தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டம்விடும் போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடத்தப்பட்டது.
அதன்போது பல்வேறு விதமான பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன.
குறிப்பாக ஆகாயம், கடல் மற்றும் தரைகளில் தாக்குதல் நடத்தக்கூடியவாறு டாங்கியின் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட பட்டம் ஒன்று வானில் பறக்கவிடப்பட்டது.
குறித்த பட்டம் வானில் பறந்தபோது, கூடியிருந்த மக்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் விதவிதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு பட்டங்களும் வானில் பறக்கவிடப்பட்டன.
அதன்படி, ‘செய் அல்லது செத்துமடி’ எனும் வாசகத்துடன் அங்கயற்கண்ணி (பெண் கடற்கரும்புலி) என பெயர் பொறிக்கப்பட்ட படகு பட்டம், சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்ட யுத்த டாங்கி பட்டம்,
இராட்சத எறும்பு பட்டம், தையல் இயந்திரத்தில் தைக்கும் பெண் பட்டம், சமயலறை, விளையாட்டு, மைதானம் போன்ற உருவத்தில் வடிவமைக்கப்பட்ட 84 பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன.
அதில் முதலாமிடத்தை ம. பிரசாந்த் வடிவமைத்த சமையலறை பட்டமும் , இரண்டாமிடத்தை த. தயாளன் வடிவமைத்த ராதையும், புஷ்பக விமானமும் பட்டமும் , மூன்றாமிடத்தை ஸ்ரீ. நிரோசன் வடிவமைத்த விண் பீரங்கி பட்டமும் பெற்றுக்கொண்டன.