காத்தான்குடி பிரதேசத்தில் பல வீடுடைப்பு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மற்றும் கொள்ளையிட்ட தங்க ஆபரணங்களை விற்க முயன்ற நிலையில், கைதுசெய்யப்பட்ட 3 பேரையும் நேற்று திங்கட்கிழமை (18) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் முதலாம் ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கடந்த 15 ஆம் திகதி இரவு முதியோர் இல்ல வீதி றிஸ்விநகர் பிரதேசத்திலுள்ள வீடு ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்து ஒரு இலச்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கடுமையான உத்தரவுக்கமைய காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.துமிந்த நளனசிறியின் ஆலோசனைக்கமைய பெரும்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்டர் கே.எல்.எம்.முஸ்தப்பா தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணையினை மேற்கொண்டுவந்தனர்.
இந்த நிலையில் தங்க வியாபாரியிடம் பெண் ஒருவர் தங்க ஆபரணங்களை விற்பதற்கு சென்றுள்ளதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிசார் அந்த பெண்ணிடம் மேற் கொண்ட விசாரணையில் தனது சகோதரனின் தங்க ஆபரணம் என தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த நபரை பொலிசார் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் பல வீடுடைப்பு கொள்ளையுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் கடந்த ஏப்ரல் மாதம் பதுரியா வீதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாகவும் கொள்ளையிட்ட ஆபரணங்களை கொள்ளையரின் சகோதரரி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இரு கொள்ளை சம்பவங்களில் களவாடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கி உருக்கி வந்த தங்கவியாபாரி உட்பட 3 பேரையும் கைதுசெய்ததுடன் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் உருக்கிய நிலையில் மீட் கப்பட்டுள்ளது.
இச் சம்பவங்களில் கைதுசெய்யப்பட் 3 பேரையும் நேற்று திங்கட்கிழமை (18) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களை எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.