ilakkiyainfo

ரஷ்யாவில் ஆழமான பைகால் ஏரிக்குள் மூழ்கிய 500 டன் தங்கப் புதையல்!!: நூறாண்டுகளாக தொடரும் புதையல் ரகசியம்..

பொக்கிஷங்கள், புதையல் என்ற வார்த்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவை. புதையலை தேடும் பயணங்கள், புதையல் கொள்ளை, ரகசியங்களை வெளிகொணர்வது என புதையல் தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் ஆவலைக்கொடுப்பது.

கொத்தான சொத்துக்களைப் பற்றிய கதைகளை கேட்பதும் சொல்வதும் அனைவருக்கும் விருப்பமானதே.

ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில், உலகின் ஆழமான ஏரியான பைகால் ஏரிக்கு அருகில் மிகப் பெரிய புதையல் இருப்பதாக சொல்லப்படுகிறது. அணுக முடியாத தொலைதூரத்தில் அமைந்துள்ள இர்குட்ஸ்க் நகரமே புதையலின் களம்.

ரஷ்யாவில் கம்யூனிச புரட்சி நடைபெற்ற காலத்தில் நடைபெற்றது இந்த புதையல் கதை. முதலாம் உலகப் போருக்குப் பிறகு, ரஷ்யாவில் போல்ஷ்விக் புரட்சி உருவானது.

லெனின் மற்றும் அவரது தளபதி லியோன் ட்ரொட்ஸ்கியின் ஆதரவாளர்கள், ரஷ்ய பேரரசர் இரண்டாம் ஜார் நிக்கோலஸின் படைகளை தோற்கடித்திருந்த காலகட்டம் அது.

_98486681_gettyimages-465186439(1918 ஜூலை 17, போல்ஷ்விக்குகள் மன்னர் இரண்டாம் ஜார் நிக்கோலசுக்கு மரண தண்டனை விதித்தனர்.)

 

லெனினின் தளபதி

ரஷ்யாவின் மேற்குப் பகுதிகளில் பெரும்பகுதியை இடதுசாரி புரட்சியாளர்கள் ஆக்கிரமித்தனர். தலைநகரான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கின் மேற்குப் பகுதிக்கு அரசின் கருவூலத்தில் உள்ள தங்கத்தை அனுப்பிவிடலாம் என்று ரஷ்ய மன்னர் இரண்டாம் ஜார் நிக்கோலசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

மாபெரும் செல்வப்புதையல் புரட்சியாளர்களின் கைகளில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக அரசரின் ஆலோசகர்கள் ஆலோசனை கூறினார்கள். ஏனெனில், அந்த நேரத்தில், அமெரிக்கா மற்றும் பிரான்சுக்கு அடுத்து அதிக அளவிலான தங்கத்தை வைத்திருந்தது ரஷ்யாதான்.

ரஷ்ய மன்னரின் வெண்சேனை, கிட்டத்தட்ட ஐநூறு டன் தங்கத்தை ஒரு ரயிலில் ஏற்றி, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் கிழக்கு பகுதியில் உள்ள கஜான் நகருக்கு அனுப்பின.

புதையல் அனுப்பும் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஆனாலும், லெனினின் தளபதியான லியோன் ட்ரொட்ஸ்கிக்கு புதையல் அனுப்புவது பற்றிய துப்பு கிடைத்துவிட்டது.

கஜான் நகரம்

இந்த புதையலை கைப்பறினால் வெற்றி கைவசப்படும் என்று கருதிய ட்ரொட்ஸ்கி, கஜான் நகரை சென்றடைந்தார். அவரது படைகள் அரசரின் படைகளை தோற்கடித்தது. வெற்றிபெற்ற தளபதி நகரத்திற்கு சென்றபோது தங்கத்தை எங்கும் காணமுடியவில்லை.

புதையலை பூதம் காவல் காக்கும் என்று சொல்லப்படுவதும் உண்மையோ என்று வியக்கும்படி புதையல் கண்ணுக்கு சிக்கவில்லை.

புதையல் கஜான் நகரில் இருந்து மேலும் கிழக்கு நோக்கி கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று அனுமானித்த ட்ரொட்ஸ்கி, ரயிலில் சென்ற புதையலை தேடி ரயிலிலேயே பயணித்தார்.

அந்தகாலகட்டதில் ரஷ்யா, அதிக முன்னேற்றம் அடைந்திருக்கவில்லை. புதையலை தேடிய பயணம் சில மாதங்கள் தொடர்ந்தது., சைபீரியப் பகுதியில், ரஷ்ய மன்னரின் புதிய தளபதி அலெக்ஸாண்டர் கோல்சாக் தங்கப்புதையல் இருந்த ரயிலை தனது வசம் கொண்டுவந்தார்.

 

பொக்கிஷ ரயில்

புதையல் ரயிலை சைபீரியாவின் இர்குட்ஸ்க் நகருக்கு சென்றார் கோல்சாக். பைகால் ஏரிக்கு அருகாமையில் உள்ள சிறிய நகரம் இர்குட்ஸ்க். மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லாத அந்த நகரம் இன்றும் பெரிய அளவில் வளர்ச்சியடையவில்லை.

புதையல் ரயிலை செக் ராணுவ வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். முதல் உலகப்போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போராட வந்தவர்கள் இந்த செக் வீரர்கள். முதல் உலகப்போரின்போதுதான் ரஷ்யாவில் புரட்சி வெடித்தது.

எனவே செக் நாட்டு வீரர்கள் அங்கேயே சிக்கிக்கொண்டார்கள். தங்கள் வீடுகளுக்கு செல்லவேண்டும் என்ற பேராவலில் காத்துக் கொண்டிருந்த படைவீரர்களின் கையில் சிக்கியது பொக்கிஷ ரயில்.

கம்யூனிஸ்ட் புரட்சி

கோல்சாக்கை கைது செய்து அவரிடமிருந்து ரயிலை கைப்பற்றிய அவர்கள், கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களிடம் ஒப்படைத்துவிட்டார்கள். பொக்கிஷ ரயிலுக்கு பதிலீடாக தாயகத்திற்கு திரும்ப செக் வீரர்கள் அனுமதிகிடைத்தது.

அவர்கள் ரஷ்யாவின் கிழக்கு துறைமுகமான விளாதிவோஸ்டோக் வழியாக கடல்மார்க்கமாக தாயகத்திற்கு கிளம்பினார்கள்.

பிறகு ரஷ்ய அரசரின் தளபதி கோல்சோக் சுட்டுக் கொல்லப்பட்டு, புதையல் மாஸ்கோவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக சில புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கிடையில் சுமார் 200 டன் தங்கம் புதையலில் இருந்து கடத்தப்பட்டுவிட்டதாகவும், அது என்ன ஆனது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

நூறாண்டுகளாக தொடரும் புதையல் ரகசியம்

இந்த சம்பவம் நடைபெற்று நூறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் ரஷ்ய அரசுக்கு சொந்தமான புதையலை பற்றிய பல்வேறுவிதமான ஊகங்களும், அனுமானங்களும் உலாவருகின்றன.

ரஷ்யாவின் இந்த பகுதிக்கு செல்வதற்கு நீங்கள் டிரான்ஸ் சைபீரியன் ரயிலில் பயணிக்கவேண்டும். ரஷ்யாவின் பெரும்பகுதியில் பயணிக்கும் இந்த ரயில், அந்நாட்டின் கிழக்கு கடற்கரைவரை செல்கிறது.

நீண்ட தொலைவு பயணம் செய்ய வேண்டியிருந்தாலும், ரயிலில் ஏ.சி, கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. பிபிசி செய்தியாளர் லினா ஜெல்டோவிச் ரஷ்யாவில் வசிக்கிறார். அவரது குடும்பம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க்கிலிருந்து ரஷ்யாவில் குடியேறியது. அவரது குடும்பம் கஸான் பகுதிக்கு அருகே வசித்துவந்தனர்.

டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே

கோல்சாக்கின் புதையல் மாயமான கதையை லினா கேள்விப்பட்டார். புதையல் ரகசியத்தை பற்றிய உண்மையை தெரிந்துக் கொள்வதற்காக டிரான்ஸ் சைபீரியன் இரயில்வேயில் நீண்ட பயணத்தை மேற்கொண்டார் லினா. ரயில் பயணத்தின்போது, சக பயணிகளில் பலர் புதையலை பற்றி பேசியதை கேட்டார்.

இயற்கைப் புதையல்

புத்தகத்தில் எழுதப்பட்டவற்றை உண்மையாக நினைத்துக்கொண்டு இந்த பயணத்தை லினா மேற்கொண்டதாக பலரும் கேலி செய்கிறார்கள்.

ஆனால் புதையல் என்பது பண மதிப்புக் கொண்டதாகத்தான் இருக்கவேண்டுமா என்ன? உண்மையை அறியும், கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலும் பயணமாகவும் இருக்கலாம்.

புதையல் கதைகளின் உண்மையை தேடி புறப்பட்ட லினாவுக்கு இயற்கையின் மறைக்கப்படாத அழகுப் புதையல்கள் நேரில் காணகிடைத்தது.

கஸான், சைபீரியா ஆகியவை இன்றும் மிகவும் பின்தங்கிய பகுதிகளாகவே உள்ளன. தொழில்நுட்ப முன்னேற்றம் அதிகம் இல்லாத பகுதிகள் இவை. கடுமையான குளிர், பனி உறைந்த நிலப்பரப்பு என இயற்கை, அழகுப்புதையலை வெளிப்படையாக கடைவிரித்திருக்கிறது.

கட்டமைப்பு வசதிகள் மேம்படாததால், மெதுவாக பயணிக்கும் ரயிலும், நிலையாக நிற்கும் தெரு விளக்குகளும் தொழில்நுட்பம் முன்னேறவில்லை என்பதற்கு சாட்சியாக உள்ளன.

நூறு ஆண்டுகள் பழமையான கோல்சாக் புதையல் கதையைப் பற்றி லினா உள்ளூர் மக்களிடம் பேசினார். புதையல் ரகசியமாக ஒளித்து வைக்கப்பட்டிருப்பதாக சிலரும், புதையலின் பெரும் பகுதி கொள்ளையடிக்கப்பட்டதாகவும் பலரும் சொன்னார்கள்.

1903இல் டிரான்ஸ்-சைபீரியன் ரயில் இருப்புப்பாதை

நிலக்கரி எஞ்சின்

புதையல் இருந்த ரயில் பைகால் ஏரியில் மூழ்கிவிட்டதாகவும், அங்கிருந்து அதை வெளியே எடுக்கவே முடியவில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். இது உண்மையா என்பதை தெரிந்துக் கொள்வதற்காக, லினா நிலக்கரி என்ஜினால் இயங்கும் ரயிலில் பைகால் ஏரி பகுதியில் பயணம் மேற்கொண்டார்.

மெதுவாக செல்லும் இந்த ரயில், ஏரியை ஓட்டி பயணிக்கும்போது, சற்று இடறினாலும் ஏரிக்குள்ளே விழுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதை லினா உணர்ந்தார். அன்று இந்த ரயில் தற்போது செல்வதைவிட இன்னும் மந்தமாகவே இயங்கியிருக்கும். ரயில் ஓட்டுனர்களிடம் பேசிய லினாவுக்கு புதையல் தொடர்பான மற்றொரு தகவல் தெரியவந்தது.

போல்ஷிவிக் புரட்சியை முன்னெடுத்த சோவியத் அரசின் முதல் தலைவர் லெனின்

ஐநூறு டன் தங்கம்

ஐநூறு டன் தங்கத்தை செக் வீரர்கள் ட்ரொட்ஸ்கியிடம் கொடுக்கவில்லை என்று கூறும் இந்த ரயில் ஓட்டுனர்கள், அவர்கள் 200 டன் தங்கத்தை தாங்கள் சென்ற கப்பலில் எடுத்துச் செல்வதற்காக மற்றொரு ரயிலில் கொண்டு சென்றார்கள் என்று சொல்கிறார்கள்.

ஆனால் இந்த ரயிலும் தனது இலக்கை சென்றடையவில்லை என்பதே ஆச்சரியம். அப்படியானால் அந்த ரயில் எங்கே சென்றது? என்னவானது?

காணமல்போன ஒரு ரயிலில் இருந்த புதையல் பற்றிய ரகசியத்தை தெரிந்துக் கொள்ள பயணம் மேற்கொண்டால், அது இரண்டாக பிரிந்து ரகசியத்தையும் இரட்டிப்பாக்கினால் என்ன சொல்வது?

பைகால் ஏரியின் புதையல் இருந்த ரயில் விழுந்த கதைகளை இன்றும் சில உள்ளூர் மக்களின் உதடுகள் உச்சரிப்பதை கேட்க முடிகிறது. பைகால் ஏரி இருக்கும் பகுதியில் இயங்கும் ரயில் அன்றுபோலவே இன்றும் இர்குட்ஸ்கைத் தொட்டே செல்கிறது. நிலக்கரியால் இயங்கும் எஞ்சின் கொண்ட அந்த ரயிலில் இரண்டு ரயில் பெட்டிகள் மட்டுமே உள்ளன.

பைகால் ஏரியின் ஆழம்

இந்த ரயிலில் பயணிக்கும்போது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டங்களில் வசிப்பதுபோல் நீங்கள் உணருவீர்கள்.

இந்த ரயில் பயணிக்கும் பாதையில் பைகால் ஏரியில் இருந்து பிடிக்கப்படும் ஓமுல் மீனை உள்ளூர் மக்கள் விற்பனை செய்வதை பார்க்கலாம், சுவைக்கலாம் ரொட்டியுடன்.

அற்புதமான சுவை! பனியால் உறைந்துபோன பைகால் ஏரியை சுற்றியுள்ள மக்கள் உள்ளூரில் விளையும் பொருட்களையும் விற்பனை செய்கின்றனர்..

மிகவும் ஆழமான பைகால் ஏரிக்குள் மூழ்கிய புதையல் ரயிலை கண்டுபிடிக்க 2009ஆம் ஆண்டில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீரில் மூழ்குபவர்கள் மேற்கொண்ட புதையலை தேடும் வேட்டையில், சில ரயில் பெட்டிகள் மற்றும் சில ஒளிரும் பொருட்கள் காணக்கிடைத்தன.

ஆனால் அவற்றை ஏரியில் இருந்து வெளியே கொண்டு வரமுடியவில்லை. ஒளிரும் பொருட்கள் ஏரியின் ஆழத்தில் சிக்கியிருந்ததால், அவற்றை அணுகமுடியவில்லை, வெளியிலும் எடுக்க முடியவில்லை.

அரசத் தளபதி கோல்சா

பைகால் ஏரி தன்னிடம் வந்த பொருட்களை ஒருபோதும் வெளியே செல்ல அனுமதிப்பதில்லை என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கை. பைகால் ஏரியில் விழுந்த புதையலையோ ரயிலையோ ஒருபோதும் வெளியில் கொண்டுவரமுடியாது என்ற மக்களின் நம்பிக்கை, புதையல் கதையை அமரக்கதையாக்கிவிட்டது.

கடந்த நூறு ஆண்டுகளில், இர்குட்ஸ்க் மாறிவிட்டதா இல்லையா என்று அனுமானிப்பதும் கடினமாகவே இருக்கிறது. அரசரின் தளபதியாக பணியாற்றிய கோல்சாக் ரஷ்யாவின் வில்லனாகவும் பார்க்கப்பட்டார்.

“மக்களின் எதிரியான கோல்சாக் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்பதே சோவியத் ரஷ்யாவின் வரலாற்று புத்தகங்களில் 70 ஆண்டுகளாக காணப்பட்ட தகவல்.

வெள்ளைப் படைகளின் தளபதி அலெக்சாண்டர் கோல்சாக்கை கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொன்றார்கள்.

ஆனால் இன்று அவருடைய பிரம்மாண்ட உருவச்சிலை இர்குட்ஸ்கில் நிறுவப்பட்டுள்ளது. அதில், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த கோல்சாக் வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் வீரர் என்று பொறிக்கப்பட்டுள்ளது.

கோல்சாக்கை வில்லனாக சித்தரித்து அந்த 70 ஆண்டுகளில் எழுதப்பட்ட பல புத்தகங்களை மாற்றியமைப்பது என்பது, எல்லையில்லா அதிகாரம் பெற்ற ஆட்சியாளர்களால்கூட முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

அதேபோல, ஐநூறு டன் தங்கப் புதையல் பற்றி மக்களிடையே உலாவிவரும் கதைகள் உண்மையா கட்டுக்கதையா என்பதை யாராலும் உறுதியாக அறுதியிட்டுச் சொல்லமுடியாது என்பதும் நிதர்சனமான உண்மை தானே?

Exit mobile version