ஐ.நா. கட்டடத்தில் தீபாவளி வாழ்த்து தீபம் ஏற்றப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக இந்த ஆண்டு தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது.
ஐ.நாவில் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்த புகைப்படத்தை இந்திய தூதர் சையத் அக்பரூதீன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த டுவிட்டரில் ஐ.நா. பொது சபை தலைவர் பீட்டர் தாம்சனுக்கு நன்றியும் கூறியுள்ளார் சையத்.
மேலும், ஐ.நா. சபை முதல் முறையாக தீபாவளியை கொண்டாடுகிறது என்றும் அதற்கு ஐ. நா. சபை தலைவரின் முயற்சிக்கு நன்றி என்றும் மற்றொரு டுவிட்டரில் சையத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. தலைமையக கட்டிடத்தில் முதல் முறையாக தீபாவளி வாழ்த்து அடங்கிய விளக்கு ஏற்றப்பட்டது.
இது நாளை வரை அந்தக் கட்டிடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும். ஐ.நா. பொதுசபையில் தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொள்ளும் வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்துதான் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு உள்ளது.
மேலும், தீபாவளி நாளில் ஐ.நா. சபை கூட்டங்களை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், அந்த நாளை கூட்டம் நடைபெறாத நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.