மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் சினிமா இயக்குனர்கள் அமீர்-பா.ரஞ்சித் இடையே திடீர் கருத்து மோதல் ஏற்பட்டது.
நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர முடியாததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவுக்கு சினிமா இயக்குனர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடந்தது. இதில் இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் பலர் அனிதா உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
கூட்டத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது:-
“சாதியை ஒழிக்காமல் சமூக நீதி ஏற்படாது. தாழ்த்தப்பட்டோர் இன்னும் குடிசைப்பகுதியில் தான் இருக்கிறார்கள். தெருக்களுக்கு மற்ற தலைவர்கள் பெயர்களை சூட்டுவதுபோல் அம்பேத்கர் பெயர் சூட்டப்படுவது இல்லை.
சாதிவெறியால் பல படுகொலைகள் நடந்துள்ளன. சாதி என்னையும் கொல்லும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். 1,176 மதிப்பெண் பெற்ற அனிதா மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காமல் தற்கொலை செய்துகொண்ட அவலநிலை ஏற்பட்டு உள்ளது. தாளமுத்து நடராசனில் இருந்து அனிதா வரை சாவுகள் தொடருகிறது.”
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து இயக்குனர் அமீர் பேசியதாவது:-
“மாணவி அனிதா உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கோபத்தால் ஆட்சியாளர்களுக்கு எதிராக கடுமையாக பேசினேன்.
அதற்காக என்னை கைது செய்தாலும் கவலை இல்லை. பா.ரஞ்சித் பேசும்போது சாதி பிரச்சினை பற்றி குறிப்பிட்டார். அனிதாவை தாழ்த்தப்பட்ட பெண் என்று சொல்லாதீர்கள். அவரை அனைவரும் சகோதரியாகவே பார்க்கிறோம்.
அனிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த சாதி சங்கங்கள் வராமல் இருந்து இருக்கலாம்.
ஆனால், நாடு முழுவதும் போராடிக்கொண்டு இருக்கும் அனைத்து சாதி மாணவர்களும் தங்கள் இதயத்தில் அனிதாவை தூக்கி வைத்து இருக்கிறார்கள். அனிதா நம்மை ஒன்று சேர்த்து இருக்கிறார். அவரை சாதிக்குள் திணிக்காதீர்கள்.”
இவ்வாறு அமீர் பேசினார்.
அமீரின் இந்த பேச்சுக்கு பா.ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்து மேடையில் ஏறினார்.
“சமூகத்தில் சாதி இருக்கிறது. தமிழர்கள் சாதி பெயரால் பிரிந்து கிடக்கிறார்கள். வீட்டில் வாடகைக்கு போனால் கூட என்ன சாதி என்று கேட்டுத்தான் வீடு கொடுக்கிறார்கள்” என்று ஆவேசமாக பேசினார். அவருக்கு ஆதரவாக கூட்டத்தில் இருந்த சிலரும் குரல் எழுப்பினர்.
இதனால் அமீருக்கும், பா.ரஞ்சித்துக்கும் இடையே கருத்து மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இயக்குனர் ராம் உள்ளிட்டோர் சமரசம் செய்து மோதல் ஏற்படாமல் தடுத்தனர்.