Site icon ilakkiyainfo

வகுப்பறையில் பிரிக்கப்பட்ட தோழிகள்…4-வது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி! சேலத்தில் சோக சம்பவம்!!

சேலம் சென்யிட் மேரீஸ் பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள், இன்று காலை 9:30 மணிக்கு, சேலம் ராஜகணபதி கோயில் அருகே உள்ள விடுதியின் நான்காவது மாடிமீது ஏறி, சாமி கும்பிட்டு கைகளைக் கோத்தவாறு கீழே குதித்தனர்.

இதில், ஜெயராணி என்ற மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவிஶ்ரீ என்ற மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனால், சேலம் மாவட்டத்தில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் உடையப்பக் காலனி ராம்நகரைச் சேர்ந்த சக்திவேல்-விஜி தம்பதிக்கு மெளலிதரன் என்ற மகனும், கவிஶ்ரீ என்ற மகளும் இருக்கிறார்கள்.

அதேபோல, சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ்- ரெஜினாமேரி தம்பதிக்கு ராபர்ட் என்ற மகனும் ஜெயராணி என்ற மகளும் இருக்கிறார்கள்.

உடல் நலக்குறைவால் ரெஜினாமேரி கடந்த ஆண்டு மரணமடைந்தார். கவிஶ்ரீயும், ஜெயராணியும் சேலம் நான்கு ரோட்டில் உள்ள சென்ட் மேரீஸ் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்கள்.

இருவரும் இணை பிரியா தோழிகளாகவும், வகுப்பறையில் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பார்கள். பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போதுகூட இருவரும் பேசிக்கொண்டிருப்பார்களாம்.

அதனால், இருவரையும் வெவ்வேறு இடங்களில் மாற்றி அமர வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையிலும் இருவரும் பேசுவதை நிறுத்தாமல் இருந்ததை அடுத்து, வகுப்பு பெற்றோர்களை அழைத்து வரும்படி ஆசிரியர் கூறி இருக்கிறார்.

அதையடுத்து, நேற்று பள்ளிக்கு வந்தவர்கள், வகுப்பறையில் புத்தகப் பையையும், பள்ளியின் சைக்கிள் ஸ்டேன்டில் சைக்கிள்களையும் நிறுத்திவிட்டு, பள்ளியைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள்.

இரவு நேரமாகியும் மாணவிகள் வீட்டுக்கு வராததால், பெற்றோர்கள் தனித்தனியே சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் காலை 9.30 மணிக்கு சேலம் சரவணபவன் ஹோட்டலை ஒட்டியுள்ள அப்சரா விடுதியின் 4-வது மாடி மீது ஏறி, இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு கைகளைக் கோத்தவாறு மேலே இருந்து குதித்தனர்.

இதில், ஜெயராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவிஶ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவத்துக்கு, இருவரின் இணைபிரியா நட்பே காரணம் என்று கூறபட்டாலும் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா எனத் தீவிர விசாரணை நடத்திவருகிறது போலீஸ்.

Exit mobile version