அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வய்ப்பு அதிகமிருப்பதாக கருதப்பட்டு வந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மீதான ஆதரவு கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை முக்கிய வேட்பாளர்களிடையே அதிகாரபூர்வமாக நடத்தப்பட்ட 3 விவாதங்களிலும் தனது தனித்திறமையாலும் வாதத்தினாலும் வெற்றிபெற்று மக்கள் ஆதரவை பெருவாரியாக குவித்து வந்தார் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன்.
ஆனால் இந்த நிலையில் தற்போது கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது கிளிண்டன் அணி. இளைஞர்கள் மத்தியில் பெரும் செல்வாக்குடன் வலம் வந்த ஹிலாரி தற்போது சிறுகச்சிறுக அவர்களின் ஆதரவையும் இழந்து வருவதாக சமீபத்திய புள்ளி விபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
கடந்த இரண்டு வாரங்களில் நடந்தேறிய சம்பவங்களும், மின்னஞ்சல் விவகாரமும் ஹிலாரிக்கு இளந்தலைமுறையினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.18-34 வயதுக்கு உட்பட்டவர்களிடையே ஹிலாரிக்கு இருந்த 68 விழுக்காடு ஆதரவானது 6 புள்ளிகள் சரிந்து தற்போது 62 புள்ளிகளில் எட்டியுள்ளது.
பேர்னி சாண்டர்ஸ் மற்றும் ஜனாதிபதி ஒபாமா ஆகியோரின் பிரச்சாரங்கள் இளந்தலைமுறையினரிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் மூலம் 36 விழுக்காடு இளைஞர்கள் ஹிலாரிக்கு வாக்களிக்க முன்வந்தனர். அதேப்போன்று சாண்டரை ஆதரிக்கும் இளைஞர்களில் 43 விழுக்காட்டினர் ஹிலாரியை சாண்டர்ஸ் ஆதரிப்பது இந்த தேர்தலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இது இப்படி இருக்க, குடியரசு கட்சி வேட்பாளரான ட்ரம்பை இளந்தலைமுறையினர்களில் 21 விழுக்காட்டினர் மட்டுமே ஆதரித்து வந்தனர். மட்டுமின்றி இவரது வாக்குறுதிகள் எதுவும் இளைஞர்களை சென்றடையவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆனால் கருப்பின இளைஞர்கள் மற்றும் லத்தீன் வாக்காளர்களிடையே பெரும் செல்வாக்கை பெற்றுள்ளார் ஹிலாரி கிளிண்டன். ட்ரம்பை பொறுத்த மட்டில் கருப்பின இளந்தலைமுறையினரின் ஆதரவு வெறும் 6 விழுக்காடு மட்டுமே உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.