இலங்கையில ஆணுறைகளை பெற்றுக் கொள்வதற்காக முதல் தடவையாக தானியங்கி இயந்திரமொன்று வீதி ஓரத்தில் பொருத்தப்பட்டுள்ளதாக இலங்கை குடும்பத் திட்டமிடல் சங்கம் தெரிவித்துள்ளது.
சில ஆண்களும் பெண்களும் பாமஸிகளில் சென்று ஆணுறைகளை பெற்றுக் கொள்வதை அசௌகரியமாக கருதும் காரணத்தினால் இவ்வாறு ஆணுறைகளை பெற்றுக்கொள்வதற்காக ஆணுறை விநியோக தானியங்கி இயந்திரம் (condom vending machine) பொருத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் பெரும்பாலும் இலங்கையில் ஏற்படக்கூடிய பாரதூரமான பாலியல் நோய்கள், கருக்கலைப்புகள், அநாவசிய கருத்தரிப்புகள் என்பன குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொழும்பு 7, புலர்ஸ் ஒழுங்கையில் (டொரிங்டன்) அமைந்துள்ள இலங்கை குடும்பத் திட்டமிடல் சங்கத்துக்கு அண்மையில் இந்த தானியங்கி ஆணுறை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதுடன், மேலும் சில இடங்களிலும் இவ்வாறான இயந்திரங்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைத்தொலைபேசி இலக்கத்தினை குறித்த இயந்திரத்தில் உள்ளீடு செய்ததன் பின்னர், தாம் உள்ளீடு செய்த இலக்கத்துக்கு குறுந்தகவல் மூலமாக PIN இலக்கமொன்று கிடைக்கபெறும். அந்த இலக்கத்தை இயந்திரத்தில் உள்ளீடு செய்வதன் மூலமாக ஆணுறைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதன்மூலம் பெற்றுக்கொள்ளப்படும் ஆணுறை பைக்கற்றொன்றுக்காக 50 ரூபா அறவிடப்படும் எனவும் இதற்கான கட்டணம் மாதாந்த தொலைபேசி கட்டணப்பட்டியலுடன் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
எனினும் தொலைபேசி பட்டியலில் கட்டணம் மாத்திரம் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் அது எதற்காக அறவிடப்பட்டது என்ற விபரம் குறிப்பிடப்படமாட்டாது எனவும் இலங்கை குடும்பத் திட்டமிடல் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வசதி தற்போது ஒரேயொரு தனியார் தொலைபேசி வலையமைப்புக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக அச்சங் கம் மேலும் தெரிவித்துள்ளது.