ilakkiyainfo

மைக்கேல் ஜேக்சன் எப்படி நேர்கோட்டில் சாய்ந்து நடனமாடினார்: இரகசியம் வெளியானது!! -(வீடியோ)

பாப் இசைக்கலைஞர் மைக்கேல் ஜேக்சன் தனது ஸ்மூத் கிரிமினல் (Smooth Criminal) இசைத் தொகுப்பில் எப்படி கீழே வீழாமல் நேர்கோட்டில் சாய்ந்து நடனமாடினார் என்பதற்கு நரம்பியல் நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.

1987 இல் வெளியான அந்த இசைத்தொகுப்பில் கீழே விழாமல் 45 டிகிரி கோணத்தில் தனது உடலை நேர்கோட்டில் சாய்த்து நடனமாடினார் மைக்கேல் ஜேக்சன்.

michael-jackson-danse-moonwalk-inclinaison-45-smooth-criminal-702x336

பலரும் அவரைப் பார்த்து செய்ய முயன்ற இந்த மிகவும் பிரபலமான நடன அசைவின் பின்னணியில் அதற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட காலணிகள் மற்றும் ஜேக்சனின் உடல் வலிமை இருந்ததை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த மஞ்சுல் திரிபாதி மற்றும் குழுவினர் இது குறித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றை ஜர்னல் ஆஃப் நியூரோசர்ஜரி எனும் சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர்.

அதில், “நன்கு பயிற்சி பெற்ற நடனக்கலைஞர்களால் தங்கள் உடலை நேர்கோட்டில் 25 முதல் 30 டிகிரி கோணம் வரை சாய்க்க முடியும். மைக்கேல் ஜேக்சன், புவி ஈர்ப்பு விசை கீழே இழுக்காமல் தனது உடலை 45 டிகிரி சாய்த்துள்ளார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜேக்சன் அந்த நடன அசைவை செய்யும்போது, நேராக இருக்கும் முதுகின் தண்டுவடத்தை விடவும், கணுக்கால்களில்தான் அதிகம் அழுத்தம் உண்டாகும்.

எனவே, மைக்கேல் ஜேக்சன் போன்ற திறமையும் வலிமையையும் உள்ளவர்களால் கூட ஒரு குறிப்பிட்ட அளவுதான் முன்னோக்கி நேராக சாய முடியும் என்கிறார் உதவிப் பேராசிரியர் மஞ்சுல்.

எனினும், அவரால் இன்னும் கூடுதலாக சாய முடிந்ததன் காரணம் அதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காலணிகளே என்கிறார் அவர்.

அவரது காலனிகளின் கீழ் பகுதியில் ‘V’ வடிவத்தில் ஒரு விரிசல் உண்டாக்கப்பட்டிருந்தது. அதில் தடுப்பாக கீழ் நோக்கி ஒரு ஆணி சொருகப்பட்டிருக்கும். மைக்கேல் ஜேக்சன் முன்னோக்கி சரியும் போது, அந்த ஆணி தரையை நோக்கி கீழே சென்று, தளத்துடன் இறுக்கப் பற்றிக்கொள்ளும். அது மைக்கேல் ஜேக்சனுக்கு கூடுதல் வலுவை கொடுத்துள்ளது.

காப்புரிமை பெறப்பட்ட இந்த காலணி கண்டுபிடிக்கப்படும் முன்பு, தனது இடுப்பைச் சுற்றி கச்சை ஒன்றைக் கட்டிக்கொண்டு ஒரு கயிற்றின் உதவியுடன் மைக்கேல் அந்த நடன அசைவை ஆடியுள்ளார்.

இந்த காலணிக்கான உந்துதலாக அமெரிக்க விண்வெளி வீரர்கள் பயன்படுத்திய காலணிகள் இருந்துள்ளன.

காலணிகள் உதவி இருந்தாலும் அந்த நடன அசைவுக்கு அதீத உடல் வலிமை தேவை.

“இதில் கணுக்காலில் காயம் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதைச் செய்வது அவ்வளவு ஒன்றும் எளிதல்ல,” என்கிறார் மருத்துவர் மஞ்சுல்.

 

Exit mobile version