கடந்த வாரம், உலகளவில் இலங்கையைப் பிரபலப்படுத்துவதற்குக் காரண மாக இருந்தவர் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய.
இவருக்கு எதிராக இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தொடரப்பட்ட போர்க்குற்ற வழக்குகள், சர்வதேச ஊடகங்களில் முக்கிய செய்திகளாக இடம்பெற்றிருந்தன.
ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி. போர் முடிந்த பின்னர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இருந்து இராணுவத் தளபதி பதவி பிடுங்கப்பட்ட போது, 2009 ஜூலையில் இவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
2013 ஆகஸ்ட் 1 ஆம் திகதி வரை அவர் இராணுவத் தளபதியாக இருந்தவர். பின்னர், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்ட அவர், 2015இல் ஆட்சி மாற்றத்தையடுத்து, பிரேசிலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார்.
2015 ஆகஸ்ட் 5ஆம் திகதி பிரேசிலுக் கான தூதுவராக நியமிக்கப்பட்ட அவர், கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதியுடன் அந்தப் பதவியில் இருந்து ஓய்வுபெற்று விட்டார் என்று வெளிவிவகார அமைச்சு கூறுகிறது.
இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது வரையான காலப்பகுதியில், ஜெனரல் ஜெகத் ஜயசூரிய வன்னி படைகளின் தலைமையகத்தின் தளபதியாக பணியாற்றியிருந்தார்.
இந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களினால் தான், அவர் மீது இலத்தீன் அமெரிக்க நாடுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
2007ஆம் ஆண்டு, வன்னியில் படை நடவடிக்கைகளை விரிவாக்கத் திட்டமிட்ட அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, வன்னிப் படைகளின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் உபாலி எதிரிசிங்கவை நீக்கி விட்டு, ஜெனரல் ஜெகத் ஜயசூரியவை நியமித்திருந்தார். அதற்கு முக்கியமான காரணம் இருந்தது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கை வன்னிப் படைகளின் தலைமையகத்தின் கீழ் இருந்த படைப்பிரிவுகளாலேயே முன்னெடுக்கப்பட்டன.
ஆனால், அதனை முற்றிலுமாக கட்டுப்படுத்தி, வழிநடத்தியது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தான். கொழும்பில் இருந்தும், அவ்வப்போது நேரடியாக களமுனைக்குச் சென்றும், சரத் பொன்சேகாவே சண்டையை வழி நடத்தியிருந்தார்.
வன்னிப் படைகளின் தலைமையகமும், அதன் தளபதியான ஜெனரல் ஜெகத் ஜயசூரியவும், இந்தப் போர் நடவடிக்கை யில் ஒருடம்மியாகத் தான் பயன்படுத்தப்பட்டனர்.
சண்டையை தான் விரும்பியவாறு நடத்துவதற்காக சரத் பொன்சேகா ஏற்படுத்திக் கொண்ட மாற்றம் இது. அதற்காகத் தான், ஜெனரல் ஜெகத் ஜயசூரியவையும் அவர் வன்னிப் படைகளின் தளபதியாக நியமித்திருந்தார்.
ஜெனரல் ஜெகத் ஜயசூரியவும் சரத் பொன்சேகாவின் எதிர்பார்ப்புக்கு அமைய கடைசி வரை, போர் நடவடிக்கைகளில் எந்தத் தலையீடுகளையும் செய்யாமலேயே இருந்து வந்தார்.
ஆனாலும், சரத் பொன்சேகா நீக்கப்பட்டதும், இராணுவத் தளபதியாகும் வாய்ப்பு ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு கிட்டியது.
அவர் இராணுவத் தளபதியான பின்னர், பல சந்தர்ப்பங்களில், தாமே வன்னி மனிதாபிமானப் போர் நடவடிக்கைக்குத் தலைமை தாங்கியதாக உரிமை கோரியிருந்தார்.
மஹிந்த ராஜபக் ஷ காலத்தில் போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போது, அதனை நிராகரித்த ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, தாமே போரில் ஈடுபட்ட படைகளுக்கு தலைமை தாங்கியதாகவும், போர்க்குற்றங்கள் எதிலும் படையினர் ஈடுபடவில்லை என்றும் கூறியிருந்தார்.
உண்மையில், சரத் பொன்சேகாவினால் ஓரம்கட்டி வைக்கப்பட்டிருந்தவர் தான், ஜெனரல் ஜெகத் ஜயசூரிய.
அதனால் தான், சரத் பொன்சேகா வெளியேற்றப்பட்டதும், அந்த கௌரவத்தை தனதாக்கிக் கொள்ள முயன்றார்.
2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜெனரல் ஜெகத் ஜயசூரியவை, பிரேசிலுக்கான தூதுவராக தற்போதைய அரசாங்கம் நியமித்திருந்தது.
பிரேசிலில் உள்ள தூதரகத்தில் இருந்து பணியாற்றினாலும், அருகில் உள்ள இலத்தீன் அமெரிக்க நாடுகளான, சிலி, ஆஜென்ரீனா, பெரு, கொலம்பியா, சூரி னாம் ஆகிய ஐந்து நாடுகளுக்கும், இவர் தூதுவராகச் செயற்பட்டு வந்தார்.
இந்தநிலையில் தான், கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில், திடீரென ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக போர்க்குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
முன்னாள் ஐ.நா. நிபுணர் யஸ்மின் சூகா தலைமையில் செயற்படும்-தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்ட- உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் என்ற அமைப்பே இந்த போர்க்குற்ற வழக்குகளை தாக்கல் செய்திருந்தது.
இதற்கு ஆஜென்ரீனாவைச் சேர்ந்த, Centro de Estudios Legales y Sociales, பிரேசிலைச் சேர்ந்த CONECTAS, சிலியில் உள்ள Nelson Caucoto and Associates, கொலம்பியாவில் உள்ள, Comisión Colombiana de Juristas, பெருவில் உள்ள, The Instituto de Defensa Legal ஆகிய மனித உரிமை அமைப்புகள் உதவிகளை வழங்கின.
கடந்த மாதம் 28ஆம் திகதி கொலம்பியாவிலும், பிரேசிலிலும் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
சிலி, பெரு, ஆஜென்ரீனா ஆகிய நாடுகளில் அடுத்த சில நாட்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இலங்கைத் தூதுவருக்கு எதி ராக வழக்கை பெற்றுக் கொள்வதற்கு சூரினாம் நாட்டு அதிகாரிகள் மறுத்திருந்தனர்.
2007ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரை, ஜெனரல் ஜெகத் ஜயசூரிய வன்னி படைகளின் தளபதியாக இருந்த போது, வவுனியாவில் உள்ள ஜோசப் முகாமில் இருந்து இராணுவ நடவடிக்கையை மேற்பார்வை செய்தார்.
இவரது மேற்பார்வையில் இருந்த இராணுவப் பிரிவுகள், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும், காணாமல் ஆக்கப்பட்டதாகவும், சித்திரவதை செய்யப்பட்டதாகவும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு ஆதாரமாக, வவுனியா ஜோசப் முகாமில், தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட 14 பேரின் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, ஜோசப் முகாம் சித்திரவதைகள் தொடர்பாக யஸ்மின் சூகா, வெளியிட்ட அறிக்கையில் இந்த சாட்சியங்களை வெளியிட்டிருந்தார்.
வவுனியாவில் உள்ள படைத் தலைமையகமே ஜோசப் முகாம் என்று அழைக்கப்படுகிறது. இதனை JOSEPH முகாம் என்றே பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் அறிக்கையிட்டுள்ளன. இப்போது தொடுக்கப்பட்டுள்ள வழக்கிலும் அவ்வாறு தான் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அது JOSEPH அல்ல. JOSFH என்பதே சரியானது. கூட்டு நடவடிக்கை பாதுகாப்பு படை தலைமையகம் (Joint Operation Security Forces Headquarters) என்பதே இதன் விரிவாக்கம்.
இந்த ஜோசப் முகாமிலேயே, ஜெனரல் ஜயசூரிய பணியாற்றியிருந்தார். அங்குள்ள சித்திரவதைக் கூடத்தில், துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படும் கைதிகள் அலறும் சத்தம் அதிகாரிகளுக்கும் கேட்கும் என்று சாட்சியங்கள் அளிக்கப்பட்டிருந்தன.
இதன் மூலம், சித்திரவதைகளை அவர் அறிந்திருந்தார், அதற்கு பொறுப்பாக இருந்தார் என்பது ஒரு குற்றச்சாட்டு.
வன்னிப் படைகளின் தளபதி என்ற வகையில், போரின் இறுதிக்கட்டத்தில், பொதுமக்கள் கொல்லப்பட்டமை, மருத்துவமனைகள் தாக்கப்பட்டமை போன்றவற்றுக்கும் இவர் பொறுப்புக்கூற வேண்டும் என்பது மற்றொரு குற்றச்சாட்டு.
இதன் அடிப்படையில் தான், ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிரான வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஆனால், இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாளான, ஆகஸ்ட் 27ஆம் திகதியே, பிரேசிலிலிருந்து வெளியேறி விட்டார் அவர்.
அவர் டுபாய் வழியாக கடந்த 30 ஆம் திகதி கொழும்பு வந்து சேருவதற்கிடையில், போர்க்குற்ற வழக்கிற்கு அஞ்சி தப்பியோடி விட்டதாக பரவலாக செய்திகள் உலாவின.
ஜெனரல் ஜயசூரியவின் பணிக்காலம் முடிந்து விட்டது, அவரது வெளியேற்றம் முன்னரே திட்டமிடப்பட்டது என்கிறது அரசாங்கம். ஆனால், வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதை அறிந்தே வெளியேறியிருக்கக் கூடும் என்பது, யஸ்மின் சூகாவின் சந்தேகம். அதனை அவர் லண்டனில் கூறியிருந்தார்.
ஒரு வழியாக, ஜெனரல் ஜயசூரிய கொழும்பு வந்து சேர்ந்து விட்டார். இங்கு வந்ததும், அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, சில விடயங்களைக் கூறியிருக்கிறார்.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது போல, இறுதிக்கட்டப் போரில், இராணுவ அணிகளுக்கு நேரடியாக உத்தரவுகளை தான் வழங்கவில்லை என்றும் அவ்வாறு கூறப்பட்டுள்ளது பொய் என்றும் கூறியிருக்கிறார்.
அவரது இந்தக் கருத்து உண்மையானதும் கூட. முழு உத்தரவுகளும் கொழும்பில் இருந்தே பிறப்பிக்கப்பட்டன, வன்னிப்படைகளின் தளபதியாக இவர், வெறும் டம்மியாகத் தான் இருந்தார்.
ஆனாலும், இராணுவத் தளபதியான பின்னர், தனது மேற்பார்வையில் தான் வன்னிப் படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பலஇடங்களில் கூறியிருந்தார். அதுவே அவருக்கு வினையாக வந்திருக்கிறது.
ஆனாலும், ஜோசப் முகாமில் இருந்ததாக கூறப்பட்டுள்ள சித்திரவதைக் கூடம் பற்றி இவர் எதையும் கூறவில்லை. அதுவும் கூட இவருக்கு எதிரான வழக்கில் உள்ளது.
இறுதிப் போர் தொடர்பாக வழக்குத் தொடர வேண்டுமானால் சரத் பொன்சேகாவுக்கு எதிராகவே தொடர வேண்டும் என்றும், அவரே போருக்கு தலைமை தாங்கினார் என்றும் பழிபோடவும் ஜெனரல் ஜயசூரிய தவறவில்லை.
ஆனாலும், இந்த விடயத்தில், இவர் தப்பிக்க முடியாதபடி சில சான்றுகள் இருப்பதை மறுக்க முடியாது. 2013ஆம் ஆண்டு, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாகப் பொறுப்பேற்ற போது, ஜெனரல் ஜயசூரியவின், வரலாறு பற்றிய பதிவு ஒன்றை பாதுகாப்பு அமைச்சு இணையத்தளம் வெளியிட்டது. அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது,-
“He has been the Commander, Security Forces Wanni since August 2007 before he took over the mantle of the Army. To his credit, General Jagath Jayasuriya has been actively engaged in the overall military planning and operations in the Wanni.”
வன்னிப் படைகளின் தளபதியாக, 2007 ஆகஸ்ட்டில் பொறுப்பேற்ற ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, வன்னியில் ஒட்டுமொத்த இராணுவத் திட்டமிடல் மற்றும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார் என்பதே மேற்படி, பந்தியின் சுருக்கம்.
வன்னி படை நடவடிக்கையில் வெறும் டம்மியாக பயன்படுத்தப்பட்டாலும், அதிகாரபூர்வ தளபதியாக இருந்ததால், இவருக்கு சிக்கல் தான்.
அதேவேளை, அரசாங்கம் வெறும் பேச்சளவில் நிற்காமல், தமக்கு எதிராக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படாது என்று ஐ.நாவிடம் வாக்குறுதி பெற வேண்டும் என்றும் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, கோரியிருக்கிறார்.
இவரது இந்தக் கருத்துக்கள், போர்க்குற்ற விசாரணை பீதியில் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
ஜெனரல் ஜயசூரிய, கொழும்பு வந்து சேர்ந்து விட்டாரே, இனிமேல் போர்க்குற்ற வழக்குகளால் அவரை என்ன செய்ய முடியும்? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.
பிரேசில் உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளில் கூட, ஜெனரல் ஜயசூரியவுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு இருந்தது, இலங்கையின் தூதுவரான அவருக்கு இராஜதந்திர விலக்குரிமை அளிக்கப்பட்டிருந்தது, குற்றவியல் சட்டங்களின் கீழ், வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவோ கைது செய்யவோ கூடாது என்பது வியன்னா பிரகடனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, பிரேசிலில் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில், ஜெனரல் ஜயசூரிய கைது செய்யப்படலாம் என்றோ அதன் அடிப்படையில், மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்லப்படுவார் என்றோ எதிர்பார்க்க முடியாது.
இந்த வழக்கைத் தொடர்ந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, சட்ட நிபுணரான, கார்லோஸ் காஸ்ரேசனா பெர்னாண்டஸ் இதனை அறியாமல் இந்த வழக்கைத் தொடர்ந்திருக்கவில்லை.
உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலகத் திட்டத்தின் சார்பில், வழக்குகளைத் தாக்கல் செய்த ஸ்பானிஷ் சட்டநிபுணரான கார்லோஸ் பெர்னாண்டஸ், ஒன்றும் சாதாரணமானவர் அல்லர். போர்க்குற்றங்கள் சார்ந்த வழக்குகளில் மிகவும் பிரபலமானவர்.
அதுவும் இலத்தீன் அமெரிக்க சர்வாதிகாரிகள், போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளில் வாதாடியவர் என்பது பலருக்கும் தெரியாத விடயம்.
1976ஆம் ஆண்டு தொடக்கம், 1981ஆம் ஆண்டு வரை, ஆஜென்ரீனாவை ஆட்சி செய்த சர்வாதிகாரி, ஜோசப் ராபெல் விடேலாவுக்கு எதிராக, 1996ஆம் ஆண்டு சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்தவர்களில் ஒருவர் தான், கார்லோஸ் பெர்னாண்டஸ்.
இந்த சட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, ஜோசப் விடேலாவுக்கு, எதிராக சுமத்தப்பட்ட இரண்டு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்காக, ஆயுள் தண்டனையையும், 50 ஆண்டு சிறைத்தண்டனையையும் பெற்றார். சிறையிலேயே அவர் மரணத்தை தழுவவும் நேரிட்டது.
அதுபோலவே, சிலியில் சர்வாதிகார ஆட்சி நடத்திய ஜெனரல் அகஸ்டோ பினோசேக்கு எதிராக, கார்லோஸ் பெர்னாண்டஸ் தான் ஸ்பானிய தேசிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு தீர்ப்பு அளிக்கப்பட முன்னரே, 2006இல் மரணமாகி விட்டார்.
அதுபோலவே குவாட்டமாலாவில், ஜனாதிபதியாக இருந்த, அல்போன்சோ போட்டிலோ உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குகளையும் தாக்கல் செய்தவர் கார்லோஸ் பெர்னாண்டஸ்.
போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான சட்டங்களில் அனுபவம் மிக்க இவர் தான், ஜெனரல் ஜயசூரியவுக்கு இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
ஜெனரல் பினோசே, ஜோசப் விடேலா போன்றவர்களுக்கு எதிராக நாங்கள் வழக்குகளை ஆரம்பித்த போது, இருந்த ஆதாரங்களை விடவும், அதிகமான ஆதாரங்கள் இந்த வழக்கில் இருப்பது தனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்று அவர் கூறியிருக்கிறார்.
இராஜதந்திர விலக்குரிமை, ஜெனரல் ஜயசூரியவுக்கு உள்ளது என்பது தெரியும், இந்த வழக்கின் மூலம் அதனை நீக்கி, அவரை நாட்டை விட்டு வெளியேற்றுவதே தமது நோக்கம் என்று ஆரம்பத்திலேயே, அவர் கூறியிருந்தார்.
வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தான், ஜெனரல் ஜயசூரிய பிரேசிலை விட்டு வெளியேறி விட்டார் என்பது கார்லோஸ் பெர்னாண்டஸுக்கு தெரியும்.
அதற்குப் பின்னர், கருத்து வெளியிட்ட அவர், பிரேசிலை விட்டு வெளியேறியதன் மூலம், தமது வழக்கை ஜெனரல் ஜயசூரிய சுலபமாக்கி விட்டதாக கூறியிருக்கிறார்.
“பிரேசிலை விட்டு ஜயசூரிய வெளியேறியதையிட்டு நான் கவலைப்படவில்லை. வழக்கு இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது.
அவர் எமது வழக்கை இலகுவாக்கியிருக்கிறார். ஏனென்றால், தப்பிச்சென்ற அவர் இனிமேல், வேறெங்கும் விலக்குரிமையை அனுபவிக்க முடியாது” என்று அவர் கூறியிருப்பதன் மூலம், இந்த வழக்கு விவகாரம் இப்போது முடிவுக்கு வராது என்பது உறுதியாகியிருக்கிறது.
அத்துடன், ஜெனரல் ஜயசூரிய மீண்டும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்குத் திரும்பினால், கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று, தமது வழக்கில் திருத்தம் செய்ய முடியும் என்றும் கார்லோஸ் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, இதுபோன்ற போர்க்குற்ற வழக்குகளை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அமெரிக்காவிலும், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பிரித்தானியாவிலும், மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சுவிட்சர்லாந்திலும் எதிர்கொண்டிருக்கின்றனர்.
மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் வழக்குத் தொடுக்கப்பட்ட போது, உடனடியாகவே அவர் நாடு திரும்பி விட்டார்.
அதுபோல, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்தால் கைது செய்யப்படும் நிலை உள்ளது.
எனினும், நியூயோர்க்கில் ஐ.நாவுக்கான பிரதி தூதுவராக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இராஜதந்திர விலக்குரிமையால் வழக்கில் இருந்து தப்பினார்.
இப்போது, ஜெனரல் ஜயசூரிய போர்க்குற்ற வழக்கில் சிக்கியிருக்கிறார். இந்த வழக்கு அவருக்கு இலங்கையில் பாதுகாப்பு அச்சத்தைக் கொடுக்காது. ஆனால் வெளிநாடுகளில் அத்தகைய நிலை இருக்கும் என்று கூற முடியாது.
அதேவேளை, வெளிநாடுகளில் தொடுக்கப்பட்டுள்ள இதுபோன்ற வழக்குகள், உள்நாட்டு போர்க்குற்ற விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுக்கக் கூடும்.
-சுபத்திரா –