதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் குழு யாழ்.குடா நாட்டில் உண்மையிலேயே செயற்படவில்லை என்றும் இந்தக் குழு தொடர்பாக தென்பகுதியிலுள்ள ஊடகங்களுக்கு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளே தகவல்களை வழங்குவதாக தெரியவந்துள்ளதெனவும் “ராவய” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் யாழ்.சுன்னாகம் பிரதேசத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாமே ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து “ஆவா” குழு வெளியிட்டதாகக் கூறப்படும் துண்டுப் பிரசுரம் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் மாத்திரமே கிடைத்துள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்களப் பத்திரிகைகள் சிலவற்றிற்கு இத்துண்டுப்பிரசுரத்தை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளே வழங்கியிருந்ததாகவும் சில பத்திரிகைகள் துண்டுப் பிரசுரம் தொடர்பான செய்தியை பாதுகாப்பு பிரிவினரை மேற்கோள் காட்டியே வெளியிட்டிருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.