சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்கு மஹிந்த ராஜபக் ஷ தரப்பினர் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்திருக்கின்றனர்.

அதாவது சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த தரப்பு இணைய வேண்டுமாயின் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி விலக வேண்டும் என்பது முதலாவது நிபந்தனையாகும்.

அத்துடன் சுதந்திரக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகள் மஹிந்த தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதும் நிபந்தனையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ தலைமையில் மிகவும் பரபரப்பாக அந்தக் கூட்டம் கொழும்பில் நடந்து கொண்டிருந்தது.

கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது, அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் எவ்வாறு அமையப் போகின்றது என்பது தொடர்பாக மஹிந்த ராஜபக் ஷவுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர். கலந்துரையாடல் பரபரப்பான கட்டத்தை அடைந்தபோது முக்கியமான ஒரு நபர் உள்ளே வருகிறார்.

மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் ஆச்சரியத்துடன் அவரைப் பார்க்கின்றனர்.

இரண்டு தரப்பையும் ஒன்றிணைக்கும் முயற்சியிலேயே நான் இங்கு வந்திருக்கின்றேன் என்று கூறிக் கொண்டு உள்ளே வந்தவர், தற்போது சுதந்திரக் கட்சியில் மைத்திரி தரப்பிலிருக்கின்ற அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆவார்.

இதன்போது அவரை வரவேற்ற மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவருடன் பல்வேறு விடயங்களை கலந்துரையாடினர்.

10500சுசில் பிரேமஜயந்த

அதாவது எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மஹிந்த ராஜபக் ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன தரப்பினை ஒன்றிணைத்து எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு சமாதானத் தூதுவராகவே சுசில் பிரேமஜயந்த இங்கு வருகை தந்திருந்தார்.

இதன்போது மைத்திரி, மஹிந்த தரப்புக்கள் இணைந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டிய அவசியத்தை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தீவிரமாக வலியுறுத்தினார்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தற்போதைய செயலாளர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் ஆகிய இருவரையும் சுசில் பிரேமஜயந்த கடுமையாக விமர்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமன்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி தலைமையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினரும் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மஹிந்த தலைமையிலான குழுவினருக்கு எவ்வளவு எடுத்துக் கூறியும் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றே கூறப்படுகின்றது.

அந்த வகையில் சுசில் பிரேமஜயந்தவின் இந்த சமாதான சமரச முயற்சி தோல்வியிலேயே முடிவடைந் திருக்கிறது.

நாங்கள் ஒருமுறை படுகுழியில் வீழ்ந்து விட்டோம். இரண்டாவது முறையும் படுகுழியில் வீழ்ந்து ஏமாறுவதற்கு தயாராகவில்லை என்று இதன்போது மஹிந்த தரப்பினர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவிடம் மிகவும் திட்டவட்டமாக கூறியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

எவ்வாறெனினும் மீண்டும் மஹிந்த தரப்பையும் மைத்திரி தரப்பையும் இணைப்பதற்கான சமரச முயற்சி தொடரும் என்ற செய்தியுடனேயே சுசில் பிரேமஜயந்த மஹிந்தவின் கூட்டத்திலிருந்து விடைபெற்று சென்றிருக்கிறார்.

தற்போதைய அரசியல் கள சூழலில் சுசில் பிரேமஜயந்த மஹிந்த ராஜபக் ஷவின் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டமையே ஒரு பரபரப்பான விடயமாக விவாதிக்கப்படுகின்றது.

உண்மையில் இது தற்போதைய அரசியல் சூழலில் இயல்பாக எடுத்துக் கொள்ளக்கூடிய விடயமல்ல.

அதாவது சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தரப்பையும் அதிலிருந்து பிரிந்து செயற்படுகின்ற மஹிந்த ராஜபக் ஷ தரப்பையும் இணைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக இதுவரை தெரிவிக்கப் பட்டபோதிலும் சுசில் பிரேமஜயந்தவின் இந்த சமாதான அல்லது சமரச முயற்சியே இந்த அரசியல் காய் நகர்த்தலை வெளி ச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

இந் நிலையில் மஹிந்த – மைத் திரி தரப்பு இணைந்து தேர்தலில் போட்டியிடுமா? அவ்வாறு போட்டியிட்டால் அரசாங்கத்துக்கு என்ன நடக்கும்? மஹிந்த ராஜபக் ஷ

தரப்பு கூறுகின்ற வகையில் மைத்திரி தரப்பு அரசிலிருந்து விலகுமா? மைத்திரியும் மஹிந்தவும் இணைந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியுமா? இவ்வாறு மைத்திரி மஹிந்த தரப்பு இணைந்தால் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறான அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கும் என்பனவே தற்போதைய அரசியலில் மிகவும் பரபரப்பாக பேசப்படுகின்ற விடயங்களாக காணப்படுகின்றன.

தாம் மஹிந்த தரப்புடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளவே முயற்சிப்பதாக சுதந்திரக் கட்சி தரப்பில் மிகவும் திட்டவட்டமான முறையில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சரவைப் பேச்சாளர் தயாசிறி ஜயசேகர, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிளவு படாமல் மஹிந்த, மைத்திரி தரப்பு இணைந்து போட்டியிட வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

அதற்காகவே முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம். மஹிந்தவின் கூட்டத்தில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இருதரப்பை இணைக்கும் ஒரு முயற்சியின் கட்டமாகவே கலந்து கொண்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் இரண்டு தரப்பும் ஒன்றிணைந்தே பயணிக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார்.

அவர் இந்த விடயத்தில் 100 வீதம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றார். அதனை மஹிந்த தரப்பு உணர்ந்து கொள்ள வேண்டும்.

மஹிந்த ராஜபக் ஷ இதனை புரிந்து சரியான பதிலை அளிக்க வேண்டும். நாம் எல்லோரும் கடந்த காலத்தில் மஹிந்தவுடன் இருந்தோம்.

எனவே இதனை புரிந்து கொண்டு இரண்டு தரப்பினரும் இணைந்து செயற் பட வேண்டியது அவசியமாகும் என்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர எம்.பி. குறிப்பிட்டிருந்தார்.

indexஅமைச்சர் தயாசிறி ஜயசேகர

அந்த வகையில் தயாசிறி ஜயசேகரவின் கூற்றைப் பார்க்கும்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியினர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணியுடன் இணைந்து போட்டியிட்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை விட அதிகமான வாக்குகளைப் பெறுவதற்கே முயற்சிப்பதாக தெரிகிறது.

அதாவது ஸ்ரீ லங்கா பொது ஜன பெர முன என்ற பெயரில் மஹிந்த ராஜபக் ஷ

தலைமையிலான கூட்டு எதிரணி தனித்தும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியும் தனித்தும் தேர்தலில் போட்டியிட்டால் அது நிச்சயம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கும் என்று சுதந்திரக் கட்சியினர் கருதுகின்றனர்.

இதன் காரணமாகவே எந்த வகையிலாவது கூட்டிணைய வேண்டும் என்ற முனைப்பில் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான அமைச்சர் ஜோன் செனவிரட்ண, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இந்த ஒன்றிணைக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருவதை காணமுடிகிறது. ஆனால் மஹிந்த ராஜபக் ஷ தரப்பில் இதற்கு பச்சைக் கொடி காட்டப்படுவதாக தெரியவில்லை.

சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்கு மஹிந்த ராஜபக் ஷ தரப்பினர் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்திருக்கின்றனர்.

சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த தரப்பு இணைய வேண்டுமாயின் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி விலக வேண்டும் என்பது முதலாவது நிபந்தனையாகும். அத்துடன் சுதந்திரக் கட்சியின் தலைவர் மற்றும செயலாளர் பதவிகள் மஹிந்த தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதும் நிபந்தனையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

அதாவது தற்போதைய நிலைமையில் சுதந்திரக் கட்சியில் மைத்திரி தரப்புக்கு தேவையான வகையில் பதவி மாற்றம் செய்யப்படுவதாகவும் எனவே அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட தலைவர் மற்றும் செயலாளர் பதவிகள் தமிழ் தரப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் மஹிந்த தரப்பால் கூறப்பட்டுள்ளது.

150714163845_maithripala_sirisena_624x351_bbc_nocreditஆனால் இந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் மைத்திரி தரப்பில் சாதகமான பதில் கொடுக்கப் படவில்லை என்றே கூறப்படுகிறது. இதேவேளை மஹிந்த தரப்பு மற்றுமொரு யோசனையை முன்வைத்திருக்கிறது.

அதாவது தேர்தலில் மைத்திரி மற்றும் மஹிந்த தரப்புக்கள் பிரிந்து போட்டியிட்ட பின்னர் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்கலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதையே சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் விரும்புகின்றனர். இந்த நிலைமையில் இரண்டு தரப்புகளுக்குமிடையிலான இழுபறிகள் தொடர்ந்தும் நீடித்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது இறுதி நேரத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் என்ற வகையில் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் என்ற வகையில் சுசில் பிரேமஜயந்தவும் திடீரென நீக்கப்பட்டனர்.

இந் நிலையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு இந்த தாக்கம் தற்போது இருக்கும் என கருதப்படுகின்றது.

அந்த வகையிலேயே அவர் தொடர்ந்து தற்போதைய செயலாளர்களை விமர்சித்து வருவதை காண முடிகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொறுத்தவரையில் இந்த தேர்தலில் அவரது கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டால் அது அரசியலில் சில அசௌகரியங்களை உருவாக்குவதாக அமையும்.

எனவே அவ்வாறான ஒரு அரசியல் அசௌகரியங்கள் ஏற்படுவதை ஜனாதிபதி விரும்ப மாட்டார்.

எனவே எப்படியாவது சுதந்திரக் கட்சியை இணைத்து தேர்தலில் ஒரு போட்டி மிக்க களத்தை ஐக்கிய தேசியக் கட்சியுடன் உருவாக்கவே சுதந்திரக் கட்சியின் மைத்திரி தரப்பு முயற்சிக்கின்றது.

அது ஒரு இயல்பான நிலைமையும் ஆகும்.

ஆனால் இரண்டு தரப்பும் இணையுமா என்பதிலேயே இங்கு சிக்கல்கள் உள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியானது மிகவும் பலமான முறையில் கீழ் மட்டத்திலிருந்து கட்சியை பலப்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தவரையில் மைத்திரி தரப்பும் மஹிந்த தரப்பும் பிரிந்து தேர்தலில் போட்டியிட்டாலே தனக்கு அது சாதகமாக அமையும் என கருதுகின்றது. சுதந்திரக் கட்சியின் பிளவானது ஐக்கிய தேசிய கட்சிக்கே சாதகமாக அமையும். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ

ஆகியோர் இணைந்து தேர்தலுக்கு முகங்கொடுப்பதை ஐக்கிய தேசியக் கட்சி விரும்பாது.

இந்த கட்சிகளுக்கிடையிலான அதிகாரப் போட்டிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடுவதற்கான கள வியூகங்கள் தற்போது உச்ச கட்டத்தை அடைந்திருக்கின்றன. இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மூன்று பிரதான கட்சிகளின் ஆதிக்கம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கிடையில் பலத்த போட்டி தேர்தலில் காணப்படும் என எதிர்வு கூறப்படுகின்றது.

இந் நிலையில் ஒருவேளை இவ்வாறு சுதந்திரக் கட்சி பிரிந்து போட்டியிட்டால் அதன் பின்னரான அரசியல் சூழலில் எவ்வாறான தாக்கங்கள் ஏற்படும் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.

எவ்வாறெனினும் தற்போதைய இந்த வித்தியாசமான அரசியல் சூழலில் என்ன நடக்கப் போகின்றது என்பதையே எதிர்வு கூற முடியாத நிலைமை காணப்படுகின்றது.

எவ்வாறெனினும் ஜனவரி மாதம் அல்லது பெப்ரவரி மார்ச் மாதங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடந்தே ஆக வேண்டும். அப்போது கட்சிகள் எவ்வாறு போட்டியிடப் போகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக வகுக்கப்படும் பல வியூகங்கள் நாட்டின் தேசிய நல்லிணக்க அரசியல் தீர்வு முயற்சிகளை பாதித்து விடக் கூடாது.

நீண்டகாலத்திற்கு பின்னர் தற்போது புரையோடிப்போயுள்ள தேசியப் பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

எனினும் தற்போது அரசியல் கட்சிகளில் காணப்படும் தேர்தல் வெற்றியை நோக்கியதான கள முயற்சிகள் எங்கே இந்த நல்லிணக்க மற்றும் அரசியல் தீர்வு முயற்சிகளை பாதித்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

எனவே அரசாங்கம் தமக்கு மக்களினால் வழங்கப்பட்டுள்ள ஆணை தொடர்பில் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டியது அவசியமாகும்.

நாட்டில் தேர்தல் களம் பரபரப்பாகுவதை காண முடிகிறது. கட்சிகளும் வியூகங்களை அமைப்பது தீவிரமடைந்துள்ளன. எவ்வாறான போட்டி நிலவப் போகின்றது என்பதை இன்னும் சில தினங்களில் கண்டு கொள்ளமுடியும்.

-ரொபட் அன்டனி-

Share.
Leave A Reply