குஜராத் மாநிலத்தில் சொகுசு விடுதியின் ஓட்டலுக்குள் சிங்கம் ஒன்று வந்துவிட்டு மீண்டும் வெளியே செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகத் மாவட்டத்தில் கிர்னார் மலையடிவாரத்தில் கிர் சிங்க சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில்தான் ஆசிய சிங்கங்களில் நிறைய அரிய வகை சிங்கங்கள் வாழ்ந்து வருகின்றன.
ஜூனாகத் நகரின் மையப்பகுதியில் ஓட்டலுடன் இணைந்த தனியார் சொகுசு விடுதி ஒன்று உள்ளது. அங்கு கடந்த திங்கட்கிழமை அதிகாலை சிங்கம் ஒன்று ஓட்டலுக்குள் கதவுகளை தாண்டி உள்ளே வந்துவிட்டு மீண்டும் வெளியே சென்றுள்ளது. அந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக வனவிலங்குகள் பாதை மாறியோ அல்லது பசிக்காகவோ ஊருக்குள் வருவது வாடிக்கையாக நடந்து வருவதுதான். ஆனால் மனிதர்களால் அந்த விலங்குகளுக்கு ஏதேனும் அசம்பாவிதங்களும், விலங்குகளால் மனிதர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதமும் நடைபெறுவதற்கு முன்பு வனத்துறை துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் கருத்து பரவி வருகிறது.