ilakkiyainfo

சூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை… ஏன்!?

`சீதக்காதி’ படத்துடன் 25 படங்களை நிறைவு செய்கிறார் விஜய் சேதுபதி. அது குறித்த சிறப்பு கட்டுரை

தமிழ்த் திரையுலகுக்கு ரஜினி வந்தபோது, அவர் முன் இருந்த மிகப் பெரிய சவால், தமிழில் வசனம் பேசி நடிப்பதுதான். அதனால் வசனத்தை முழுக்க மனப்பாடம் செய்துவிட்டு, அதை கேமராவுக்கு முன்பு தனக்கே உரிய பாணியில் வேக வேகமாக ஒப்பித்துவிடுவார்.

அப்படி அவர் ஆரம்ப காலத்தில் வேகமாகப் பேசிய அந்த பாணிதான் வழக்கமான வசன உச்சரிப்பை உடைத்து, ஒரு புது வடிவத்தை அறிமுகப்படுத்தியது. அதுவே பின்னர் `ரஜினி ஸ்டைல்’ என்று நிலைக்கவும் செய்தது.

இன்றும் கூட ரஜினியின் குரலை மிமிக்ரி செய்பவர்கள் அப்படிப் பேசுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். யாராலும் மாற்று செய்யமுடியாத ஒரு ஸ்டைல் அது.

ஆனால் சில விஷயங்களுக்கு மாற்று நம் கண்களுக்குத் தெரியாது. புத்திக்கும் உரைக்காது. அதேவேளையில், நம்மையும் அறியாமல் நாம் அதை ரசிக்கத் தொடங்கியிருப்போம்.

இன்னொரு சூப்பர் ஸ்டாரை அதிலிருந்து உருவாக்கவும் ஆரம்பித்திருப்போம். இதனால்தான் அவரை பிடித்தது என்பதே மறந்து போய் ஒருவரை ரசிப்பதை விட ஒரு ரசிகனாக நாம் செய்த பேறு வேறு என்ன இருக்கப்போகிறது, விஜய் சேதுபதி நமக்குள் நுழைந்ததும் அப்படித்தான்.

3_16113

ஒரு பாலசந்தரோ, பாரதிராஜாவோ விஜய் சேதுபதிக்குக் கிடைக்கவில்லை. கிடைத்ததெல்லாம் குறும்பட இயக்குநர்கள்தாம். `பீட்சா’ அவருக்கான முதல் வெற்றியைத் தந்தது.

முதல் படமான `தென்மேற்குப் பருவக்காற்று’ தேசிய விருது பெற்றாலும், அது காந்தி கணக்குதான். `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் தாடி இல்லாமல் அவர் இருக்கும் உருவத்தை இப்பொழுது பார்த்தால் சிரிப்பாக இருக்கும்.

`தில்லுமுல்லு’வில் மீசை இல்லாத ரஜினியைப் பார்த்தது போன்ற ஒரு விஷயம் அது. இதில் ஒற்றுமை என்னவென்றால் இரண்டுமே நகைச்சுவை படம்.

“ப்ப்பா.. யார்ரா இந்தப் பொண்ணு.. பேய் மாதிரி இருக்கா..” என்று விஜய் சேதுபதி பேசிய வசனம் அப்போதைய ட்ரெண்டிங்காக மாற, மெள்ளக் காற்று வீசத் தொடங்கியது.

தலையில் அடிபட்டதும் அவர் மறுபடி மறுபடி பேசும் நீண்ட வசனம் ஒரு கட்டத்தில் வெறும், “என்னாச்சி..?” என்று சுருங்கியது. ஆனால், ஒவ்வொருமுறையும் `என்னாச்சி’ என்று நம் சக நண்பனைக் கேட்கும்போது அதில் விஜய் சேதுபதியின் முகம் வந்துபோனபோதுதான் ஒரு நடிகராக அவரின் வெற்றி சரித்திரம் ஆரம்பித்தது.

தமிழ் சினிமாவுக்கு எனச் சில எழுதப்படாத விதிகள் உள்ளன. இரண்டு படங்கள் தொடர்ந்து நன்றாக ஓடினால் மூன்றாவது படம் ஒரு ஆக்‌ஷன் மாஸ் ஹீரோ படமாக இருக்கும்.

இதை அந்த நாயகன் தேர்ந்தெடுக்கிறாரோ இல்லையோ, தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் முடிவுசெய்து விடுவார்கள்.

“ஊட்டியில ஒரு கான்வென்ட்டு… அங்க நீங்க ஸ்டூடன்ட்டு…” வகையறா கதைகள் வரிசையாய் வந்து காதுகளை அடைக்கும்.

அதிலிருந்து தப்பித்த நாயகர்கள் மிகக் குறைவு. விஜய் சேதுபதி அதில் முக்கியமானவர். `சூதுகவ்வும்’ அப்படித்தான் வந்து சேர்ந்தது.

தன்னைக் குறும்படத்தில் இயக்கிய நலன் குமரசாமியின் முதல் படத்தில் நடித்தார். எல்லா இடத்திலும் மொக்கை வாங்கும் ஒரு கடத்தல்காரன் என்கிற கதாபாத்திரம் மட்டும் வித்தியாசமானதல்ல.

வெற்றி பெற்ற முதல் இரண்டு படத்தில் தாடி இல்லாமல் இளமையான தோற்றத்தில் நடித்த ஒருவர், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், நடுத்தர வயது மனிதராகவும், நாயகி கூட கற்பனையில் மட்டுமே வருபவளாகவும் இருப்பதுபோல் நடிப்பதெல்லாம் இன்றைய காலகட்டத்தில் நாம் கிள்ளிப் பார்த்து உண்மைதான் என்று உணரவேண்டிய விஷயங்கள்.

`சூதுகவ்வும்’ வெற்றி ஏன் முக்கியமானது என்பதை நாம் ஆராய்ச்சி செய்தே ஆகவேண்டும். இணையப் பயன்பாடு எல்லையில்லாமல் விரிந்த காலகட்டத்தில் வந்த படம் அது.

ஃபேஸ்புக், ட்விட்டர் என்று உலகமே உள்ளங்கையில் சுருங்கியிருந்த நேரம். டோரென்ட் வெப் சைட்கள் மூலம் எல்லா உலகப்படமும் ஒரு ஹார்டு டிஸ்க் வடிவில் வீற்றிருக்கத் தொடங்கியிருந்தது.

எல்லாப் படங்களுக்குமான விமர்சனம் படம் வெளியான அரைமணி நேரத்தில் வர ஆரம்பித்திருந்தது. இதற்கென்றே தனித் திரைப்படக் குழுக்களும், பிளாக்கில் எழுதும் எழுத்தாளர்களும் இருந்தனர்.

அவர்களை ஒட்டுமொத்தமாக விஜய் சேதுபதி கவர்ந்தார். தனது இமேஜ் இதுவென எந்தவித முன்னெடுப்பும் எடுக்காமல் ஒரு நடிகர் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் என்கிற செய்தி அந்தச் சூழ்நிலையில் மிகப் புதிது. விஜய் சேதுபதியை வாரி அணைத்துக் கொண்டனர் இந்தத் தலைமுறையினர்.

ஆனால், விஜய் சேதுபதிக்கு இந்தப் பாதை எளிமையானதாக இல்லை. பரீட்சார்த்த முயற்சி செய்வதில் இருக்கும் மிகப் பெரிய பிரச்னை என்னவென்றால், குறைந்தபட்சம் விமர்சன ரீதியிலாவது படம் நன்றாக இருப்பது அவசியம். இதை தான் நடிக்கும் எல்லாப் படங்களிலும் செய்தே ஆகவேண்டும்.

இல்லையெனில், ரசிகன் வழக்கம்போல கிம் கி டுக்-ஐ நாடி போய்விடுவான்; கிறிஸ்டோபர் நோலனை தரிசிக்க சென்றுவிடுவான்.

அவனைத் திருப்திப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’வில் தனது பங்களிப்பை விஜய் சேதுபதி சிறப்பாகச் செய்திருந்தாலும் கூட ஒரு பூரணமின்மை அதிலிருந்தது.

பின்னர் நண்பர்களுக்காக அவர் செய்த `ரம்மி’ தோற்க, அவரது வசனத்தில் உருவான `ஆரஞ்சு மிட்டாய்’ அப்படியே சுருண்டுவிட, நிலைமை கொஞ்சம் கையை மீறித்தான் போனது. ஆனால், பதுங்கிய புலி மீண்டும் பாயத் தொடங்கியபோது, அதில் மும்மடங்கு வீரியம் இருந்தது.

நானும் ரெளடிதான்’ படத்தின் வெற்றி அதற்கு சாட்சி. “ஆர் யூ ஓகே பேபி..?” என்கிற வசனம் பட்டையைக் கிளப்ப, “இதான் இதான் இதே ஃபயர்தான் எனக்கு வேணும்…” என ராகுல் தாத்தாவிடம் கேட்ட விஷயத்தை ரசிகர்கள் விஜய் சேதுபதியிடம் கேட்க ஆரம்பித்தார்கள்.

விஜய் சேதுபதி மாஸ் ஹீரோவாக மாற ஆரம்பித்தார். அதற்கான விதை `சேதுபதி’ படத்தில் போடப்பட்டது. இன்றளவும் நான் வியக்கும் ஒரு படம் `சேதுபதி’.

அதற்குக் காரணம் விஜய் சேதுபதி. ஏனென்றால் அதற்கு முன்பு வரை முதன்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் ஒரு நாயகன் நடிக்கும்பொழுது, அவரையும் அறியாமல் அவரது நாடி நரம்பெல்லாம் போலீஸ் ரத்தம் ஓட ஆரம்பித்துவிடும்.

முறுக்கி விட்ட மீசையும், ஹேங்கரில் மாட்டிய தோள்பட்டையைக் கொண்ட நடையுமாக கண்களில் ஆத்திரம் கொப்பளிக்க வலம்வரும் நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு மத்தியில், கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாத ஓர் உடல்மொழியைக் கொண்ட காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி வந்தார். கவர்ந்தார்.

`சேதுபதி’ உண்மையில் விஜய் சேதுபதி – இயக்குநர் அருண்குமார் கூட்டணியின் ஸ்வீட் ரிவெஞ்ச். ஆம், அந்தக் கூட்டணி தந்த அற்புதமான படம் `பண்ணையாரும் பத்மினி’யும்.

ஆனால், அப்படத்துக்கு வர்த்தக ரீதியில் வரவேற்பில்லை. `உங்களுக்கு என்ன பக்கா மாஸ் – மசாலா ட்ரீட்தானே வேணும், இந்தா பிடிங்க இந்தப் படத்தை’ எனும் ரீதியில் பெரும்பான்மையான பார்வையாளர்களை மனதில் நிறுத்தி எடுக்கப்பட்ட படமாகவே `சேதுபதி’யைப் பார்க்கலாம். சொல்லி அடித்த கில்லியாக அந்தப் படம் வெளுத்து வாங்கியது.

ஆனால், விஜய் சேதுபதியே எதிர்பாராத ஒரு விஷயம் `விக்ரம் வேதா’வின் மூலம் நடந்தது. `றெக்க’ படத்தில் அவ்வளவு சண்டை போட்டும் நடக்காத ஆக்‌ஷன் ஹீரோ இமேஜ், வயதான கேங்ஸ்டராக நடித்தபோது கிட்டியது. “ஒரு கத சொல்ட்டா சார்…” வசனம் ஒவ்வொரு வீதியிலும் ஒலிக்க விஜய் சேதுபதி இதோ இந்தப் புள்ளியில் கொண்டாடப்பட ஆரம்பித்தார்.

இன்று `விக்ரம் வேதா’வுக்கு நேர்மாறாக `96′-ல் அவர் வாங்கும் கைதட்டல்கள் நமக்குச் சொல்லும் சேதி ஒன்றே ஒன்றுதான். அது: “செய்ற வேலையைச் சரியாச் செய்யணும் சார். இல்லைன்னா நம்மளை வச்சி செய்றதுக்கு ஆளுங்க ரெடியா இருப்பாங்க!”.

அப்படி ஒன்றும் நீண்ட நெடிய சரித்திரம் கொண்டதல்ல இவரின் திரை வாழ்க்கை. துணை – உறுதுணை நடிகராக வாழ்வைத் தொடங்கி, எதிர்பாராமல் கதாநாயனாக நடிக்கத் தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் முக்கிய வியாபாரமாக மாறியது வரையிலான மொத்த வருடங்களின் எண்ணிக்கை 15-க்குள்தான்.

இந்த ஆண்டுகளில் அவரது உழைப்பை நாம் உணர முடியும். ஒவ்வொரு மாதத்திலும் சேதுபதி நடித்த இரண்டு படங்கள் வெளியாகின்றன என்கிறது ஓர் ஆய்வு.

யார் நாயகன், யார் நாயகி என்பதெல்லாம் கணக்கில் இல்லை. ஆனால் இவர் இருக்கிறார். அதுவும் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறார்.

சுமார் மூஞ்சி குமார் பேசும் வசனங்கள் பாதி புரியாது. ஆனால், சுமார் மூஞ்சி குமாரைப் பிடிக்காத ஆளை நான் இதுவரை கண்டதில்லை. `காதலும் கடந்து போகும்’ கதிர் கதாபாத்திரத்தில் வேறு யாரேனும் நடித்திருக்கலாம் என்று யோசிக்கவே பயமாக இருக்கிறது.

காரணம், அந்த நேர்முகத் தேர்வு காட்சியில் வரும் அதிகாரிகளை களைப்படைய வைக்க பேசிக்கொண்டே இருக்கவேண்டும்.

அது இவரால் மட்டுமே இயலும். ஏனெனில், எவ்வளவு வேகமாக, எத்தனை பக்க வசனம் தொடர்ந்து பேசினாலும், களைப்படையாமல் நாம் கேட்க வேண்டுமெனில், அங்கே இவர் மட்டுமே இருக்கவேண்டும். ஆனால், அதே விஜய் சேதுபதி அதே `காதலும் கடந்து போகும்’ படத்தில், “அப்புறம் என்ன… அவ இருந்தா… நானும் இருந்தேன்…” என்று சொல்வதற்கும் வேண்டும்.

விமர்சகர்கள் மட்டுமல்ல; ரசிகர்களுக்கும் அடிக்கடி உச்சரிக்கும் வாக்கியம்: `வித்தியாசமான நடிப்பு.’ இந்தச் சிறு வாக்கியத்தைப் பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.

நடிப்பில் வித்தியாசம் என்பது மேக்கப்புகளை அப்பிக்கொண்டு தோற்றத்தை மாற்றிக்கொண்டு வலம் வருவது அல்ல; மாறாக, கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன் உடல் மொழிகளையும் உணர்வுகளையும் கச்சிதமாக வெளிப்படுத்துவது.

அதை மலையாளத்தில் ஃபகத் ஃபாஸிலிடமும், தமிழில் விஜய் சேதுபதியிடமும் வெகுவாகக் காணலாம். விஜய் சேதுபதி ஒரே மாதிரி நடிக்கிறார் என்று சொல்லும் பலரும் அவர் நடிக்கும் கதாபாத்திரத் தன்மையை உள்வாங்குவதில்லை.

விஜய் சேதுபதி என்றாலே தனித்துவம் என்பதாகிவிட்டது. அதை மணிரத்னமும் தீவிரமாக ரசித்தாரோ என்னவோ அவர் தனது `செக்கச்சிவந்த வானம்’ படத்தில் விஜய் சேதுபதியை விஜய் சேதுபதியாகவே காட்டியதுபோல் நமக்குத் தோன்றியது. எல்லாவற்றுக்கும் மேலாக, ரசிகர்களில் பெரும்பாலானோரும் திரையில் காணும் விஜய் சேதுபதியை தங்களைப் பார்ப்பதுபோலவே கருதி `எம்பத்தைஸ்’ செய்துகொள்வதும் அவரைக் கொண்டாடித் தீர்ப்பதற்கு முக்கியக் காரணம்.

திரையில் மட்டுமன்றி, நிஜ வாழ்விலும் தன் `மேக்கப்’ இல்லாத அணுகுமுறையாலும் பேச்சாலும் எளிதில் மனதுக்கு நெருக்கமாகிவிடுகிறார் விஜய் சேதுபதி.

சில இடங்களில் நாம் தொடர்ந்து பிரகாசிக்க வேண்டி ஏகப்பட்ட தகிடுதத்தங்கள் செய்வோம். ஆனால், அது எல்லாமே தோல்வியில்தான் முடியும்.

எப்பொழுதும்போல் தன்னைத் தொலைக்காத சுயத்தோடு இருப்பவன் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருப்பதை பின்னர்தான் கவனிப்போம். விஜய் சேதுபதியும் அப்படித்தான்.

எந்தக் கதாபாத்திரத்திலும் அவர் தன்னைத் தொலைப்பதேயில்லை. நான் முன்பே சொன்னதுபோல் ரஜினிக்குப் பிறகான ஒரு தனிப்பட்ட ஸ்டைல் கொண்ட நடிகராக நாம் விஜய் சேதுபதியைப் பார்க்கலாம்.

அதேநேரத்தில் பரீட்சார்த்த முயற்சிகள் தொடர்ந்து செய்யும் வகையில் நாம் அவருக்குள் இருக்கும் அந்த தாகத்தையும் கண்டறிய முடியும். இரண்டும் கலந்த அபூர்வ கலவை கொண்ட ஒரு கலைஞன் கொண்டாடப்படுவதில் என்ன ஆச்சர்யம் இருந்துவிட முடியும்?

Exit mobile version