கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்­றுக்­கொண்டு காணாமல் ஆக்­கிய  சம்­பவம் தொடர்பில் ஆரம்பம் முதலே விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கும் சாட்­சி­யா­ளர்­க­ளுக்கும்  நிறை­வேற்று அதி­காரம் படைத்தோர் உள்­ளிட்­டோரால் பல்­வேறு இடை­யூ­றுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தாக சி.ஐ.டி. கோட்டை நீதிவான் ரங்க திஸா­நா­யக்­க­வுக்கு தெரி­வித்­தது.

எனினும்   இந்த பார­தூ­ர­மான குற்றச் செயலின் சந்­தேக நபர்­க­ளுக்கு பதவி உயர்­வு­களும் விஷேட வரப்­பி­ர­சா­தங்­களும் அந்த தரப்­பி­னரால் வழங்­கப்­பட்­ட­தா­கவும்  இந்த விவ­கா­ரத்தின் விசா­ரணை அதி­கா­ரி­யான சி.ஐ.டி. பொலிஸ் பரி­சோ­தகர்  நிசாந்த டி சில்வா நீதி­வா­னுக்கு அறி­வித்தார்.

 ஐந்து மாணவர் உள்­ளிட்ட 11 பேர் வெள்ளை வேனில் கடத்திக் காணாமல் ஆக்­கப்­பட்ட விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணை­களின் போது நீதி­மன்றில் பாதிக்­கப்­பட்ட தரப்பு சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்ன முன்­வைத்த வாதங்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே, விசா­ரணை அதி­கா­ரி­யான நிசாந்த சில்வா இதனை தெரி­வித்தார்.

 jrewஇது குறித்த வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட போது,  சட்ட மா அதிபர் சார்பில் 16 ஆவது சந்­தேக நப­ரான வசந்த கரன்­னா­கொ­டவை நீதி­மன்­றுக்கு வரு­மாறு அழைப்­பாணை விடுப்­பது தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கப்­படும் என எதிர்ப்­பார்க்­கப்­பட்ட போதும், அத்­தி­ணைக்­க­ளத்தின் சார்பில் எவரும் மன்றில் ஆஜ­ரா­க­வில்லை.

  பாதிக்­கப்ப்­டட  திறந்த நீதி­மன்றில் பின்­வ­ரு­மாறு தனது வாதங்­களை முன்­வைத்தார்.

‘ இவ்­வ­ழக்கின் 16 ஆவது சந்­தேக நபர் வசந்த கரன்­னா­கொ­டவைக் கைது செய்ய கீழ் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்த நிலையில்,  கரன்­ன­கொட தன்னை கைது செய்­வதை தடுக்­கு­மாறு உயர் நீதி­மன்றை அனு­கினார்.

அப்­போது உரிய விட­யங்­களை உயர் நீதி­மன்­ருக்கு அறி­வித்து கரன்­னா­கொ­டவைக் கைது செய்யும் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்­காத சட்ட மா அதிரப் திணைக்­களம், தற்­போது சி.ஐ.டி. அதி­கா­ரி­க­ளுக்கு நீதி­மன்றம் ஊடாக அழைப்­பானை கோரி கரன்­ன­எ­கா­டவை மன்­றுக்கு அழைக்­கு­மாறு கூறு­கின்­றனர்.

இந்த நாட்டில் சாதா­ரண ஒரு மனி­த­னுக்கு கொலை குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்டால், அவ­ருக்கு பிணைக் கூட கிடைக்­காது. எனினும் இங்கு கரன்­ன­கொ­ட­வுக்கு மேல் நீதி­மன்றில் குற்­றப்­பத்­தி­ரிகை  தாக்கல் செய்யும் வரைக் கைது செய்யக் கூட முடி­யாது.

இதன்­பி­றகு கொலை குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளாகும் ஒரு­வ­ருக்கு,  குற்றப் பத்­தி­ரிகை தாக்கல்  செய்­ய­பப்டும் வரை மேலும் ஓரிரு கொலை­களைச் செய்­து­கொண்டு வீட்டில் இருக்­கலாம்.

 சட்ட மா அதிபர் திணைக்­களம் இந்த சி.ஐ.டி. அதி­கா­ரி­க­ளையே அசெ­ள­க­ரி­யத்­துக்கு இவ்­வா­றான கோரிக்­கைகள் ஊடாக உட்­ப­டுத்­து­கின்­றது.

தேவை­யான போது தேவை­யான ஒரே நிலைப்­பாட்டில் இருக்­காமல் பின்னர் தமது குறை­களை மறைத்­துக்­கொள்ள  இவ்­வாறு செயற்­ப­டு­கின்­றனர்.’ என அச்­சலா  சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்ன வாதிட்டார்.

 இதன்­போது திறந்த மன்றில் பேசிய நீதிவான் ரங்க திசா­நா­யக்க,

‘ இது பந்தை மாற்றும் ஒரு நட­வ­டிக்கை.  உயர் நீதி­மன்றை மீறி தீர்­மானம் எடுக்க என்னால் முடி­யாது.  நான் ஒரு போதும் சட்ட விரோத  உத்­த­ர­வு­களை தரவும் மாட்டேன்.

தேவை­யான  போது தேவை­யான நிலைப்­பாட்டை எடுக்­காது ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் ஒவ்­வொரு நிலைப்­பாட்டில் இருந்தால் இவ்­வா­றான நிலை தான் ஏற்­படும்.  சட்ட ம அதிபர் திணைக்­க­ளத்­துக்கு இம்­மன்­றுக்கு வந்து கோரிக்கை முன்­வைக்க முடியும். அப்­போது நான்  அது தொடர்பில் ஆரா­யலாம். ” என தெரி­வித்தார்.

 இத­னை­ய­டுத்து சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்ன தொடர்ந்து தனது நிலைப்­பாட்­டினை தெளி­வு­ப­டுத்த ஆரம்­பித்தார்.

‘ இல்லை. இத்­த­னைக்கும் சட்ட மா அதிபர் சார்பில் எவரும் அவ்­வா­றான கோரிக்­கை­யுடன் மன்­றுக்கு வரப்­போ­வ­தில்லை.

அவர்­க­ளுக்கு இந்த முறைப்­பாடு மீது அவ்­வ­ளவு அக்­கறை இல்லை.  சந்­தேக நபர் ஒரு­வரை இந்த விவ­கா­ரத்தில் கைது செய்ய முற்­படும் போதும் அல்­லது இந்த விவ­கா­ரத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை கருத்தில் கொண்டும் அவர்கள் ஒரு போதும் செயற்­பட்­ட­தில்லை.

முறைப்­பாட்­டாளர் தரப்­புக்கு உரித்­தான விடயம் ஒன்றின் தெளிவைப் பெற அறி­வித்தல் விடுத்தே அவர்­களை நீதி­மன்­றுக்கு அழைக்க  வேண்­டி­யி­ருந்­தது.

 இந்த வழக்கில் தற்­போது இரு சாட்­சி­யா­ளர்கள் மர­ணித்தும் காணாமல் போயும் உள்­ளனர்.  ஒரு­வரின் மர­ணத்­துக்கு காரணம் நீரில் மூழ்­க­லாகும். கடற்­படை வீரர் ஒருவர் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்தார் என்­பதை சாதா­ர­ண­மாக எப்­படி எடுத்­துக்­கொள்­வது.,

இவ்­வ­ழக்கில் விஜ­ய­காந்தன் எனும் சாட்­சி­யாளர் தற்­போது காணாமல் போயுள்ளார்.  அந்த சாட்­சி­யாளர் இம்­மன்­றுக்கு அழைத்து வரப்ப்ட்டு அவ­ரது சாட்­சியம் மாற்­றப்­பட்டே கைதானோர் பிணையைப் பெற்­றுக்­கொன்­டனர்.

இன்று அவர் காணாமல்  போயுள்ளார். இது தான் சாட்­சி­யா­ளர்­களை வேட்­டை­யா­டு­வது. அதனால் இதனை உங்கள் கவ­னத்­துக்கு கொன்­டு­வ­ரு­கின்ரேன். உரிய நட­வ­டிக்­கை­களை எடுங்கள் ‘ என்றார்.

 இத­னை­ய­டுத்து சட்­டத்­த­ரணி அச்­சலா சென்­வி­ரத்ன முன்­வைத்த விட­யங்­க­ளுக்கு விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா பதி­ல­ளிக்கும் வித­மாக தெளி­வு­ப­டுத்­தினார்.

‘ கனம் நீதிவான் அவர்­களே,  உயி­ரி­ழந்­துள்ள சென­வி­ரத்ன எனும் சாட்­சி­யாளர் இவ்­வ­ழக்கில் மிக முக்­கி­ய­மான சாட்­சி­யாளர்.

அவ­ரது மரணம் தொடர்பில் நாம் தேடிப் பார்த்தோம். அது சந்­தே­கத்­துக்கு இட­மான மரணம் அல்ல. அவ­ரது மனை­வியின் வாக்கு மூலம், அரச சட்ட வைத்­திய அதி­க­ரையின் சாட்­சியம் ஊடாக அதனை நாம் உறுதி செய்தோம்.

 எனினும் சென­வி­ரத்ன,  சி.ஐ.டி.க்கு வாக்கு மூலம் வழங்­கிய பின்னர் இவ்­வ­ழக்கின் 2 ஆவது சந்­தேக நப­ரான அப்­போ­தைய கன்சைட் சித்­தி­ர­வதைக் கூட பொறுப்­பாளர் கொமாண்டர் ரண­சிங்க தொலை­பே­சியில் குறித்த சாட்­சி­யா­ளரை அச்­சு­றுத்­தி­யுள்ளார். அவ­ரையும் அவர் குடும்­பத்­தையும் கொலை செய்­வ­தாக மிரட்­டி­யுள்ளார். இது தொடர்பில் சென­வி­ரத்­னவின் மனைவி எமக்கு வாக்கு மூலம் அளித்­துள்ளார்.

 உண்­மையில் பாதிக்­கப்­பட்­டுள்ள இந்த அப்­பாவி பெற்­றோர்­களின்  பொறுமை கார­ண­மா­கவே இம்­மன்றில் எந்த பிரச்­சி­னையும் ஏற்­ப­டாமல் விசா­ர­ணைகள் இவ்­வ­ளவு வரு­டங்­க­ளா­கவும் நடக்­கின்­றன. இதுவே   இம்­மன்றின் சட்­டத்­த­ரணி ஒரு­வரின் பிள்­ளைக்கோ வேறு ஒரு­வரின் பிள்­ளைக்கோ இந்த கொடுமை நேர்ந்­தி­ருந்தால் நிலைமை மாற்­ற­மாக இருந்­தி­ருக்கும்.

 வயி­று­களை வெட்டி, குடல்­களை வெளியே எடுத்து கட­லுக்குள் சட­லங்­களை மூழ்­க­டித்து கொல்­வ­தென்­பது இல­கு­வான குற்­ற­மாக எடுத்­துக்­கொள்ள முடி­யா­தது.

எமக்கு இந்த விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது முதல்   செயற்­பட விட­வில்லை. நிறை­வேற்று அதி­காரம் உள்­ள­வர்கள் முதல் இடை­யூறு செய்­தனர்.  தற்­போதும் இடை­யூறு ஏற்­ப­டுத்­து­கின்­றனர்.

சந்­தேக நபர்­க­ளுக்கு வரப்­பி­ர­சாதம், பதவி உயர்வு கொடுக்கும் நிலையில், விசா­ர­ணை­யா­ளர்­க­ளான எம்மையும் சாட்சியாளர்களையும் அச்சுறுத்துகின்றனர்.

 அத்துடன் கடத்தப்பட்டவ்ர்களில் அடங்கும் ஜோன் ரீட்டை கடத்தும் போது சேர்த்து எடுத்து செல்லப்பட்டிருந்த வேனையும் கடற்படையினர் பயன்படுத்திய நிலையில் மீட்டு அதனையும் இம்மன்றில் ஒப்படைக்கின்றோம்’ என தெரிவித்தார்.

இதனையடுத்து  சாட்சியாளர்கள் தொடர்பில் விஷேட கவனமெடுத்த நீதிவான்’ அனைத்து சாட்சியாளர்கள் தொடர்பிலும் அவதானமாக இருங்கள்.

அவர்களுக்கு ஏதும் ஒரு அச்சுறுத்தல், அழுத்தம் ஏற்படுமாக இருப்பின் அது தொடர்பில் உடனடியாக நீதிமன்ருக்கு அறிவித்து தேவையான நடவடிக்கையை உடன் எடுங்கள்’ என சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார். வழக்கை எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.