விக்னேஸ்வரனின் ஜனநாயகம் ‘தமிழ் மக்கள் பேரவையிலும் சரி, மாற்றுத் தலைமைக்கான
உருவாக்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்தபோதும் சரி, விக்னேஸ்வரனை முன்னுக்குத் தள்ளி விடுவதில் முக்கியமாகச் செயற்பட்ட பிரபலங்களில் பெரும்பாலானவர்கள், கட்சி என்று வந்ததும், பின்வாங்கிக் கொண்டுள்ளனர்’.
தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தின்போது, ஏற்படுத்திய அதிர்வு, தமிழ் மக்கள் கூட்டணியின் உருவாக்கத்தில் இருக்கவில்லை. தமிழ் மக்கள் கூட்டணியின் உருவாக்கத்தில் இருந்தளவு அதிர்வை, அதன் நிர்வாகிகள் அறிவிப்பு ஏற்படுத்தவில்லை.
விக்னேஸ்வரன் என்ற தனிமனித ஆளுமையை சுற்றி உருவாக்கப்பட்ட அரசியல் விம்பத்தின் அதிர்வு குறைந்து கொண்டு வருகிறதா என்ற கேள்வியை இது எழுப்பி நிற்கிறது.
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது மத்திய செயற்குழுக் கூட்டத்தை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்தார்.
முதலாவது வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதற்கு முதல் நாள், தனது புதிய கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியின் உருவாக்கம் பற்றி அவர் அறிவித்திருந்தார்.
தமிழ்த் தேசிய அரசியல் பலத்த அதிர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட, விக்னேஸ்வரனின் புதிய கட்சி பற்றிய அறிவிப்பு, சில நாட்களில் எதிர்பாராத சூழலுக்குள் சிக்க நேரிட்டது.
அவர் தனது கட்சியை அறிவித்த இரண்டு நாட்களிலேயே, கொழும்பு அரசியலில் ஏற்பட்ட ஆட்சிக் குழப்பங்கள், விக்னேஸ்வரனின் புதிய கட்சியை மூழ்கடித்து விட்டன.
கொழும்பு அரசியல் பற்றிய பரபரப்பும், அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகமுமே அதிகம் பிரபலமானது. இது, புதிய அரசியல் கட்சியின் எழுச்சிக்கு, வேகத்தடை போட்டது போல அமைந்து விட்டது.
ஆனாலும், விக்னேஸ்வரன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தி, புதிய கட்சிக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதில் ஈடுபட்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக – கிட்டத்தட்ட புதிய கட்சியை அறிவித்து மூன்று மாதங்களுக்குப் பின்னர், கட்சியின் நிர்வாகிகளை அறிவித்திருக்கிறார்.
கடந்தவாரம் நடந்த மத்திய குழுக் கூட்டத்திலேயே கட்சியின் நிர்வாகிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலைப் பார்த்தவர்களுக்கு பலத்த ஏமாற்றம். ஏனென்றால், அதில் பொதுமக்களுக்கு அதிகம் அறிமுகமானவர்கள் அரிதாகவே இருந்தனர். எதிர்பார்க்கப்பட்ட பலரையும் காணவில்லை.
எல்லாத் தரப்பினரையும்- அதாவது எல்லா தொழில்களையும் செய்கிறவர்களையும் உள்ளடக்கியதாக தமது கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனாலும், கட்சி உருவாக்கம் ஒன்றில், ஆளுமை மாத்திரமன்றி அறிமுகமும் முக்கியமானது. தமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகிகள் பட்டியலில், பேராசிரியர் வி.பி.சிவநாதன், அருந்தவபாலன், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் கிருஷ்ணமீனன், திருகோணமலை நகரசபை முன்னாள் உறுப்பினர் நந்தகுமார் போன்றோரைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், வேறெவரது பெயர்களோ, முகங்களோ ஊடகங்களில் அறியப்படாதவை.
கொள்கை வழியில் ஒரு கட்சியை உருவாக்க முனையும் போது, அதற்கு ஒத்துப்போகத்தக்க, ஒத்துழைக்கக் கூடியவர்களையே அரவணைத்துக் கொள்ள முடியும்.
தமிழ் மக்கள் பேரவையிலும் சரி, மாற்றுத் தலைமைக்கான உருவாக்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்தபோதும் சரி, விக்னேஸ்வரனை முன்னுக்குத் தள்ளி விடுவதில் முக்கியமாகச் செயற்பட்ட பிரபலங்களில் பெரும்பாலானவர்கள், கட்சி என்று வந்ததும், பின்வாங்கிக் கொண்டுள்ளனர்.
வடக்கு மாகாணசபையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளியான தமிழரசுக் கட்சியுடன் முரண்பட்டுக் கொண்டு, விக்னேஸ்வரனுக்கு வலது, இடது கரங்களாக, செயற்பட்ட முன்னாள் மாகாண அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரும் கூட, அவரது கட்சியில் இணைந்து கொள்ளவில்லை.
தாம் உருவாக்கிய பசுமை இயக்கத்தின் தலைவராக ஐங்கரநேசனும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமாக அனந்தி சசிதரனும், தமிழ் மக்கள் கூட்டணியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தயாராக இருக்கின்றனரே தவிர, விக்னேஸ்வரனின் கட்சியில் இணையத் தயாராக இல்லை.
இது, விக்னேஸ்வரனுக்குப் பின்னால் இருப்பவர்கள், அவரோடு அரசியல் பயணம் செய்ய விரும்புபவர்கள் கூட, அவரது அரசியல் கொள்கை கோட்பாடுகளை முழுதாக ஏற்றுச் செயற்படத் தயாரில்லாத நிலையை வெளிப்படுத்துகிறது.
தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தின்போது, ஏற்படுத்திய அதிர்வு, தமிழ் மக்கள் கூட்டணியின் உருவாக்கத்தில் இருக்கவில்லை. தமிழ் மக்கள் கூட்டணியின் உருவாக்கத்தில் இருந்தளவு அதிர்வை, அதன் நிர்வாகிகள் அறிவிப்பு ஏற்படுத்தவில்லை.
விக்னேஸ்வரன் என்ற தனிமனித ஆளுமையை சுற்றி உருவாக்கப்பட்ட அரசியல் விம்பத்தின் அதிர்வு குறைந்து கொண்டு வருகிறதா என்ற கேள்வியை இது எழுப்பி நிற்கிறது.
அரசியலில் என்று வரும் போது, ஒரு அரசியல் கட்சியில், தலைமைத்துவக் கட்டமைப்பு முக்கியமானது. அதன் மீது அதிகாரம் செலுத்தக்கூடிய நிர்வாகக் கட்டமைப்பு மிகமிக முக்கியமானது. அதில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய தரப்புகள் உன்னிப்பாக அவதானிக்கப்படும்.
விக்னேஸ்வரன் தனக்குப் பிந்திய அரசியல் பற்றியும் பேசியிருக்கிறார். தூரநோக்கு செயற்திட்டம் ஒன்றை வகுக்கும்போது, அவரது மூப்பையும், கருத்தில் கொண்டு தான் ஆக வேண்டும்.
அவ்வாறான நிலையில், விக்னேஸ்வரனுக்குப் பிந்திய அரசியல் தலைமைத்துவம் பற்றிய கேள்விகளுக்கு, தமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகிகள் மட்டம் போதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது என்று கருத முடியாது.
தமிழ் மக்கள் கூட்டணியை பெரும் இலட்சியத்துடன் உருவாக்கியுள்ள விக்னேஸ்வரன், தமது கட்சியை வடக்கு – கிழக்கு முழுவதும் கொண்டு செல்லக் கூடியளவுக்கு பரந்துபட்ட ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதனைச் செய்யாமல், அவரால் தமிழ் மக்கள் கூட்டணியை ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியாக மாற்ற முடியாது.
தமிழ் மக்கள் கூட்டணி எடுத்த எடுப்பிலேயே பரந்துபட்ட நிர்வாக கட்டமைப்பை உருவாக்க முடியாது என்பது உண்மையே. விக்னேஸ்வரனே அரசியலுக்கு கத்துக்குட்டி தான். அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் மத்தியில், அரசியல் ஆளுமை அனுபவமற்றவர்களைக் கொண்ட ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க முனைந்திருப்பது எந்தளவுக்கு வெற்றியளிக்கக் கூடிய அணுகுமுறையாக இருக்கும் என்பது கேள்வி தான்.
பரந்துபட்ட ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதில் பெரும் சிரமங்கள் இருக்கின்றன. அதனால் தான், முதலாவது மத்திய செயற்குழுவையும், அதன் நிர்வாகிகளையும், அவரே நியமித்திருக்கிறார்.
அதாவது இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவருமே, விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்டவர்கள் தான். ஜனநாயக சூழல் இல்லாத – ஏகதலைமைத்துவம் ஒன்றில் தான் இத்தகைய அறிவிப்புகள் வெளியிடப்படும்.
கட்சியின் அடுத்த செயற்குழு, கட்சியின் நிர்வாக மட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படும் என்றும், கட்சி யாப்புக்கு இணங்க அது முன்னெடுக்கப்படும் என்றும் விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார். அது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கட்சியின் ஜனநாயகத் தன்மை பற்றி விக்னேஸ்வரன் எடுத்துக் கூறியிருக்கிறார். தன்னால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகம், தன்னை வெளியே போகச்சொன்னாலும் அதற்குத் தயார் என்றும் கூறியிருக்கிறார். அது ஒருபோதும் நடக்காது என்பது அவருக்குத் தெரியும்.
ஏனெனெ்றால் அது விக்னேஸ்வரன் என்ற ஆளுமையைச் சுற்றி மாத்திரமே உருவாக்கப்பட்டது. அந்த ஆளுமையில் வெற்றிடம் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பது அதன் நிர்வாகிகளுக்குத் தெரியும்.
அதுவல்ல ஜனநாயகம். கட்சியின் முழுக் கட்டமைப்பையும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றுவது தான் ஜனநாயகம். உட்கட்சி ஜனநாயகம் என்பது அரசியல்கட்சிகள் மத்தியில் அரிதான ஒன்று. அதனை தமிழ் மக்கள் கூட்டணியிலும் எதிர்பார்ப்பது மிகையான எதிர்பார்ப்பு தான்.
கட்சியின் நிர்வாகிகளுக்கு கடிவாளம் போடும் வகையில் விக்னேஸ்வரன். கூறியிருக்கும் ஆலோசனையே அதனை நிரூபிக்கிறது.
மத்திய குழுக் கூட்டம் நடந்த அன்று யாழ்ப்பாண நாளிதழ் ஒன்று விக்னேஸ்வரனின் கட்சியின் ஜனநாயகத்தன்மை பற்றி கேள்விகளை எழுப்பியிருந்தது. பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதனை விக்னேஸ்வரன் விசனத்துடன் வெளிப்படுத்தியிருந்தார்.
முன்னதாக, நிர்வாகிகள் மத்தியில் தனது உரையிலும், ஊடகங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
“அரசியல் தொடர்பில் ஊடகங்கள் மற்றும் ஏனையவர்களுடன் கருத்துக்களைப் பகிரும்போது மிகவும் அவதானமாக இருந்து கொள்ளுங்கள். கட்சிக்கு என்று உத்தியோகபூர்வ பேச்சாளர் ஒருவர் இருக்கிறார். அவர் மிகக் கவனமாக சிந்தித்துச் செயற்படக் கூடியவர்.
ஆதலால் கட்சி சார்ந்த கருத்துக்களை உங்கள் எண்ணப்படி பேசி சர்ச்சைகளில் சிக்குவதை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றேன். சில கேள்விகளுக்குப் பதில் நீங்கள் சொல்லியே ஆக வேண்டும் என்றில்லை. அவற்றிற்கான பதில்களைக் கட்சியின் தலைமைகள் கூற விடுவதில் தவறில்லை.
அரசியல் ரீதியாக நடத்தப்படும் சில ஊடகங்கள் எங்கள் மீது சேறு பூசக் காத்து நிற்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. எப்பொழுதும் அவதானமாக இருக்க நாங்கள் பழகிக் கொள்ள வேண்டும் ” என்று அவர் கூறியிருந்தார்.
கட்சி நிர்வாகிகளுக்கு அவ்வாறு ஆலோசனை கூறிய விக்னேஸ்வரன் அந்த உரையின் கடைசியில், தானே வில்லங்கமான கருத்தொன்றையும் முன்வைத்தார்.
“பண்டாரநாயக்க 1956ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிடியை அரசியலில் தளர்த்த, பல வகையானோரைத் தனக்கு ஆதரவாளர்கள் ஆக்கினார்.
கமக்காரர், மீனவர், ஆசிரியர், சுதேச வைத்தியர்கள் மற்றும் பௌத்த சங்கத்தினரைத் தம்முடன் இணைத்து வெற்றி வாகை சூடினார்.
நாம் மேற்கூறிய பதினொரு வகையானோரை எமது ஆதரவாளர்களாக ஆக்கியுள்ளோம். ஆகவே , எந்தத் தேர்தல் ஆனாலும் எமக்கு வெற்றி நிச்சயம்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதாவது, தமது வெற்றிக்கு முன்னுதாரணம் காட்டுவதற்கும், பண்டாரநாயக்கவைப் பயன்படுத்துகின்ற நிலையில் தான், விக்னேஸ்வரன் இருக்கிறார்.
அவருக்கு ஒரு தமிழ்த் தலைமை, ஒரு தமிழ்க் கட்சி கூடவா உதாரணத்துக்கு கிடைக்காமல் போனது? என்ற கேள்வியின் நியாயத்தன்மையை அவர் புரிந்து கொள்வார்.
வில்லங்கத்தை தாமே விதைத்து விட்டு, ஊடகங்களின் மீது பழிபோடுவதில், சுமந்திரன் மாத்திரமல்ல, விக்னேஸ்வரனும் அதற்குச் சளைத்தவரில்லைப் போலும்.