புதுச்சேரி: நீட்டில் மார்க் கம்மியாக வாங்கி விட்டேன். இனி நான் இருக்கக் கூடாது என்று எழுதி வைத்து விட்டு தூக்கில் தொங்கி விட்டார் விழுப்புரம் மோனிஷா. மொத்த குடும்பமும் கதறிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு ஒரு உயிர்க் கொல்லியாக வந்து போய்க் கொண்டிருக்கிறது. இது தொடர் கதையாகி வருவது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
இப்படியும் ஒரு மக்கள் விரோத கொடுமை ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறது என்று கொதிக்கும் அளவுக்கு நீட் கொடூரமானதாகி வருகிறது.
இந்த ஆண்டு நேற்று 2 மாணவிகளும், இன்று மோனிஷாவும் தற்கொலை செய்துள்ளனர். ஒட்டுமொத்த தமிழகமும் வேதனையில் மூழ்கியுள்ளது பிள்ளைகளைப் பறி கொடுத்த தாய் தகப்பன்களும், உற்றார் உறவினர்களும் கதறிக் கொண்டுள்ளனர்.
அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் உறவினர்கள் விழிக்கின்றனர்.
நேற்று நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைஷியா மற்றும் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ இருவரும் நேற்று தற்கொலை செய்து கொண்டனர்.
மோனிஷா மரணம்
இந்த இரண்டு சோகச் சம்பவங்களிலிருந்தும் மீள்வதற்குள், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் இன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி மோனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
18 வயது மாணவி
மரக்காணத்தை அடுத்த கூனிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (48). இவருக்கு 3 மகள்கள். மூத்த மகளான மோனிஷா (18), திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து 690 மதிப்பெண் எடுத்திருந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.
நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில் மோனிஷா 31 மதிப்பெண் பெற்றிருக்கிறார். அதன் காரணமாக நேற்று முழுவதும் கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ள அவர், இன்று தனது அறைக்குள் சென்று தனது துப்பட்டாவை மின் விசிறியில் மாற்றி தூக்கிட்டு உயிரிழந்திருந்தார் மோனிஷா.
தூக்கில் தொங்கினார்
உடனே அங்கு விரைந்து சென்ற மரக்காணம் போலீசார் மோனிஷாவின் உடலைக் கைப்பற்றி புதுச்சேரி கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஸாரி அப்பா
இது மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தனது அப்பாவிற்கு ஒரு சிறிய கடிதம் எழுதியுள்ளார். அந்ந கடிதத்தில், நீட் மார்க் கம்மி. நா இனி இருக்க கூடாது. சாகப் போரேன். சாரி அப்பா. என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
ஒரு சாதாரண மதிப்பெண்ணுக்காக விலை மதிப்பில்லாத உயிரை இப்படி அநியாயமாக துறக்கத் துணிந்த அந்த மகளுக்காக அத்தனை உறவுகளும் வேதனையில் மூழ்கியுள்ளன.