ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்கு செல்லும்போது ஆடு வெட்டப்படும் இடத்திற்கு செல்வதுபோல் உணர்கிறேன் என்று 28 வயதேயாகும் அமெரிக்க பெண் டாக்டர் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் டாக்டர்களுக்கான பாதுகாப்பு உபகரணம் தட்டுப்பாடு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் சீரழிவை சந்தித்து வருகின்றன. உலகம் முழுவதும் 10 லட்சத்து 33 ஆயிரத்து 478 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 54 ஆயிரத்து 369 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 175 பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 59 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. என்ன செய்வதென்றே தெரியாமல் சுகாதாரத்துறை தத்தளித்து வருகிறது. இதற்கிடையே மருத்துவர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. இதனால் டாக்டர்கள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ப்ரோன்க்ஸ் என்ற இடத்தில் உள்ள மான்டிஃபியோர் மருத்துவ மையத்தில் வேலைப்பார்க்கும் 28 வயதேயான பெண் டாக்டர் லாரா உய்க் என்பவர் மருத்துவர்களையும், நோயாளிகளையும் காப்பாற்றுவது கடினமான செயலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்கு செல்லும்போது ஆடு பலிகொடுக்கும் இடத்திற்கு செல்வது போல் உணர்கிறேன் என்ற தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் டாக்டர் கூறுகையில் ‘‘ஒவ்வொரு நாளும் நான் வேலைக்கு செல்லும்போது, ஆடு பலிகொடுப்பதற்காக செல்லுவது போன்று உணர்கிறேன். எனக்கு 28 வயதாகிறது. இந்த கொடூர தொற்றில் இருந்து தப்பிக்க முடியாமல் போய்விடலாம் என்று நாங்கள் பயப்படுகிறோம். இருந்தாலும் இதுவரை எங்களுடைய மக்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவமனைக்கு வந்து செல்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
அவருடன் வேலைப்பார்க்கும் நர்ஸ் பென்னி மேத்யூ கூறுகையில் ‘‘இந்த நோயை எங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு பரப்பிக் கொண்டிருக்கிறோம். இந்த மருத்துவமனையில் இருந்து நாங்கள் சமூகத்திற்கு நோயை பரப்பிக் கொண்டிருக்கிறோம்’’ எனக் கவலையுடன் தெரிவித்தார்.