தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை ஊரடங்கு முடியும் வரை திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு இன்று (மே 15) உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளை மூட விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் தொடுத்திருந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை நான்கு வாரங்களுக்கு பிறகு நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கடந்த மே மாதம் 7ஆம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் மதுபானக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

எனவே டாஸ்மாக் கடைகளில் மத்திய அரசு பரிந்துரைத்துள்ள சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என உயர்நீதிமன்றம் கடைகளை மூட உத்தரவிட்டது.


“மது ஒரு அவசிய பொருள் அல்ல எனவே மத்திய அரசால் மே 17ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடியும் வரை கடைகளை மூட வேண்டும்” என உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.

தமிழகத்தில் மதுபானக் கடைகளில் சமூக இடைவெளி உட்பட பல்வேறு விதிமுறைகள் மீறப்படுகின்றன எனவே மதுபான கடைகளை மூட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் உட்பட பல்வேறு தரப்பினர் தொடுக்கப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதி மன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடுத்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் தொடுக்கபப்ட்ட மனுவின் விசாரணை இன்று உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. ஆனால் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு கால அவகாசம் கோரியுள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்த விசாரணை இன்றும், நாளையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply