ilakkiyainfo

ஹாஜி மஸ்தான்: சுமை தூக்கும் தொழிலாளி நிழல் உலக மன்னன் ஆன கதை

ஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக வைத்துதான் `காலா` திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்ற பேச்சு பரவலாக உள்ளது.

அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், ஹாஜி மஸ்தானின் கதை சுவாரஸ்யமானது. அதை இரண்டு பகுதிகளாக வழங்குகிறோம்.

அது 1980 ஆம் ஆண்டின் ஜுன் மாதத்தின் ஒரு ஆயாசமான நாள். காற்றுடன் கூடிய கனமழை பெய்துக் கொண்டிருக்கிறது.

மும்பையின் பணக்கார பகுதியான படேர் சாலையில் உள்ள பங்களாவிலிருந்து ஒரு கருப்பு நிற மெர்சிடஸ் கார் வெளியே வருகிறது.

கார் சென்றதை அந்த பங்களாவின் பால்கனியில் நின்றுக் கொண்டிருந்த ஒரு நபர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரை பார்ப்பதற்கு கொஞ்சம் கவலையுடன் இருப்பது போல தெரிகிறது.

அவர் தான் அணிந்திருந்த வெள்ளை நிற குர்தாவின் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு 555 சிகரெட்டை எடுத்த பற்றவைக்கிறார்.

அந்த சிகரெட் முடிந்ததும் அடுத்தடுத்து என இரண்டு மணிநேரத்தில் அவர் 7 சிகரெட்டுகளை புகைத்தார். அதே நேரத்தில், அந்த மெர்சிடஸ் கார் மீண்டும் வீட்டுக்கு வருகிறது.

அந்த காரிலிருந்து 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இறங்கினார். கனமழையை பற்றி பொருட்படுத்தாமல், மழையில் நடந்து வீட்டிற்குள் செல்கிறார்.

அந்த பெண் ஜெனாபாய். அந்த பங்களாவின் உரிமையாளர் ஹாஜி மஸ்தான்.

ஜெனாபாயை நிழல் உலக தாதாக்கள் அனைவருக்கும் தெரியும். அவர் அங்கு மிகவும் முக்கியமான ஒருவர். அதுமட்டுமல்ல, அவர் போலீஸ் தகவல் தருபவரும் கூட.

ஜெனாபாய் கூறிய ஆலோசனை

மும்பை நிழல் உலகத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட `டோங்கிரி டு துபாய்` புத்தகத்தில், அதன் ஆசிரியர் எஸ். ஹுசைன் சையதி , “ஹாஜி மஸ்தான் ஜெனாபாயை தன் சகோதரியாக நினைத்தார்; கடினமான சூழ்நிலைகளில் அவரிடமிருந்து ஆலோசனை பெற்றார்” என்கிறார்.

அன்றும் அது போல ஒரு ஆலோசனை கேட்கதான் ஜெனாபாயை தன் வீட்டுக்கு அழைத்துவர வாகனத்தை அனுப்பி இருந்தார்.

100264002_hajimastan3

அன்று உணவு அருந்திய பின், ஹாஜி மஸ்தான் ஜெனாபாயிடம் தனது ஒரு சொத்து விஷயமாக பேச தொடங்கினார்.

எனக்கு சொந்தமாக மும்பையின் பெலாசிஸ் சாலையில் ஒரு சொத்து இருக்கிறது அதனை குஜராத் மாநிலத்தின் பன்சகந்தா மாவட்டத்தை சேர்ந்த `சிலியா` மக்கள் ஆக்கிரமிப்பு செய்து இருக்கிறார்கள் என்றார்.

அவரின் கட்டளையின் பெயரில் கரீம் லாலா, சிலியா மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த அனுப்பினார். ஆனால், சிலியா மக்கள் அவர்களின் கை, கால்களை உடைத்து திரும்ப அனுப்பினர்.

ஹூசைன் அந்த புத்தகத்தில் விளக்குகிறார், ஜெனாபாய் ஒரு பேனாவும், பேப்பரும் கேட்டார். அந்த பேப்பரில் ஒரு கோட்டை வரைந்தார். பின் மஸ்தானிடம், ‘உங்களால் இந்த கோட்டின் நீளத்தை குறைக்க முடியுமா? ஆனால், ஒரு நிபந்தனை இந்த கோட்டில் கைவைக்க கூடாது.’ என்றார்.

சலிப்படைந்த மஸ்தான், ‘நான் எவ்வளவு முக்கியமான விஷயம் பேச அழைத்தேன். ஆனால், நீ கோடு வரைந்து விளையாடிக் கொண்டு இருக்கிறாய்.’ என்றார்.

ஜெனாபாய் சிரித்துக் கொண்டே,’நான் விளையாவெல்லாம் இல்லை. உங்கள் கேள்விக்கான விடை இந்த புதிரில்தான் உள்ளது` என்று கூறினார்.

`எப்படி?

ஜெனாபாய் ஒரு பேனாவை எடுத்து அதன் அருகே, இன்னொரு பெரிய கோடு வரைந்தார். இப்போது அந்த கோடு சின்னதாகிவிட்டது அல்லவா என்றார். சிலியா மக்களைவிட அதிகாரம் மிகுந்த சக்தி படைத்த நபராக மாற மஸ்தானால் முடியும் என்று கூறினார்.

`எப்படி அது முடியும்?` என்று மஸ்தான் கேட்டதற்கு, ஜெனாபாய், ‘நீங்கள் தாவூத் கும்பலுக்கும், பதானுக்கும் இடையே அமைதி தூது செல்லுங்கள்… பின் அந்த இருவரும் உங்களுக்காக வேலை செய்வார்கள்’ என்றார்.

பதான் – தாவூத் நட்பு

அவர் நினைத்தது நடந்தது. மும்பையில் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த பதான் ஆட்களையும், தாவூத் ஆட்களையும் தனது பெடுல்-சுரூர் இல்லத்திற்கு அழைத்தார்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இரு அணிகள் இடையே சமாதானத்தை கொண்டு வந்தார். இனி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ள மாட்டோம் என்று குரானை வைத்து சத்தியம் வாங்கினார்.

எல்லாம் சுமூகமாக முடிந்தப் பின், மஸ்தான் தன் பிரச்சனையை இரு அணிகளிடமும் சொல்லினார்.

பதான்களும், தாவூத் அணியும் ஒன்றிணைந்து சிலியா மக்களை அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர், ஹாஜி மஸ்தான், அந்த நிலத்தில் பல மாடி கட்டடம் கட்டினார். அதற்கு மஸ்தான் டவர் என்று பெயரிட்டார்.

வாழ்வை மாற்றிய அரபு ஷேக் நட்பு

ஹாஜி மஸ்தான் தமிழ்நாட்டில் 1926 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி பிறந்தவர். எட்டு வயதில் அவர் மும்பை சென்றார். அவரது தந்தையுடம், க்ராஃபோர்ட் சந்தையில், சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடையை தொடங்கினார்.

பின் 1944 ஆம் ஆண்டு, பாம்பே துறைமுகத்தில் ஒரு சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்தார்.

அங்கு ஷேக் முஹம்மத் அல் – கலீப் என்ற அரபி அவருக்கு அறிமுகமானார்.

ஹூசைன் விளக்குகிறார், “அந்த சமயத்தில் இந்தியா வரும் அரபிகள் அனைவரும் உருது மொழி பேசுவார்கள். அப்போது மஸ்தானிடம் கலீப், டர்பனில் மறைத்து வைத்து தங்க பிஸ்கட்டுகளையும், கடிகாரங்களையும் துறைமுகத்திலிருந்து வெளியே எடுத்து வர உதவினால், பணம் தருகிறேன் என்று கூறி இருக்கிறார்.

மஸ்தான் ஒப்புக் கொண்டார். அவருக்காக வேலை செய்ய தொடங்கினார். மெல்ல இருவருக்குள்ளும் ஆழமான நட்பு ஏற்பட்டது. பின், கலீப் தனது வருவாயில் 10 சதவீதம் வரை மஸ்தானுக்கு கொடுக்க தொடங்கினார் “

“எல்லாம் சரியாக சென்றுக் கொண்டிருந்த போது, ஒரு நாள் கலீப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர்தான், மஸ்தானிடம் ஒரு பெட்டி முழுவதும் தங்க பிஸ்கட்டுகளை கொடுத்து இருந்தார்” என்று குறிப்பிடுகிறார்.

அந்த தங்க பிஸ்கட் பெட்டியை என்ன செய்தார் மஸ்தான்…? அரபியை ஏமாற்றி தனியாக தொழில் செய்ய தொடங்கினாரா? அல்லது போலீஸிடம் சொல்லியதே மஸ்தான் தானா?

(தொடரும்)

Exit mobile version