ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரை புதிய அரசியல் சாசனமொன்றின் மூலம் அரசியல் தீர்வினை கொண்டு வருவதை அவர்கள் அங்கீகரிக்கவோ ஏற்றுக் கொள்ளவோ போவதில்லை. ஜனாதிபதியின் அதிகார ஆளுமைகள் எவ்வளவு செலுத்தப்பட்டாலும் அவை பயனளிக்கப் போவதில்லையென்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.
தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்குவதிலும் அதைப் பெறுவதிலும் ஆபத்தான நிலையொன்று உருவாகி வருவதை அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் இழுபறி நிலையிலிருந்து ஓரளவுக்கு புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைக் கொண்டு வருவதில் அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள் ஆளும் பங்காளிக் கட்சிகளுக்கு இடையே நீறுபூத்த நெருப்பாக தகதகத்து வரும் முரண்பாடுகளாகவும் இருக்கிறது.
மறுபுறம் அரசியல் தீர்வொன்று விரைவில் கிடைத்து விடுமென்ற அதீத நம்பிக்கையோடு காத்திருக்கும் தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றங்களைச் சந்திக்கப் போகிறார்களோ என்ற கலக்கம் நிறைந்த நிலையில்தான் அரசாங்கத்தின் இழுபறி நிலை காணப்படுகிறது.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை கொண்டு வருவதில் தேசிய அரசாங்கம் பல்வேறு சங்கடங்களையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் காணப்படுகிறதென்பதை அண்மைக்கால நிகழ்வுகளும் வாதப் பிரதிவாதங்களும் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கு மக்கள் அங்கீகாரம் வழங்கவில்லை. திருத்தம் மட்டுமே முன்னெடுத்துச் செல்ல முடியுமென்ற முரண்பட்ட கருத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமுக்கக் குழுக்கள் கூறிக்கொண்டிருக்கின்றன.
இதேவேளை சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என்ற தடைகளும் உப குழுக்கள் தமது அறிக்கைகளை ஏலவே சமர்ப்பித்திருக்கின்ற நிலையில் வழிப்படுத்தல் குழுவானது தனக்குரிய காரியங்கள் மீதும் செயற்பாட்டின் மீதும் கவனம் செலுத்தாமல் காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பது அல்லது இவ்விவகாரம் இழுபறி நிலை கொண்டதாக காணப்படுவது போன்ற பல்வேறு நெருக்கடி நிலைகளில் தற்போதைய அரசாங்கம் சிக்கிக் கொண்டிருப்பதை சாதாரண அரசியல் அறிவு கொண்ட ஒரு பாமரனால் கூட இலகுவாக அனுமானிக்க முடியும்.
2015 ஆம் ஆண்டு இலங்கையில் இரு பிரதான கட்சிகளுடன் ஏனைய சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கத்தை நிறுவியமைக்கு புதிய அரசியல் சாசனம், தேர்தல் முறை மாற்றம், நிறைவேற்று அதிகார முறை கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைக்கு முடிவு காணுதல், அரசியல் தீர்வு என்ற பிரதான நோக்கங்களே காரணமாக அமைந்தன.
என்னதான் ஏனைய விடயங்கள் உள்ளடங்கிக் காணப்பட்டபோதும் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டும் என்ற விடயம் பிரதான இடத்தைப் பெற்றிருந்தமை யாவரும் அறிந்த விடயம்.
தமிழ் மக்களின் 60 வருட கால போராட்டத்துக்கு அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டுமாயின் அரசியல் சாசனமொன்றை உருவாக்குவதன் மூலமே இனப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வொன்றைக் காண முடியுமென்ற ஏகோபித்த தீர்மானம் கொண்டவர்களாகவே பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் காணப்பட்டன. அந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
இதன் பிறப்பின் பின்னணியில் தொட்டப்பாக்களாக த.தே.கூ. அமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் இருந்தபோதிலும் மஹிந்தவின் ஆட்சி வீழ்ச்சியடைய வேண்டுமாயின் இக்கூட்டு நிலைமை அவசியமானது என உணரப்பட்டதாலேயே துருவங்களாக இருந்தவை இணைந்து கொண்டன.
2010 ஆம் ஆண்டு தேர்தலில் இராணுவத் தளபதியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி தோல்வி கண்ட பட்டறிவு காரணமாகவே மிதவாதப் போக்கு கொண்ட மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக சாணக்கியவாதிகளால் நிறுத்தப்பட்டார்.
இவருக்குப் பதிலாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது வேறு ஒருவரோ நிறுத்தப்பட்டிருந்தால் மஹிந்தவென்னும் சூறாவளிக் காற்றில் அடிபட்டுப் போயிருப்பார்கள் என்ற நிலைமையை மிக சாதுரியமாகவும் நுட்பமாகவும் புரிந்து கொண்டதாலேயே மைத்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவருடைய வெற்றியை, தென்னிலங்கை மக்கள் கொண்டாடியதை விட சிறுபான்மை மக்களான தமிழ், முஸ்லிம் மக்கள் கொண்டாடியது அதிகமென்றே கூற வேண்டும்.
தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இவர் விளங்கினார் என்பதும் ஒத்துக் கொள்ளப்பட வேண்டிய உண்மை.
நூறு நாள் வேலைத் திட்டம், அரசியல் அமைப்பு நிர்ணய சபை, காணி விடுவிப்புகள், மீள் குடியேற்றம் என்ற முன்னெடுப்புகள் இவர் மீது அதீதமான நம்பிக்கைகளையும் கொண்டு வந்தது என்பதும் எண்ணிப் பார்க்கப்பட வேண்டிய விடயம்.
பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றி உப குழுக்கள், வழிப்படுத்தல் குழு என்பவை அமைக்கப்பட்டபோது இருந்த வேகம் கட்சிகளுக்கு இடையிலான இணக்கப்பாடுகள் அரசியல் தீர்வு விவகாரத்தில் முரண்பட்ட கருத்துக்களையும் மோதல்களையும் தற்பொழுது உருவாக்கியுள்ளது என்பதை அண்மைக்கால சம்பவங்கள் தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றன.
புதிய அரசியல் சாசனமொன்றை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட குழுக்களும் கட்சிகளும் தமக்குள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
தேசிய அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் இன்னும் தெளிவாக கூறுவதாயின் அமுக்கக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு கூறி வருகிறார்கள். புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு மக்களின் ஆதரவு இல்லை.
அரசியல் சாசனத்தை திருத்துவதற்கு மாத்திரமே மக்கள் ஆணையைப் பெற்றோம். அவ்வாறு அரசியல் சாசனத்தை திருத்துவதற்கு மாத்திரமே ஆதரவை நல்குவோம்.
புதிய அரசியல் சாசனத்தை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லையென சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் கூறி வருகிறார்கள்.
இது தொடர்பில் அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளன என்பது வெளிப்படையாகவே தெரிகின்ற விடயமாகும்.
குறிப்பாக கூறப் போனால் அரசியல் சாசனம் ஆக்கப்படுவது தொடர்பில் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுகிறது.
தனைத் தெரிந்து கொண்டதால் தான் என்னவோ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பிரிக்காமல் அதிகாரத்தைப் பகிர்வதும் ஒற்றையாட்சிக்குள் ஒவ்வொரு பிரதேசங்களும் தமது செயற்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கும் மத மற்றும் கலாசார விடயங்களை முன்னெடுப்பதற்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுமென கூறி வருகிறார்.
இவ்விரு கட்சிகளின் உள்நோக்கங்களைப் பதம் பிரித்துப் பார்க்கிறபோது ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரை புதிய அரசியல் சாசனமொன்றின் மூலம் அரசியல் தீர்வினை கொண்டு வருவதை அவர்கள் அங்கீகரிக்கவோ ஏற்றுக் கொள்ளவோ போவதில்லை.
ஜனாதிபதியின் அதிகார ஆளுமைகள் எவ்வளவு செலுத்தப்பட்டாலும் அவை பயனளிக்கப் போவதில்லையென்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.
இதே கட்சியைச் சேர்ந்த இன்னும் சில அமைச்சர்கள் ஆறு மாதங்களில் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் தேர்தல் முறை மாற்றத்தையும் அடைந்து கொள்ள முடியாவிடின் ஐக்கிய தேசியக் கட்சியுடனான தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதில் அர்த்தமில்லை.
இவ்விரு விடயங்களையும் அடைந்து கொள்ள முடியாவிடின் தேசிய அரசாங்கத்தை முறித்துக் கொள்வதே நன்று என வெளிப்படையாகவே கூறி வருகிறார்கள்.
இவர்கள் கூறுவதை வைத்துக் கொண்டு புதிய அரசியல் சாசனமொன்றை உருவாக்கி சமஷ்டி முறைமையிலான இணைந்த வடக்கு, கிழக்கில் அதிகாரம் பகிரப்பட வேண்டுமென்ற கருத்தைக் கொண்டவர்கள் இவர்கள் என எண்ணிவிட முடியாது.
இவர்களைப் பொறுத்தவரையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையைப் போன்றவர்கள் என்ற வகையில் தமிழ் மக்களுக்கு வழங்கிவிட்டோம் என்று ஒப்புக்கு கொடுக்கும் வகையில் எதையாவது கொடுங்கள் என்ற போக்குக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரை புதிய அரசியல் சாசனம் அவசியமற்றது என்று கூறுவதும் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு என அடித்துக் கூறுவதும் முரண்பட்ட போக்கு கொண்டவையாக காணப்படுகின்றபோது நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தீர்வை அடைந்து விடலாமென்று எதிர்பார்ப்பதும் காத்திருப்பதும் நம்புவதும் எந்தளவுக்கு பொருத்தப்பாடானது என்பது புரியவில்லை.
தேசிய அரசாங்கத்தில் இடம்பெறும் இரு கட்சிகளைப் பொறுத்தவரை குறித்த இரண்டு விடயங்களில் ஒத்த போக்கு கொண்டவர்களாகவே காணப்படுகிறார்கள்.
சமஷ்டி முறைமையிலான அரசியல் தீர்வை வழங்க முடியாது, இரண்டாவது விடயம் வடக்கு, கிழக்கு இணைப்புக்கு நாம் ஒருபோதும் ஒத்துவரப் போவதில்லை என்பதில் இவ்விரு கட்சிகளும் கை கோர்த்துக் கொண்டே நிற்கின்றன.
ஆக இவையிரண்டும் முரண்பட்டு நிற்பது புதிய அரசியல் சாசனம், பழைய அரசியல் சாசனத்திருத்தம் என்ற விவகாரங்களில் மட்டுமேயாகும்.
தமிழ் மக்களாக இருக்கலாம், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளாக இருக்கலாம். சமஷ்டி வடிவிலான ஆட்சி முறைத் தீர்வு, வடக்கு, கிழக்கு இணைந்த முறையிலான அதிகாரப் பகிர்வு என்பன வழங்கப்படாத பட்சத்தில் வேறு எந்தவொரு தீர்வையும் தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லையென்பதை தெளிவாக உரைத்துவருவதுடன் அதில் உறுதியுடையவர்களாகவும் இதுவரை காணப்படுகிறார்கள்.
இந்நிலைப்பாட்டில் ஒரு திரிபு நிலை அல்லது சின்ன தளம்பல் ஏற்படுமாயின் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தையும் அவர்கள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள் என்பதை சாதாரணமாக எல்லோருமே அறிந்து வைத்திருக்கிறார்கள்.
அரசியல் சாசனத் தயாரிப்புத் தொடர்பில் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் எதிர்ப்பலைகள் வேகம் கொண்டு காணப்படுவதற்கு ஆதாரமாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அது சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படுமென ஐக்கிய தேசியக்கட்சி கூறிவரும் நிலையில் அதற்கு அரசின் மற்றுமொரு பங்காளிக் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசியல் அமைப்பு வழி நடத்தல் குழுக்கூட்டத்தில் புதிய அரசியலமைப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இவர்களின் கருத்துப்படி புதிய அரசியல் அமைப்பை நாம் ஏற்கப் போவதில்லை. நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் திருத்தங்களே மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
அரசியல் நிர்ணய சபைக்கு குறிப்பாக வழிநடத்தல் குழுவுக்கு சிபாரிசுகள் செய்யவென அமைக்கப்பட்ட உப குழுக்களின் அறிக்கைகள், அவற்றுக்கென அங்கீகாரம் அளிக்கப்பட்ட விபரங்கள் தொடர்பில் அவர்கள் அறிக்கைகளை சமர்ப்பித்து நீண்ட நாட்களாகியும் வழிநடத்தல் குழுவைக் கூட்டுவதில் இழுபறி நிலைகள் காணப்படுவதாக அண்மையில் குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தன.
வழி நடத்தல் குழுவில் கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டு விடயங்களை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கையை வெளியிடுவதில் ஏன் காலதாமதம் ஏற்பட வேண்டும்?
இவ்விடயத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டுமென அண்மையில் த.தே. கூ. அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரால் ஒரு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியாகும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தலைவராகக் கொண்ட 21 அங்கத்தவர்களும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்தவர்களும் உள்வாங்கப்பட்டு அமைக்கப்பட்ட இவ்வழி நடத்தல் குழுவின் செயற்பாடாக தற்போதைய அரசியல் யாப்பின் முதலாம், இரண்டாம் அத்தியாயங்கள் பற்றி ஆராய்தல், அதிகாரப் பகிர்வு தேர்தல் முறை மற்றும் நாட்டின் தன்மை, இறையாண்மை, மதம் அரசியல் கட்டமைப்பு, காணி அதிகாரம் போன்ற முக்கியமான விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுத்தல் என்பன இதன் பிரதான கடமைகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன.
இவற்றுக்கென ஒதுக்கப்பட்ட கடமைகளில் மிக பிரதானமானதாகவும் சர்ச்சை கொண்டதாகவும் இருக்கும் விடயம் அதிகாரப் பகிர்வு சார்ந்த அரசியல் தீர்வு விவகாரமாகவும் இவ்வழிப்படுத்தல் குழுவுக்கு உபகுழுக்களின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும், மிக நீண்டகாலமாக வழிப்படுத்தல் குழு கூடாத நிலையில் அது பற்றிய இழுபறி நிலைசார்ந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் தான் இக்குழுக்கூட்டம் கடந்த நான்காம் திகதி மீண்டும் கூட்டப்பட்டது.
(04.04.2017) அன்றைய முதல் தினமே, சர்ச்சைகளும் முரண்பாடுகளும் வலுத்துக் கொண்டதாக செய்திகள் வெளிவந்திருந்தன.
கழுதைதேய்ந்து கட்டெறும்பான கதைபோல் அரசியல் நிர்ணய சபை மற்றும் குழுக்கள் அமைக்கப்பட்ட போது புதிய அரசியல் சாசனமொன்றுக்காக நாம் ஒன்று கூடுகின்றோம் என்று கூறிக்கொண்டவர்கள் இன்று புதிய அரசியல் சாசனம் வேண்டாம்.
அதற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. பழைய அரசியல் சாசனத்தில் அதாவது நடைமுறையிலுள்ள அரசியல் சாசனத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதையே, மக்கள் அங்கீகரிப்பார்கள்.
சர்வஜன வாக்கெடுப்பு அவசியமற்றது என தமக்குள் தாமே அடிபட்டுக் கொள்வதை இன்றைய அரசியல் நிலவரங்கள் எமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டால் அது தவறான அர்த்தம் கொள்ளப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்படும். அரசியல் சாசன திருத்தமாயின் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வாய்ப்பிருக்கிறது.
எனவே பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலான திருத்தத்தையே நாம் எதிர்பார்க்கிறோமென சுதந்திரக் கட்சியினர் அடம்பிடித்து வருகின்ற நிலையில் இதற்கு ஆதரவாக ஜாதிக ஹெல உறுமய முண்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.
பண்டா – செல்வா ஒப்பந்தம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் தீர்வுப்பொதி, அதன் பின்னர் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு என்ன நடந்ததோ அதே கதை மீண்டும் எழுதப்பட போகிறதா?
இன்றைய போக்கு எதை சொல்கிறதென்றால் எல்லை தாண்டிய வெள்ளாடுகளும் ஏப்பம் விட துடிக்கும் ஓநாய்களின் கதைகளுமாகவே மாறிக் கொண்டிருக்கிறது.
திருமலை நவம்