ilakkiyainfo

கல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள்!! : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர்!! (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -15)

புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள்.

அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு செய்துகொள்ள சிலநாட்கலாவது யுத்தத்தை நிறுத்தவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுவார்கள் அந்த அவகாசத்தை பயன்படுத்தி ஒரு ஊடறுப்பினை செய்து காடுகளுக்குள் சென்று விடலாம் என்பது புலிகளின் திட்டமாக இருந்தது.

iranaimadu

ஜனவரி 25, 2009 அன்று  சுமார் 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட  நிரம்பி வழிந்த கல்மடுக் குளத்தின் அணைகளை  இராணுவம் முன்னேறி வரும் விசுவமடுப்பக்கமாக புலிகள் தகர்க்கிறார்கள்.

ஒரு மினி சுனாமியைப்போல பாய்ந்த சென்ற வெள்ளத்தில் ஏற்கனவே  தயார்  நிலையிலிருந்த சிறிய கடற்புலிப் படகுகளின் புலிகளும் தாக்குதலை நடத்த  சுமார்  இரண்டாயிரம்  இராணுவத்தினர்  கொல்லப் பட்டனர்.

இது போன்றதொரு விபரீதத்தை இலங்கை இராணுவம் எதிர்பார்காததால் புலிகள் எதிர்பார்த்தது போலவே நிலை குலைந்து போனார்கள்  என்பது உண்மை.

பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய கைகளை பிசைந்தபடி கருணாவைப் பார்த்தார்.

எதிர்பார்க்காத தாக்குதல்தான் ஆனாலும் புலிகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுவிடக்கூடாது அப்படி நிறுத்தினால் அவர்கள் நோக்கம் நிறைவேறி விடும் வேறு படை வளங்களை பாவித்து தாக்குதல் தொடர்ந்தும் நடக்கட்டும் என்றன்.

இறந்த பெருமளவான படையினரை தாண்டிய படியே வான்படையின் உதவியோடு புதுக்குடியிருப்பை நோக்கி இராணுவத்தினர் தாக்குதலை தொடர்ந்தார்கள்.இதனை புலிகள் எதிர்பார்க்கவில்லை.

களநிலைமைகள் இப்படிப் போய்க்கொண்டிருக்கும்போது யுத்தத்தை நிறுத்துமாறு வெளிநாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கத் தொடங்கியிருந்தது.

ஆரம்பத்தில் புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் ஏற்பாட்டில் ஐய்ரோப்பவில் இயங்கும் அவர்களது கோவில்களில் சிலர் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்கள்.

நாங்களும் போராட்டம் நடத்துகிறோம் என்று அவற்றை படம் பிடித்து வன்னிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் வன்னியில் மக்களின் இழப்பு அதிகரிக்க அதிகரிக்க மக்கள் தாங்களாகவே வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள்.

மக்களின் உணர்வுகளை தூண்டி அவர்களை போராட வைப்பதற்காக கொல்லப்படும் மக்களின்  வீடியோக்களும் படங்களும்  பல கோணங்களில் எடுத்து வன்னியிலிருந்து அனுபிக்கொண்டிருந்தர்கள்.

அதே நேரம் இதுதான் இறுதி யுத்தம் அனைவரும் உதவுங்கள் என்று பெருமளவான நிதி சேகரிப்பையும் அனைத்துலகச் செயலகத்தினர் செய்துகொண்டிருந்தனர்.

புலிகளைப் பலப்படுத்தி எப்படியாவது எம் மக்களை அழிவிலிருந்து காப்பாற்றி விடலாமென அங்கலாய்ப்போடு இலட்சக் கணக்கில் வங்கிகளில் கடன் எடுத்துக் கொடுத்தவர்களும் உண்டு .

இறுதி யுத்தத்துக்கு என சேகரித்த பல மில்லியன் யுரோக்களில் ஒரு சதம் கூட வன்னிக்கு அனுப்பப் படாமல் வெளிநாடுகளில் நிதி சேகரித்தவர்கலாலேயே அனைத்தும் அமுக்கப்பட்டது என்பது வேறு கதை.

அதே நேரம் வெளி நாடுகளில் நடந்த போராட்டங்களில் கூட பல சிறுபிள்ளைத்தனமான மக்களை முட்டாள்களாக்கும் வேலைகளும் நடக்கத்தான் செய்தது.


அம்பலவாணர்  வைத்தியசாலையில் 

சுவிஸ் நாட்டில் புலிகளின் பரப்புரைப் பொறுப்பாளரான அம்பலவாணர் என்பவர் வன்னியில் உடனடியாக யுத்த நிறுத்தம் கொண்டுவர வேண்டும் எனவே சாகும்வரை உண்ணாவிரதம் என அறிவித்து போராட்டத்தில் குதித்தார் .

தமிழ் ஊடகங்களில் எல்லாம் செய்திகள் வெளியானது.

இரண்டு நாளுக்கு மேல் அவரால் தாக்குப்பிடிக்க முடியாமல் போகவே அவரது மனைவியே காவல்துறைக்கு போனடித்து கணவன் சாப்பிடாமல் தற்கொலை முயற்சியில்  இறங்கியிருக்கிறார் அவரை   காப்பாற்றுங்கள் என்று சொல்லவும் அங்கு விரைந்த பொலிசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டுபோய் வைத்தியசாலையில் போட்டுவிட்டு போய் விட்டார்கள்.

அதேபோல லண்டனில் பரமேஸ்வரன் என்பவரும் சாகும்வரை உண்ணாவிரதம் என்று தொடங்கினார்.

இவர் கொஞ்சம் அதிகநாட்கள் உண்ணாவிரதம் இருந்தாலும்  யுத்தத்தை நிறுத்த பிரித்தானிய அரசு சார்பில் வழங்கப்பட்ட சில உறுதி மொழிகளையடுத்து உண்ணாவிரதம் கை விடப்படுகிறது என அறிவித்தார்.

ஆனால் யுத்தமும் நிறுத்தப்படவில்லை புலிகள் அழிக்கப்பட்டு இத்தனை வருடங்கள் கழிந்தும் பிரித்தானிய அரசு சார்பில் வழங்கப்பட்ட   உறுதிமொழி என்ன என்றும் அவர் வாய் திறந்து சொல்லவும் இல்லை சொல்லப் போவதுமில்லை .

பிரான்ஸ்  ஜேர்மனி கனடா என சாகும்வரை எல்லா நாடுகளிலும் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தவர்களின் நிலைமைகளும் இதே நிலைமைதான் அரசு தந்த உறுதிமொழிகளை அடுத்து தங்கள் உண்ணாவிதங்களை முடிதுக்கொண்டார்கள்.

ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை உண்ணாவிரதம் என்பது சிலநாட்களாக இருந்தால் அது உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சி அதுவே தொடர்ந்தால் தற்கொலைக்கான முயற்சி.

உண்ணாவிரதத்தை ஒரு போராட்ட வடிவமாக அவர்கள் பார்த்ததில்லை. அதனால்தான் மேற்குல நாடுகளில் போராட்டங்களை நடத்துபவர்கள் யாரும் உண்ணாவிரதம் இருப்பதில்லை.

எனக்குத் தெரிந்து உலகத்திலேயே ஒரு பொது இலட்சியத்துக்காக அதன் இலக்கை குறிவைத்து ஒரு சாகும்வரை உண்ணா விரதமிருந்து இலட்சியதுக்ககவே உயிரை விட்டவர்கள் இரண்டு பேர்தான் .

அந்த இருவருமே  ஈழத்தில் இந்தியப்படை காலத்தில் தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உண்ணா விரதமிருந்து உயிரை விட்டவர்கள்.

அதில் ஒருவன்  திலீபன். அடுத்தது அன்னை பூபதி .


இதில் அன்னை பூபதி கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்பதாலேயோ என்னமோ கொஞ்சம் கொஞ்சமாக அவரது பெயர் மறக்கடிக்கப்பட்டு தீலீபன் மடுமே நினைவுகளில் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறான் என்பதையும் குறிப்பிட்டேயாகவேண்டும் .

வெளிநாடுகளில் இப்படியான போராட்டங்கள் தொடங்கும்போதே தமிழகத்திலும் போராட்டங்கள் தொடங்கியிருந்தது முத்துக்குமாரின் மரணமும் அவன் எழுதிவைத்துவிட்டுப் போன கடிதமும் தமிழ்நாட்டு மக்களிடம் குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் பெரியதொரு எழுச்சியை உண்டுபண்ணியிருந்தது.

இந்த மக்கள் எழுச்சியை தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே தாங்கள் அறுவடை செய்துவிடவேண்டும் என்கிற நோக்கில் போட்டி போட்டுக்கொண்டு அதனை சிதைத்து அழிதுவிட்டிருந்தனர்.

அதில் எந்த கட்சிகளுமே சளைத்தவர்கள் அல்ல என்று நிருபித்திருந்தார்கள்.

முத்துக்குமார் மட்டுமல்லாது ஈழத்தமிழருக்காக யுத்தத்தை நிறுத்தச்சொல்லி தமிழ்நாட்டில் சுமார் பதின்முன்று பேர் தீக்குளித்து இறந்து போனார்கள்.

அவர்களது விலைமதிப்பற்ற உயிர்கள் உணர்வுகள் அனைத்துமே ஒரு காசுக்கு பிரயோசனமில்லாத தியாகங்களாகி விட்டது என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.

ஈழத் தமிழர்களுக்காக இத்தனை தமிழகத் தமிழர்கள் உணர்ச்சி வசப்பட்டு  தீக்குளித்துள்ளர்களே ஒரு ஈழத் தமிழனுக்கும் சொந்த இனத்துக்காக உணர்வே  வரவில்லையா என்கிற கேள்வி  பலருக்கும் எழுந்தபோது   2009 ம் ஆண்டு மாசி மாதம் 12 ம் திகதி வியாழக் கிழைமை இரவு சுவிஸ் நாட்டில் ஜெனீவா ஜ.நா சபைக்கு முன்பாக இலண்டனில் இருந்து வந்து முருகதாசன் என்கிறவர் தீக்குளித்து இறந்து போகிறார்.

முருகதாசனின் மரணமும் புலம்பெயர் தமிழர்களிடம் ஒரு உணர்வு ரீதியான எழுச்சியை கொடுத்திருந்தது என்பது உண்மை.

அதே நேரம் முருகதாசனின் மரணத்தின் பின்னால் பல சந்தேகங்களும் இருக்கவே செய்கின்றது.

அவை என்வெனில், முருகதாசன் இலண்டனில் இருந்து ஜெனிவா நோக்கி ஒரு பச்சைக் நிற காரில் நண்பர்களோடு புறப்பட்ட வீடியோ ஒளிப்பதிவென்றை  பிரித்தானிய காவல்த்துறையினர் கைப்பற்றி விசாரணைகளும் நடாத்தியிருந்தார்கள்.

அடுத்ததாக ஈழத் தமிழர்களின் படுகொலைகளையும் அவர்களது நிலைமையையும் சர்வதேசத்திற்கும் ஜ.நா சபைக்கும் எடுத்துச் சொல்லி அதனை தடுத்து நிறுத்தக்கோரி தீக்குளித்தவன் எதற்காக ஜ.நா சபை சுற்றாடலில் யாருமேயற்ற இரவு நேரம் தீக் குளித்தான்?.

முருகதாசன் தீக்குளித்து இறந்து போய் நீண்ட நேரத்தின் பின்னராகவே தீயணைக்கும்படையினர் அந்த இடத்திற்கு வந்துள்ளனர் .

எனவே முருகதாசனுடன் சென்றவர்கள் அதுவரை என்ன செய்தார்கள்? அவர்கள் யார்??.

ஈழத்தமிழர் விடயத்தில் சர்வதேசம் தலையிட வேண்டும் என முருகதாசனால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் ஏழுபக்க அறிக்கை என்று இணையத் தளங்களில் மட்டுமே செய்தியாக வெளியாகியிருந்தது.

அதன் மூலம் எங்கும் இல்லை.

குடும்பத்தின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த முருகதாசன் தனது இறுதிக் கணம் வரை தனது பெற்றோருடன் தொடர்பு கொள்வேயில்லை.

அவன் இறந்துபோன செய்தியை மறுநாள் மாலையளவில் செய்திகளை பார்த்தே அவர்கள் அறிந்து கொண்டிருந்தார்கள்.

அதுவரை அவர்களிற்கு தங்கள் பிள்ளை எங்கே இருக்கிறான் என்றே தெரிந்திருக்கவில்லை.
முருகதாசன்இப்படி ஏகப்பட்ட கேள்விகளும் சந்தேககங்களும் முருகதாசனின் மரணத்திற்கு பின்னால் இருந்தாலும். அதனை ஆராய்வது இந்தக்கட்டுரை யின் நோக்கமல்ல என்பதால் கடந்து செல்கிறேன் .

உலகமெங்கும் நடக்கும் ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் அனைத்தையும் அந்தந்த அரசுகளும் ஐ.நா  சபையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அதே நேரம் கிளிநொச்சியை  புலிகள் கைவிட்ட   பின்னர் ஆயுதங்களை கைவிடத் தயார் என அறிவித்தால் மீண்டும் பேச்சுவார்தைகள் தொடங்குவதைப் பற்றி பரிசீலிக்கிறோம் என ஒரு செய்தியையும் ஐ.நா  சபை நோர்வே ஊடாக புலிகளுக்கு அனுப்பியிருந்தார்கள்.

அதனையும் நிராகரித்த புலிகள் யுத்தத்தை நிறுத்துங்கள் ஆயுதங்களை கடைசிவரை கைவிட முடியாது என அறிவித்து விட்டிருந்தார்கள்.

சரி இனி உங்கள் விருப்பம் இனி ஆயுதங்களை கைவிட சொல்லி உங்களுக்கு தொந்தரவு கொடுக்கமாட்டோம் நீங்கள் விரும்பினால் எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லியதோடு  ஐ.நா  சபையும் புலிகளுடனான தொடர்புகளை நிறுத்தி விட்டது .

புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று கவனித்தவர்கள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சேவிடம் உங்களுக்கு இராணுவ ஆலோசனைகள் தேவைப்பட்டால் தாராளமா கேளுங்கள் வழங்க தயாராக இருக்கிறோம் என்றவர்களிடம்  “புலிகளின் இதயம்தான் வன்னியில் இருக்கிறது  புலிகளின் மூளை இங்கே எங்களிடம் உள்ளது ” என்று கருணாவைக் காட்டி சிரித்தார்.

தொடரும்…

-சாத்தரி-

புலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது!! : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -14)

Exit mobile version