சுவிஸ் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரத்தை வழங்க, அந்நாடு ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
கறுப்பு பணம் மற்றும் கள்ள பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இந்தியாவில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதயைடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர். மேலும் புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் டெல்லியில் மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் சுசில் சந்திராவும், இந்தியாவுக்கான சுவிட்சர்லாந்து துணைத் தலைமை தூதரக அதிகாரி ஜில்லெஸ் ரூதுயித்தும் நேற்று டெல்லியில் சந்தித்து பேசினர்.
அப்போது இரு நாடுகளுக்கும் இடையே வங்கி கணக்கு வைத்திருப்போர் பற்றிய தகவல்களை தானாக பரிமாறிக் கொள்வது பற்றிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாக, சுவிஸ் வங்கிகளில் சேமிப்பு வைத்துள்ள இந்தியர்களின் விவரம் படிப்படியாக இந்திய அரசுக்கு வழங்கப்படும் என்று சுவிஸ் அரசு கூறியுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு உதவும் வகையில், இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக, அந்நாடு குறிப்பிட்டுள்ளது. எனினும், 2018-ம் ஆண்டுக்கு முந்தைய வங்கி கணக்குகள் பற்றி இரு நாடுகளும் தகவல்களை பரிமாறிக் கொள்வது குறித்து அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.