தீர்வை பெற்றுத்தராத சம்பந்தனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கரட புராணத்தின் கடைசிப்பக்கம் வரைக்கும் தடவித்தேடிக்கொண்டிருக்கும் “மாண்பு மிகு” ஈழத்தமிழ் பெருமக்களும் இதயம் பலவீனமானவர்களுக்கும் இந்த பதிவை இதற்கு மேல் வாசிக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா சிறைகளில் கொண்டு சென்று அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சுமார் நூறுக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் இன்று கிளிநொச்சியில் சிறிலங்கா இராணுவத்திடம் சென்று தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு வேலை தருமாறு கேட்டு – இரந்து – விண்ணப்பித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

இராணுவத்தினரின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு ஆட்களை எடுக்கப்போவதாக விடுக்கப்பட்ட அறிவிப்பை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் – சிலர் தங்களது கைக்குழந்தைகளோடு போய் நின்று – தங்களை அந்த பிரிவில் இணைத்துக்கொள்ளுமாறு கோரி கையெழுத்திட்ட மகஜரை கையளித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

முன்னரும் இவ்வாறு வேலைக்கு ஆட்களை எடுத்தபோது, “இதுவொரு சூழ்ச்சிகரமான பொறி” – “நுண்ணிய இனவழிப்பிற்குள் நூதனமாக பின்னப்பட்டும் வலை” – என்றெல்லாம் கதைகளை பரப்பியதால் இந்த போராளிக் குடும்பங்கள் அந்த வேலைகளுக்கு போகவில்லை.

மீறி சென்றவர்கள் இன்று நல்ல சம்பளத்துடன் சிறப்பாக வாழ்கிறார்கள்.

ஆக, இனியும் தாமதிக்காமல் இந்த தடவையிலாவது இந்த வேலையில் சேர்ந்துகொள்ளவேண்டும் என்று சிவில் பாதுகாப்பு திணைக்கள கட்டளை அதிகாரியிடம் தங்களது பெயர்களை கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

சுருங்க சொன்னால், எங்களுக்கு உள்ளேயிருக்கும் முன்னாள் போராளிகளை வெளியே கொண்டுவரவும் தெரியவில்லை. வெளியே இருக்கும் முன்னாள் போராளிகள் இராணுவத்துடன் சென்று இணைந்துகொள்வதை தடுக்கவும் தெரியவில்லை.

மொத்தத்தில் எங்களுக்கு எதுவும் தெரியுதுமில்லை. எங்கள் அரசியலாளர்களுக்கு என்ன நடக்குது என்று விளங்குதுமில்லை.

imagesவட மாகாண சபையில் கடந்த மூன்று வருடத்தில் 337 தீர்மானங்களை நிறைவேற்றிய களைப்புடன் கனடா செல்லவுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கோ அல்லது தமிழர்களுக்கு தீர்வு வழங்குவதாயின் சிங்களவர்களின் மனங்களை வெல்லவேண்டும் என்று தலதா மாளிகையில் பிரதட்டை அடித்துக்கொண்டிருக்கும் சம்பந்தனுக்கோ அல்லது அவரது பரிவாரங்களுக்கெல்லாம் இந்த பிரச்சினை பெரிய அரியண்டமாகத்தானிருக்கும்.

ஏனென்றால், அவர்கள் ஆளுக்காள் அண்ணா – தம்பி என்று “நாளை நமதே ” பாடிக்கொண்டு ஓடுகின்ற அரசியல் வண்டிக்கு இந்த முன்னாள் போராளிகள் பிரச்சினைக்குரிய ஆட்கள். கறைபடிந்தவர்கள். தீட்டுப்பிடித்தவர்கள். தீண்ட தகாதவர்கள். அறிக்கைகளுக்கும் அரசியலுக்கும் மாத்திரம் மங்களகரமானவர்கள்.

ஏன் துயிலும் இல்லத்தில் விளக்கேற்றிவிட்டு இன்று வரைக்கும் புலிகளின் பெயரையே நாமஸ்கரணம் செய்துகொண்டிருக்கும் சிறிதரன் மற்றும் தலைவர் பிரபாகரன் இப்போது உயிரோடு வந்தாலும் பிரதமராக்குவதாக சூளுரைத்திருக்கும் விஜயகலா மகேஸ்வரன் எல்லோருக்கும்கூட இந்த போராளிகள் வெறும் விளம்பர பொம்மைகள்.

புதுமைப்பித்தன் கூறியதைப்போல புண்ணை காட்டி பிச்சையெடுக்கும் பித்தர்களாக சபிக்கப்பட்டவர்கள்.

புலம்பெயர்ந்த பக்கம் பார்த்தால், இங்கே உள்ள பக்கவாத்தியங்களும் தாயகத்தில் வன்வலுக்கொண்டை கட்டியவர்களுக்கு மாத்திரம்தான் ஆதரவாம். ஸ்பீடாக சுற்றுகின்ற கம்புகளுக்கு மாத்திரம்தான் குங்சரம் கட்டுவார்களாம்.

img_0294-1

இப்போதுகூட, இந்த செய்தியை பார்த்த பெருந்துயரை பகிர்ந்துகொண்டிருக்கும்போது மறுமுனையில் பேசிய பெருமகன் “கைக்குழந்தையளோட போய் ஆமிக்காரனிட்ட வேலை கேட்கினம் எண்டு சொல்லுறியள்.

அப்பிடியெண்டால், பிள்ளை பெற மட்டும் தெரியுது. அந்த நேரத்தில போய் வேற வேலையள் பார்த்திருக்கலாமே” – என்று தனது அதிபுத்தி சாதுரியத்தில் பிறந்த கேள்வி ஒன்றை முன்வைத்தார்.

வருஷம் பிறந்த பிறகு “நல்ல சொற்களை” பயன்படுத்துவதற்கு எனக்கொரு சந்தர்ப்பத்தை உவந்தளித்த அந்த அன்பருக்கு நன்றி.

முன்னாள் போராளிகளுக்கு சிவில் பாதுகாப்பு பிரிவில் வேலை கொடுப்பது போல புலம்பெயர்ந்த கொஞ்சப்பேருக்கு சிறிலங்கா அரசாங்கத்திண்ட புலனாய்வுப்பிரிவில் வேலைக்கு ஆள் எடுத்தால் இங்கிருந்து பலரை ஏற்றுமதி செய்யலாம். அவ்வளவுக்கு துப்பறியும் புலிகளெல்லாம் எங்கள் மத்தியில் ஏறி விளையாடிக்கொண்டு திரியுதுகள்.

img_0290(இராணுவத்தினரை  எதிர்த்து போராடியவர்கள் இன்று அதே இராணுவத்தினரிடம் பிச்சை கேட்கும் நிலையை பாருங்கள். எங்கட அடிபணியா புலம்பெயர் வீரப்புலிகள் இவர்களுக்கு உதவுவார்களா??)

எது எப்படியோ –

தமிழர்கள் உண்மையிலேயே பெருமைப்படவேண்டிய தருணம் இது. பதற்றப்படாமல் அந்த பெருமையை கொண்டாவேணும்.

சிங்களம் தனது பொருளாதாரத்தை சீனாவிடம் கொடுத்துவிட்டு அரசியலை அமெரிக்காவிடம் கொடுத்துவிட்டு காலி முகத்திடலில் காலாட்டிக்கொண்டிருக்கிறது.

அதேபோல –

தமிழர்கள் நாங்கள், அரசியலை கொழும்பிலிருந்து வந்த விக்னேஸ்வரனிடமும் சுமந்திரனிடமும் கொடுத்துவிட்டு போராளிகளை சிறிலங்கா இராணுவத்திடம் கொடுத்துவிட்டு போராட்டத்தை சனல் – 4 தொலைக்காட்சியிடம் கொடுத்துவிட்டு பெருமைப்பட்டுக்கொண்டேயிருப்போம்.

– ப. தெய்வீகன்

Share.
Leave A Reply