கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாக நிர்வாக அதிகாரமுள்ள பிரதேசசெயலகமாக இயங்க வைக்க இன்று முடிவெடுக்கப்பட்டது.
பிரதமர், தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் இன்று நடத்திய உயர்மட்ட சந்திப்புக்களையடுத்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை இது குறித்த அறிவிப்பை, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிக்கையாக வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு மாதத்திற்குள் அனைத்து நிர்வாக, சட்டரீதியான பணிகளையும் முடித்து, கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் இயங்க ஆரம்பிக்கும்.
இன்று பிரதமருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றது. உள்நாட்டலுவல்கள் அமைச்சரும் இதில் கலந்து கொண்டார்.
இதன்போது, கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த கூட்டமைப்பு வலியுறுத்தியது. பிரதமர் அதை ஏற்றுக்கொண்டார்.
முஸ்லிம் காங்கிரசுடனும் பேசி ஒரு முடிவை உடனே எடுக்கலாமென கூறி, அடுத்த சந்திப்பு இடம்பெற்றது.
பிரதமர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் மூடிய அறைக்குள் நடத்திய மந்திராலோசனையின் பின், உடனடியாக கல்முனையை தரமுயர்த்துவதென முடிவாகியது. இதற்கான முதற்கட்ட அறிவிப்பை இன்று உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிடும்.
அடுத்த இரண்டு மாதங்களிற்குள் கல்முனை முழுமையான- தனியான பிரதேசசெயலகமாக இயங்க ஆரம்பிக்கும்.
இன்றைய சந்திப்பில் இரா.சம்மந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், சீ.யோகேஸ்வரன், சாந்தி சிறிஸ்கந்தராசா, சிறிநேசன், கோடீஸ்வரன் உள்ளிட்ட எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.