யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஏற்பட்டுள்ள கடும் காற்றுடனான காலநிலை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை காலைவரை சுமார் 29 குடும்பங்களைச் சேர்ந்த 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என். சூரியராஜா தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வங்கக் கடலில் உருவாகிய அம்பன் புயலின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதனுடைய தாக்கம் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் காற்றின் தாக்கமானது கடுமையாக உணரப்பட்டுள்ளது.
இன்று காலை வரை கடும் காற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 99 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் கைதடி பகுதியில் பாடசாலை ஒன்றும் சேதமடைந்துள்ளது. மேலும் மயிலிட்டி பகுதியில் மரம் முறிந்து விழுந்து பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமற்போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கரைசேர்ந்துள்ளார். இந்த காலநிலையானது எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு எதிர்பார்ப்பதால் மக்கள் அவதானமாக செயற்படுமாறு இடர் முகாமைத்துவ பிரிவால் அறுவுறுத்தப்பட்டுனர்.
மேலும் சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள் 05 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலப்பகுதியில் காணப்படுகின்ற காற்றின் தாக்கத்தினை விட கடற்கரையை அண்டிய பகுதியில் காற்றின் வேகம் கூடுதலாக காணப்படுவதனால் குறிப்பாக கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும் இடர் முகாமைத்துவ பிரிவால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டள்ளதாக அவர் தெரிவித்தார்.