சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், அங்கு வசித்து வரும் தமிழ்ப்பெண்ணான கஸ்தூரி கோவிந்த சாமி ரத்னசாமி (வயது 40) என்பவர், கடந்த 7-ந் தேதியன்று அங்கு செம்பவாங் என்ற இடத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு சென்றார்.
அப்போது அவர் சரியானபடிக்கு முக கவசம் அணியாமல் சென்றிருந்தார். அவரை சரியாக முக கவசம் அணியுமாறு கூறிய வணிக வளாக ஊழியரை அவமரியாதையாக பேசினார்.
அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி, அவரை சரியாக முக கவசம் அணியச்செய்ய முயற்சித்தார். ஆனால் அந்தப் பெண்ணோ சரியாக முக கவசம் அணிந்து கொள்ள மறுத்ததுடன், அவரையும் அவமதிக்கும் வகையில் பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே அந்த பெண் மீது வணிக வளாக ஊழியர்கள், போலீசில் புகார் செய்தனர். அதை தொடர்ந்து அங்கு போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
அந்தப்பெண்ணிடம் அவர் யார் என்பது குறித்து விசாரித்து, அவரது அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டனர். அவரோ தனது அடையாள அட்டையை சேதப்படுத்த தொடங்கினார். ஒரு போலீஸ் அதிகாரி அவரை தடுத்தபோது, அவரை அந்தப் பெண் தாக்கினார்.
இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்தனர். மேலும் அவரை அங்குள்ள கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர்.
அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா என்பதை கண்டறிய ஏதுவாக அவரை மன நல இன்ஸ்டிடியூட்டில் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அவர் மீது 5 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பெண் கடந்த மாதம் 29-ந் தேதியன்றும், முக கவசம் அணியாமல் சென்றபோது இதே வணிக வளாகத்தில் சிக்கி 300 சிங்கப்பூர் டாலர் (சுமார் ரூ.15 ஆயிரம்) அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.