கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணத்தை ஒழிப்பதற்காக 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தவுடன், பல கோடி மக்களுடன் புனேவைச் சேர்ந்த நிதி ஆலோசகர் அனில் போகிலும் மகிழ்ச்சியில் திளைத்தார். தற்போது, அவர் கொடுத்த ஐடியாக்களில் மோடி இரண்டை மட்டும் எடுத்துக்கொண்டதாக அதிருப்தியில் உள்ளார். கடந்த 16 வருடங்களாக அனில் போகிலும் அவரது குழுவினரும் நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகப் பல முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றனர். அவற்றை ஒழிப்பதற்கான ஐடியாக்களுடன் நாட்டில் உள்ள முக்கிய அமைச்சர்கள், மத்திய வங்கி அதிகாரிகள், மதத் தலைவர்கள் முதலியவர்களைச் சந்தித்து தங்களது முயற்சிகளுக்கு ஆதரவு கேட்டனர்.
அப்படித்தான் கடந்த ஜூலை மாதம், பிரதமர் மோடியை இரண்டு நிமிடங்கள் சந்தித்து… கறுப்புப் பண ஒழிப்புக்கான ஐடியாக்களை அனில் போகில் தெரிவித்துள்ளார். அவர், சொன்ன ஐடியாக்களில் முக்கியமான ஒன்று… அதிக மதிப்புள்ள 1,000, 500 ரூபாய் நோட்டுகளை ஒழிப்பதாகும். அவருடைய ஐடியாக்களால் ஈர்க்கப்பட்ட மோடி, அந்தச் சந்திப்பை மேலும் இரண்டு மணி நேரங்களுக்கு நீட்டித்தார். இது, நடந்து நான்கு மாதங்கள் கழித்து 1,000, 500 ரூபாய் நோட்டுகளுக்கு மோடி தடைவிதித்தார்.
‘‘முழுமையாக வரவேற்க முடியாது!’’
தற்போது பணத்துக்காக மக்கள், வங்கிகளிலும்… ஏ.டி.எம்-களிலும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையில், ‘‘கறுப்புப் பண ஒழிப்புக்காக ஐந்து அம்சத் திட்டங்களை பிரதமரிடம் தெரிவித்தேன். ஆனால், அதில் இரண்டை மட்டுமே அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. அதுவும் நன்கு சிந்திக்காமல், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் திடீரென நடைமுறைப்படுத்தி உள்ளனர். மோடியின் இந்த நடவடிக்கையை எங்களால் முழுமையாக வரவேற்க முடியாது. அதேசமயம், நிராகரிக்கவும் முடியாது. நாங்கள் அளித்த ஐந்து அம்சத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருந்தால், மக்களுக்கு இவ்வளவு சிரமங்கள் வந்திருக்காது’’ என கடுமையாக விமர்சித்திருக்கிறார் அனில் போகில்.
மத்திய அரசுக்கு அனில் போகில் அளித்த ஐடியாக்களில் சில…
* 50 ரூபாய் நோட்டுக்கு மேலே உள்ள அனைத்து அதிக மதிப்புடைய நோட்டுகளையும் தடை செய்ய வேண்டும்.
* மத்திய, மாநில அரசுகளின் அனைத்து மறைமுக வரிகளையும் ரத்துசெய்ய வேண்டும்.
* பணப் பரிவர்த்தனைகள் அனைத்தையும் வங்கிகள் வழியாகவே செய்ய வேண்டும்.
* வரிகள் வசூலிப்பத்தை BTT எனும் வங்கிப் பரிவர்த்தனை மூலமே செயல்படுத்த வேண்டும்.
‘‘இவை அனைத்தையும் செயல்படுத்தியிருந்தால், சாமான்ய மக்கள் பயனடைவதுடன், நாட்டில் நிர்வாக அமைப்பிலும் நல்ல மாற்றங்கள் வந்திருக்கும். இந்த நடவடிக்கைகள், கறுப்புப் பணத்தையும்… கள்ள நோட்டுகளையும் வேண்டும் என்றால் ஒழிக்கலாம். அதேசமயம், இது சாமான்ய மக்களைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளதுடன், நாட்டில் உள்நாட்டு உற்பத்தியையும் பாதித்திருக்கிறது’’ எனவும் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் அனில் போகில்.
அனில் போகிலின் மற்ற ஐடியாக்களை… மத்திய அரசு கண்டுகொள்ளாதது ஏனோ?