இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 10,730 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதுவரை அங்கு நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.

இலங்கையில் கடந்த மாதம் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 வரையான காலப் பகுதி வரை 151 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் 24 பேர் பூரண குணமடைந்து சிகிச்சைக்கு பின்னர் வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில், 125 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 250 பேர் மருத்துவமனைகளில் இருக்கின்றனர்.

சோதனைகளை விரிவுப்படுத்த நடவடிக்கை

கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணும் வகையிலான பரிசோதனைகளை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் ஊடாக நோய் தொற்றுவதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என கோவிட் 19 கட்டுப்பாட்டு செயலணி தெரிவிக்கின்றது.

_111612034_8f52af9c-3764-4d10-8a22-848cf2dcbbd8இதன்படி, தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கி பழகியவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கு முன்னர் பி.சி.ஆர் பரிசோதனையின் ஊடாக அதனை கண்டறிந்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செயலணி குறிப்பிடுகின்றது.

நாளாந்தம் நடத்தப்படுகின்ற பரிசோதனைகளை 1500 வரை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

சட்டத்தை மீறியோர் கைது

இந்நிலையில், இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 10,730 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கடந்த 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி அதிகாலை 6 மணி வரையான காலம் வரை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் ஊடாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

அதுமாத்திரமன்றி, குறித்த காலப் பகுதியில் 2,657 வாகனங்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.

இன்று அதிகாலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1,264 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதி அளிக்கப்பட்டவர்களை தவிர வேறு எவரும் வீதிகளில் நடமாடுவதற்கு அரசாங்கம் முழுமையாக தடைவிதித்துள்ளது.

துப்பாக்கி பிரயோகம்

போலீஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்த காரொன்றின் மீது போலீஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.

எகொடவுயன பகுதியில் போலீஸ் சோதனை சாவடியை கடந்து செல்ல முயற்சித்த காரொன்றின் மீதே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் பாணந்துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது நால்வர் காரில் பயணித்துள்ள அதேவேளை, ஒருவர் எந்தவித காயங்களும் இன்றி தப்பியுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த நால்வரையும் போலீஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கெண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply