Site icon ilakkiyainfo

சபரிமலை அய்யப்பன் கோவில் பெயர் மாற்றத்துக்கு கேரள அரசு எதிர்ப்பு !!

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலின் பெயர், ‘ஸ்ரீசாஸ்தா’ என்று இருந்ததை ‘ஸ்ரீஅய்யப்ப சுவாமி’ என்று திருவாங்கூர் தேவஸ்தானம் அதிரடியாக மாற்றியது. இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தேவஸ்தானத்தின் இந்த முடிவுக்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கோவிலின் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை ஊடகங்கள் மூலமாகவே அறிந்து கொண்டேன். திருவாங்கூர் தேவஸ்தானத்தின் இந்த பெயர் மாற்ற அறிவிப்பு அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது சட்டத்தை மீறிய செயல். இதுதொடர்பாக அரசிடம் எந்தவித ஒப்புதலும் பெறவில்லை. பிரசித்தி பெற்ற இந்த ஆலயம் 1,800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெரிய பழமையான கோவிலாகும். இதுவரை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

கோவிலின் பெயரை ரகசியமாக மாற்ற திருவாங்கூர் தேவஸ்தானத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதுகுறித்து தேவஸ்தான தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக சபரிமலை தந்திரியிடம் கூட ஆலோசனை நடத்தப்படவில்லை. பந்தளம் அரண்மனை குடும்பத்தினரும் பெயர் மாற்றத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் இவ்வாறு மந்திரி தெரிவித்தார்.

Exit mobile version