சிங்கம்பட்டி ஜமீனின் 31-வது வது பட்டம், கடைசி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வயது முதிர்வு காரணமாக காலமானர். அவருக்கு வயது 89.

யார் இந்த முருகதாஸ் தீர்த்தபதி?

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் உள்ளது சிங்கம்பட்டி ஜமீன். தமிழ்நாட்டில் இருந்த 72 பாளையங்களில் சிங்கம்பட்டியும் ஒன்று.

இங்கு 29.09.1931ல் திவான்பகதூர் சிவசுப்பிரமணிய தீர்த்தபதி ராஜாவுக்கு மகனாக பிறந்தார் ‘தென்னாட்டு புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெயதியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி’ என்ற டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தபதி.

சுதந்திர இந்தியாவில் 1952-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்தது. ஆனால், அதற்கு முன்பே தமது தந்தை சிவசுப்ரமணிய தீர்த்தபதி இறந்துவிட்டதால் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி ஜமீன்தார் ஆக்கப்பட்டார். அப்போது அவர் மைனர் என்பதால் சிங்கம்பட்டி பாளையத்தைத் தனது பராமரிப்பில் எடுத்துக் கொண்டது பிரிட்டீஷ் அரசு.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மலையில் இருந்து உருவாகிறது தாமிரபரணி ஆறு. இந்த ஆற்றில் தாமிரபரணி தீர்த்தம், வேததீர்த்தம், கல்யாண தீர்த்தம், பாண தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் இருப்பதாலும், சிங்கம்பட்டி ஜமீனுக்கு உட்பட்ட பகுதியாக இருந்த பொதிகை மலை இருந்ததாலும் தீர்த்தங்களுக்கு அதிபதி என்ற பொருளில் இந்த ஜமீன்தார்களுக்கு தீர்த்தபதி என்ற பட்டம் பெயரோடு சேர்ந்தது.

இரண்டு கைகளாலும் டென்னிஸ் விளையாடுவார்

முருகதாஸ் திர்த்தபதி இலங்கையில் உள்ள கண்டியில் பள்ளிப் படிப்பை முடித்தவர். வில்வித்தை, சிலம்பம், வர்மக் கலை போன்றவற்றை கற்றுத் தேர்ந்தவர். துல்லியமாக துப்பாக்கி சுடும் திறமை கொண்டவர்.

இவர் இரண்டு கைகளாலும் டென்னிஸ் விளையாடுவார் என்று சொல்லப்படுவதுண்டு. பாலே நடனம் தெரிந்தவர். இவருக்கு மகேஸ்வரன், சங்கராத் பஜன் என்ற மகன்களும், அபராஜிதா, சுபத்ரா, மௌலிகேஸ்வரி ஆகிய மகள்களும் உள்ளனர். இவர் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவர் மகன் சிங்கம்பட்டியில் விவசாயம் செய்து வருகிறார்.

ஜமீன்தாரி முறை ஒழிப்பின்போது ஜமீனின் பல ஏக்கர் சொத்துகள் அரசின் வசம் சென்றன. சில ஏக்கர் நிலங்கள் மட்டுமே இவரிடம் தற்போது உள்ளன. அதில் ஜமீனுக்கு உரிய காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளிட்ட 9 கோயில்கள் இருக்கின்றன.

சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழாவின் போது, சிங்கம்பட்டி ஜமீனுக்கு மரியாதை செய்யப்படும். அப்போது கோவிலில் நடைபெறும் அமாவாசை திருவிழா தர்பாரில் ஜமீன் உடையில் அரியணையில் அமர்ந்து மக்களுக்கு காட்சி அளிப்பார் முருகதாஸ் தீர்த்தபதி. அந்த இரண்டு நாட்கள் மட்டுமே இவர் ஜமீன் உடை அணிவார்.

“அடுத்த திருவிழாவுக்குள் நான் இறந்து விடுவேன்”

இவர் இப்படி கோயில் திருவிழாவில் ஜமீன் உடையில் பங்கேற்கும்போதெல்லாம் மழை பெய்யும் என்று நம்பிக்கை நிலவுகிறது. ஆனால், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற கோயில் விழாவில் இவர் பங்கேற்றபோது மழை பெய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த மக்களிடம் ‘நான் ஆண்டு திருவிழாவுக்குள் இறந்து விடுவேன்’ என அங்கிருந்த மக்களிடம் அவர் கூறியதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சிங்கம்பட்டி உறவின்முறையை சேர்ந்தவரும் பத்மனேரி கிராமத்தை சேர்ந்தவருமான சிவ ஆனந்த கிருஷ்ணன்.

அரண்மனையைப் பார்க்க மக்களுக்கு அனுமதி

சிங்கம்பட்டி அரண்மனை 5 ஏக்கரில் அமைந்துள்ளது. ஜமீன் சிங்கம்பட்டி அரண்மனையில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

அரண்மனை இன்னும் மிடுக்கோடு இருக்கிறது. அரண்மனையில் திவான் பகதூர் பயன்படுத்தி வந்த உடைகள், குறுநில மன்னர்கள் எழுதிய கடிதங்கள், அவர்கள் பயன்படுத்தி வந்த கத்தி, வாள், பல்லக்குகள், ஆங்கிலேய அரசு கொடுத்த பரிசுகள், பீங்கான் தட்டுகள், துப்பாக்கி, வெள்ளி வெற்றிலைப் பெட்டி, ரவிவர்மாவின் ஓவியம் ஆகியவற்றைப் பாதுகாத்து அருங்காட்சியகம் அமைத்துள்ளார் முருகதாஸ் தீர்த்தபதி.

சுவாமி விவேகானந்தர் வழங்கிய பனைமரத்தால் ஆன யானை சிலை ஒன்றும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அரண்மனையை சுற்றிப் பார்க்க அனைவருக்கும் அனுமதி உண்டு.

கட்டணம் கிடையாது. ஜாமீன் ஆட்சி நடந்தபோது அரண்மனையில் தளபதிகளாக, மந்திரிகளாக இருந்தவர்களின் வாரிசுகளே இப்போதும் அரண்மனை பணியாளர்களாக இருக்கிறார்கள்.

ராஜ விசுவாசத்தால் இவர்கள் அனைவருமே குறைவான ஊதியம் பெற்று இங்கு பணி செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. சிங்கம்பட்டி அரண்மனையின் பல பொக்கிஷங்கள் தமிழக அரசின் அருங்காட்சியகத் துறையால் சென்னையில் பாதுகாக்கப்படுகிறது.

ஜமீன்தார் காடுகள்

திருநெல்வேலி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள 8,500 ஏக்கர் பரப்பளவுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் Bombay Burmah Trading Corporation என்ற கம்பெனிக்கு 99 ஆண்டு குத்தகைக்கு கொடுத்தது சிங்கம்பட்டி ஜமீன். சிங்கம்பட்டி ஜமீனுக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள காடுகள் மீது முருகதாஸ் தீர்த்தபதி அதிகம் கவனம் செலுத்தி வந்தார்.

வன விலங்குகள், மரங்களைப் பாதுகாக்க அவர் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இதனால் தமிழக வனத்துறை 2002 முதல் 2005 வரையிலான மூன்று ஆண்டுகளும் கௌரவ வனப் பாதுகாவலர் (Honorary Wildlife Warden of Forests) என்ற கௌரவ பதவியை இவருக்கு வழங்கியது.

இன்றும் பொதிகை மலை, மாஞ்சோலை, தாமிரபரணியில் உள்ள இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள கோவில்களில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அரசு இவருக்கு மரியாதை தரும் வகையில் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும், ஆலோசனைகளும் கேட்கும் என்கிறார் சிவ ஆனந்த கிருஷ்ணன்.

ஆயுள் காப்பீட்டு முகவராக ஜமீன்தார்

ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி விவசாயம் செய்துவந்ததுடன், சில ஆண்டுகள் ஆயுள் காப்பீட்டு முகவராகவும் இருந்து வந்தார்.

அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு அரண்மனை பராமரிப்பு மற்றும் தனது தினசரி வாழ்கையை நடத்தி வந்தார்.

ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதிக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு இருந்தது. மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்ததால் நேற்று இரவு உயிரிழந்தார். இன்று திங்கள்கிழமை அவரது உடல் அடக்கம் நடக்கிறது.

Share.
Leave A Reply