கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமான 23ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் யாழ். மாணவ, மாணவியருக்கு 3 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
அத்துடன் போட்டியின் ஆரம்ப நாளான நேற்றைய தினம் 5 புதிய போட்டிச் சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவி என். தக்ஷிதா 3.20 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி சி. ஹெரினா (3.10 மீ.) வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலிலும் பங்குபற்றிய சி. ஹெரினா (1.50 மீ.) வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
18 வயதுக்குபட்ட பெண்களுக்கான 5,000 மீற்றர் வேகநடைப் போட்டியில் மீசாலை, வீரசிங்கம் மகா வித்தியாலய மாணவி ஆர். கௌஷிகா (31 நி. 30.80 செக.) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவி பி. தனுசங்கவி 2.90 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதே போட்டியில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி 2.80 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.
18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் 44.92 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் எஸ். மிதுன்ராஜ் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 10,000 மீற்றர் வெகநடைப் போட்டியில் யாழ். மெய்வல்லுநர் சங்கம் சார்பாகப் போட்டியிட்ட ஜே. சோபனா (1 ம. 17 நி. 26.12 செக்.) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இதேவேளை 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த கமல்ராஜ் இரோய் (7.36 மீ.) தங்கப் பதக்கதை வென்றெடுத்தார்.
புதிய போட்டிச் சாதனைகள்
முதல் நாள் போட்டியின்போது 5 புதிய சாதனைகள் அறுவரினால் நிலைநாட்டப்பட்டன. ஒரு போட்டியில் இருவர் ஒரே நேரப் பெறுதியைப் பதிவு செய்திருந்தனர்.
20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 10,000 மீ. வேக நடை
ஷஷிகலா டில்ஷானி (மாகந்தர ம.ம.வி.) 57 நி. 12.22 செக்.
வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல்
ருமேஷ் தரங்க (புனித பெதுருவானவர்) 49.92 மீ.
18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டெறிதல்
ஓவினி சந்த்ரசேகர (பிஷப்ஸ் கல்லூரி) 13.19 மீ.
18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல்
ஹிருஷ ஹஷேன் (புனித பேதுருவானவர்) 7.28 மீ.
16 வயதுக்குட்பட்ட 800 மீற்றர் ஓட்டம்
கவிந்து ருஷ்மிக்க (கண்டி லைசியம்), ரவிந்து சிராத் (புனித ஆசீர்வாதப்பர்)
இருவரும் 1 நி. 59.41 செக். இணை புதிய சாதனை