தீபாவளியை குடிமக்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அதனால் டாஸ்மாக் நிறுவனத்திற்கு 2 நாட்களில் ரூ 243 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
தமிழகத்தில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளின் மூலம் தினசரி சராசரியாக, 68 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது. இதுவே ஞாயிறு உள்ளிட்ட விசேஷ நாளில், 95 கோடி ரூபாய் வரை மதுபானங்கள் விற்கும்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையான நேற்றும் அதற்கும் முதல் நாளும் என கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 243 கோடி ரூபாய்க்கு மதுமானங்கள் டாஸ்மாக் கடைகளில் விற்றுத் தீர்ந்துள்ளன. அதாவது கடந்த 28ம் தேதி மட்டும் 108 கோடி ரூபாயும், 29ம் தேதி 135 கோடி ரூபாயும் மது விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 11.2 சதவீதம் கூடுதல் என்று டாஸ்மாக் தெரிவித்துள்ளது.
2014ம் ஆண்டு தீபாவளி பண்டிகை நாளில் 142 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்தது. தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளில், 100 கோடி ரூபாய்க்கும் தீபாவளியன்று 142 கோடிக்கும் என மொத்தம் 342 கோடிக்கு மது விற்பனை நடந்தது.
அதே போன்று 2015ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது தீபாவளி பண்டிகை நாளில், 200 கோடி ரூபாய்க்கும், அதற்கு முந்திய நாள், 150 கோடி ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.