கூகுளில் இடியட் (Idiot) எனத் தேடினால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புகைப்படம் வருகிறதே? என எழுப்பப்பட்ட கேள்விக்கு கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக்குழு முன்பு கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆஜரானார்.
அப்போது, கூகுள் தொடர்பாக எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். சுமார் 3 மணி நேரம் பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன.
அவையனைத்தையும் முகம் சுளிக்காமலும் கோவப்படாமலும் அவர் பதிலளித்த விதம் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
தேர்தலின்போது குடியரசு கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் மறுத்தார். அரசியலில் பாரபட்சத்துடன் செயல்பட்டதில்லை என்று விளக்கினார்.
மேலும் ஜோய் லாஃவ்க்ரேன் என்பவர், `கூகுளில் ஆங்கிலத்தில் முட்டாள் (idiot) என டைப் செய்தால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புகைப்படங்கள் வருவது ஏன்?’ எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு சுந்தர் பிச்சை, “கூகுள் எதையும் உள்நோக்கத்துடன் செய்யவில்லை. குறிப்பிட்ட ஒரு வார்த்தையைத் தேடும்போது, கூகுள் பலகோடி இணையப்பக்கங்களை ஆய்வு செய்யும்.
அதில், ட்ரம்ப் பெயரை பெரும்பாலானோர் என்ன அர்த்தத்துடன் பயன்படுத்துகின்றனர் உள்ளிட்ட 200 விஷயங்களைக் கணக்கில் கொண்டுதான், முடிவுகளை கூகுள் வெளிப்படுத்தும். கூகுளின் அல்கரிதம் எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.