இலங்கை பாதுகாப்பு படைகளின் பொறுப்பு தலைமை அதிகாரியாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் நேற்றைய தினம் வழங்கப்பட்டதுடன், அவர் இன்று முதல் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிடிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய எட்மிரல் ரவீந்திர குணவர்தன ஓய்வு பெற்ற நிலையிலேயே ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ராணுவ தளபதி பதவிக்கு மேலதிகமாக, லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியாகவும் கடமையாற்றவுள்ளார்.
ராணுவ தளபதியாக நியமனம்
இலங்கையின் 23ஆவது ராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
கெடெட் அதிகாரியாக 1984ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் இணைந்துக் கொண்ட ஷவேந்திர சில்வா, ராணுவ தளபதி பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் ராணுவ பணிக்குழாம் பிரதானியாக கடமையாற்றியிருந்தார்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஷவேந்திர சில்வா, இலங்கை ராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவின் தளபதியாக கடமையாற்றியிருந்தார்.
ஷவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டுக்கள்
இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள், ஷவேந்திர சில்வா மீதும் சுமத்தப்பட்டிருந்தன.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த பலர் சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறியே மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களை கொலை செய்யுமாறு இறுதிக் கட்ட யுத்தத்தில் ஈடுபட்டிருந்த 58ஆவது படைப் பிரிவின் தளபதி ஷவேந்திர சில்வாவிற்கு, பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவிட்டிருந்ததாகவும் அப்போது தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த சம்பவங்கள் தொடர்பில் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது அமெரிக்க நீதிமன்றத்தில் 2011ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும், தன்மீதான குற்றச்சாட்டுக்களை ஷவேந்திர சில்வா தொடர்ச்சியாக மறுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
ஷவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அம்னெஸ்ட்டி இன்டர்நெஷனல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அப்போது தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.