தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று தொடர்ந்து நகர்ப்புறப் பகுதிகளில் தீவிரமடைந்துவரும் நிலையில், அதைத் தடுக்கும் விதமாக சில நகரங்களில் ஊரடங்கை மேலும் கடுமையாக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் விடுத்திருக்கும் அறிக்கையில், தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் ஊரடங்கை மேலும் கடுமையாக்கினால் மட்டுமே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியுமென அரசு கருதுவதால், குறிப்பிட்ட சில மாநகராட்சிப் பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளிலும் 26ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை – காலை முதல் 29ஆம் தேதி – புதன்கிழமை – மாலை 9 மணி வரை முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், திருப்பூர் பகுதிகளில் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி இரவு 9 மணி வரை ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்படும்.
இந்த காலகட்டத்தில் மருத்துவமனை போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகள் தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.
வங்கிகளில் 33 சதவீத பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஏடிஎம்கள் இயங்கும்.
உணவகங்களில் இருந்து தொலைபேசி மூலம் உணவுகளை ஆர்டர் செய்து பெறலாம்.
ஆதரவற்றோருக்காக இயங்கும் சமூக சமையல்கூடங்கள் தொடர்ந்து இயங்கும்.
கோயம்பேடு போன்ற மொத்த காய்கறிச் சந்தைகள் செயல்படும். காய்கறிகளை விற்க நடமாடும் காய்கறிக்கடைகள் அனுமதிக்கப்படும்.
மற்ற கடைகள், பணிகள் அனைத்தும் மூடப்படும். மற்ற மாநகராட்சிப் பகுதிகளில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த்தடுப்புப் பகுதிகளில் கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையாக்கப்படும் என்றும் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இரு நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக அடுத்த இரு நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 29 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதில் 14 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, ஏப்ரல் 25, 26 ஆகிய இரு நாட்களிலும் முழுமையான ஊரடங்கை கடைப்பிடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி, நான்கு நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள கடைகள், சந்தைகள், உணவகங்கள், பேக்கரிகள், இறைச்சிக் கடைகள் ஆகியவை முழுமையாக மூடப்படவிருக்கின்றன.
இந்த ஊரடங்கு காலத்தில் யாரும் வெளியில் வரக்கூடாது எனவும் மீறி வெளியில் வருபவர்கள் கைதுசெய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதற்குப் பிறகு திங்கட்கிழமை முதல் வீட்டை விட்டு வெளியில் வருபவர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டுமென்றும் தவறினால் அபராதம், கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் யாரும் பட்டங்களைப் பறக்கவிடக்கூடாது என்றும் சலூனிலோ, தனியாகவோ சென்று முடி திருத்தம் செய்யக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.